இலங்கையின் ஆடைத் துறை, நிலைத்தன்மைக்கான உலகளாவிய அளவுகோலாகத் தன்னை தொடர்ந்து நிலைநாட்டிக்கொண்டிருக்கிறது. முன்னணி உற்பத்தியாளர்களான Brandix, Teejay Lanka, Hirdaramani, Hayleys Fabric மற்றும் MAS Holdings ஆகிய நிறுவனங்கள், காலநிலை நடவடிக்கை, சுழற்சி பொருளாதாரம், நெறிமுறைசார் செயல்பாடுகள் மற்றும் சமூக அதிகாரமளிப்பு ஆகிய துறைகளில் கண்ட முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் அவற்றின் சமீபத்திய அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
காலநிலை நடவடிக்கை மற்றும் நிகர பூஜ்ஜிய தலைமை
நிகர பூஜ்ஜிய சான்றளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் முதல் அறிவியல் அடிப்படையிலான இலக்குகள் வரை, காலநிலை முனைப்பில் இலங்கையின் உற்பத்தியாளர்கள் முன்னணியில் உள்ளனர். Brandix நிறுவனம் கார்பன் வெளியேற்றத்தை 84% குறைத்ததோடு, ஐந்து தொழிற்சாலைகளிலும் நிகர பூஜ்ஜிய சான்றிதழைப் பெற்றுள்ளது.
அதேநேரம், Hirdaramani நிறுவனம் நிகர பூஜ்ஜிய இலக்குகளுக்காக SBTi ஒப்புதலைப் பெற்ற முதல் நிறுவனமாகத் திகழ்கிறது. MAS Holdings நிறுவனம், 2019 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, நோக்கம் 1 மற்றும் 2 கார்பன் வெளியேற்றங்களை 24.04% குறைத்துள்ளதாகவும், நிறுவனத்தின் ஆற்றலில் 39% புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. Teejay Lanka நிறுவனம், தனது மொத்த ஆற்றல் பயன்பாட்டில் 14% வரை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை நிலையாக விரிவுபடுத்தியுள்ளது. Hayleys Fabric நிறுவனம் தனது ‘GreenCatalyst – EST Roadmap 2030’ல் குறிப்பிட்டுள்ளது போல், “எங்கள் பயணம், தாக்கத்தைக் குறைப்பதில் மட்டுமல்ல, மதிப்புச் சங்கிலி முழுவதும் நேர்மறையான மாற்றத்திற்கான வினையூக்கியாக மாறுவதும் கூடம்”. Brandix நிறுவனம், 2030க்குள் தனது அனைத்து உலகளாவிய இடங்களிலும் நிகர பூஜ்ஜிய நிலையை அடையும் நோக்கத்தை அறிவித்த முதல் இலங்கை ஆடை உற்பத்தியாளர் ஆகும்.
சுழற்சி பொருளாதாரம் மற்றும் வளத் திறமை
நான்கு நிறுவனங்களும் கூட்டாக, ஆடை உற்பத்தி சூழலியல் தாக்கத்தை எவ்வாறு குறைக்கும் என்பதை மறுவரையறை செய்கின்றன. MAS நிறுவனம் தனது கழிவுகளில் 99%ஐ குப்பைக் கிடங்குகளில் சேராமல் திசை திருப்பியது. Teejay நிறுவனம் 3,900 தொன் பொருட்களை மீண்டும் பயன்படுத்தியது அல்லது மீள்சுழற்சி செய்தது.
Brandix நிறுவனம் 90% மீள்சுழற்சி மற்றும் மீட்பு விகிதத்தை எட்டியுள்ளது. Hirdaramani நிறுவனம், ‘Mihila Tex’ என்ற நவீன மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த துணி ஆலை மூலம் நிலைத்தன்மை வாய்ந்த துணிகளின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்து வருகிறது. இந்த முயற்சிகள் அனைத்தும் சுழற்சிப் பொருளாதாரம் மற்றும் திறமையான உற்பத்தி முறைகளை அடிப்படையாகக் கொண்ட ஆடைத் தொழிலின் எதிர்காலத்தை நோக்கி அறிகுறி புள்ளிகளாக உள்ளன.
UN Global Compact (UNGC) Sri Lankaஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலைத்தன்மை வாய்ந்த விநியோகச் சங்கிலி பணிக்குழுவின் ஆதரவளிக்கும் நிறுவனமாக Teejay Lanka PLC நியமிக்கப்பட்டுள்ளது. பொருட்களின் சுழற்சி நிலையை ஊக்குவிப்பதே இப்பணிக்குழுவின் நோக்கமாகும்.
மக்களுக்கும் சமூகங்களுக்கும் அதிகாரமளித்தல்
தொழிற்சாலைச் செயல்பாடுகளைத் தாண்டி, இத்தொழில் துறையின் சமூகத் தாக்கம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. Brandix நிறுவனம் 1,000க்கும் மேற்பட்ட புலமைப் பரிசில் உதவித் தொகைகளை வழங்கியது.
அதேநேரத்தில், அந்நிறுவனத்தில் பணியாற்றும் 47,000 ஊழியர்கள் இரத்ததானம் செய்ததோடு, 140 கண் மருத்துவ முகாம்களுக்கு ஆதரவு அளித்தனர். MAS நிறுவனம், 2024ஆம் ஆண்டில் சமூக முன்முயற்சிகள் மூலம் 21 லட்சம் வாய்ப்புகளை உருவாக்கியது மற்றும் நிர்வாக பதவிகளில் பெண்களின் பங்களிப்பை 26% ஆக உயர்த்தியது. Hirdaramani நிறுவனம், அதன் ‘Wonders of Well-being’ (WOW) திட்டத்தின் 10வது வருடத்தைக் கொண்டாடியது. இத்திட்டம், உலகம் முழுவதும் உள்ள 55,000க்கும் மேற்பட்ட அதன் பணியாளர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, நிறுவனப் பண்பாட்டில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வெற்றியானது, Harvard பல்கலைக்கழகத்தின் T.H. Chan School of Public Health கல்லூரியின் வழக்கு ஆய்வுகளில் இடம்பெற்று, உலகளாவிய அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. Teejay நிறுவனம் தனது பணியாளர் எண்ணிக்கையை 3,465 ஆக உயர்த்தியதோடு, பயிற்சி மற்றும் நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) முன்முயற்சிகளில் கணிசமாக முதலீடு செய்துள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாகம்
நான்கு நிறுவனங்களும் சுயாதீனமான தரவுறுதி மற்றும் உலகளாவிய தரநிலைகளுக்கான கடுமையான கடைப்பிடிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, வலுவான நிர்வாகப் பழக்கவழக்கங்களைப் பற்றியும் தெரிவித்துள்ளன. Teejay நிறுவனத்தின் ஒருங்கிணைந்த அறிக்கையானது, GRI (உலக அறிக்கையிடல் முன்முயற்சி) மற்றும் IFRS S1 மற்றும் S2 (நிதிசார் அறிக்கைகளுக்கான சர்வதேச தரநிர்ணயம்) விதிமுறைகளைப் பின்பற்றுகிறது.
இது SSRO (சமூக மற்றும் சுயாதீன மறு ஆய்வாளர்கள்), SASB (சர்வதேச பங்குச் சந்தை நிர்வாக வழிகாட்டுதல்) மற்றும் TCFD (காலநிலை சார் நிதி அறிவிப்புக் குழு) அறிக்கைகள் மூலம் இரட்டை கணிசத்தன்மை அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. ISO 14064-1:2018 தரநிர்ணயத்தின் கீழ் நோக்கம் 1-3 கார்பன் வெளியேற்றங்கள்ள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ZDHC (பூஜ்ஜிய விரும்பத்தகாத இரசாயன வெளியேற்றம்) மற்றும் Bluesign தரநிலைகள் மூலம் இரசாயன இணக்கத்தன்மையை உறுதி செய்கிறது.
MAS நிறுவனம் தனது தாக்க அறிக்கையையும் GRI தரநிலைகளுடன் இணைத்துள்ளது. மேலும், கார்பன் அறிவிப்புத் திட்டம் (Carbon Disclosure Project) கீழ் தகவல்களை வெளியிட்டு, SBTi, ZDHC, Bluesign மற்றும் பிற உலகளாவிய சான்றிதழ்கள் மற்றும் அங்கீகாரங்களால் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்கியுள்ளது. Brandix நிறுவனம், ஊழல் மற்றும் கூலி மீறல்கள் குறித்த தனது சகிப்புத்தன்மையற்றக் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியது. Hirdaramani நிறுவனம், ISO 14064-1 தரநிர்ணயத்திற்கு இணங்க நோக்கம் 1 மற்றும் நோக்கம் 2 கார்பன் வெளியேற்றங்கள் சுயாதீனமான தரவுறுதி மூலம் சரிபார்க்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
புத்தாக்கம் மற்றும் உலகளாவிய அங்கீகாரம்
நிலைத்தன்மை என்பது இணக்கத்திற்கு மட்டுமல்ல, புத்தாக்கத்திற்கும் உட்பட்டதாகும். Teejay நிறுவனம், 2024/25 நிதியாண்டில் நிலைத்தன்மை வாய்ந்த ஆடைகளில் கவனம் செலுத்தி, 410 புதிய பொருட்களை அங்கீகரித்தது. MAS நிறுவனத்தின் மொத்த வருவாயில் 40% நிலைத்தன்மை வாய்ந்த பொருட்களிலிருந்து வந்தது. Hirdaramani, நிறுவனம், ‘New Business Models for Green & Sustainable Chemistry’ என்ற வகையில், ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு நிறுவனம் (UNIDO) மற்றும் ஆஸ்திரிய காலநிலை நடவடிக்கை கூட்டாட்சி அமைச்சகம் (BMK) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட Global Chemical Leasing Award 2024ல் வெள்ளி விருதைப் பெற்றது. Soapberrieகளைப் பயன்படுத்தி ஒரு இயற்கை துணி சலவைத் தூளுக்கான அதன் புத்தாக்கத்திற்காக இந்த அங்கீகாரம் கிடைத்தது. ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் நிலைத்தன்மை சாதனைகளுக்காக தேசிய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று, ஒரு பொறுப்பான மூலதன மையமாக இலங்கையின் நற்பெயரை வலுப்படுத்தியுள்ளன.
தொழில்துறை ஒருங்கிணைந்த குரல்
இலங்கையின் ஆடைத் தொழில், அழகும் பொறுப்பும் இணைந்து நடக்கும் ஒரு எதிர்காலத்தை வடிவமைப்பதை இந்த மைல்கற்கள் ஒன்றாக இணைந்து விளக்குகின்றன.
“நிலைத்தன்மை என்பது ஒரு விருப்பத்தேர்வு அல்ல, அது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். இலங்கையின் ஆடை உற்பத்தியாளர்களாக, உலகத்தரமான ஆடைகளை உலகைப் பாதுகாக்கும் வகையிலும், மக்களை அதிகாரப்படுத்தும் வகையிலும், அனைவருக்கும் நீண்டகால மதிப்பை உருவாக்கும் வகையிலும் தயாரிக்க முடியும் என நிரூபித்து, முன்மாதிரியாக வழிநடத்தும் படிக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்,” என்று நிறுவனங்கள் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.