இலங்கையின் எதிர்கால வெற்றியாளர்களை ஊக்குவிப்பதற்கும் அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயல்படும் நாட்டின் முன்னணி தனியார் வங்கி மற்றும் 2025 ஆம் ஆண்டின் அதிக விருதுகளை வென்ற வங்கியுமான HNB PLC, Sri Lanka Aqquatic Sports Union (SLASU) ஏற்பாடு செய்யதுள்ள “HNB கனிஷ்ட பிரிவு நீச்சல் சாம்பியன்ஷிப் 2026” இன் பிரதான அனுசரணையாளராக தனது பங்களிப்பை அறிவித்துள்ளது. இந்த சாம்பியன்ஷிப் போட்டிகள் 2026 ஜனவரி 28 முதல் 31 வரை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கு நீச்சல் தடாக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான இளம் நீச்சல் வீரர்களை அவர்களின் முதல் உத்தியோகபூர்வ போட்டி அனுபவத்திற்காக ஒன்றிணைக்கவுள்ளது.
இந்த சாம்பியன்ஷிப் போட்டிகளை பார்வையாளர்கள் Dialog Television இன் ThePapare TV2 (அலைவரிசை 63) ஊடாக நேரலையில் கண்டு களிக்க முடியும். அத்துடன் ThePapare.com மற்றும் Dialog Play App ஆகியவற்றின் ஊடாகவும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இது வளர்ந்து வரும் இளம் வீரர்களின் திறமைகளை நாடு முழுவதும் உள்ளவர்கள் கண்டுகளிப்பதையும் அவர்களுக்கான அங்கீகாரத்தையும் உறுதி செய்கிறது.
இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான ஆரம்ப-நிலை நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த கனிஷ்ட வயதுப் பிரிவு சாம்பியன்ஷிப் போட்டிகள், தேசிய விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிப் பாதையின் அடிப்படையாக அமைகின்றன. பல பங்கேற்பாளர்களுக்கு இந்த நிகழ்வு ஒரு முக்கியமான மைல்கல்லாகும்; நீச்சல் தடாகத்தின் ஆரம்ப மேடையில் அவர்கள் எடுத்து வைக்கும் இந்த முதல் அடி, அவர்களை வயதுப் பிரிவு, இடைநிலை மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு இட்டுச் செல்வதற்கான களத்தை அமைத்துக் கொடுக்கிறது.
இந்தக் கூட்டுப்பங்காண்மை குறித்து HNB இன் சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டாண்மை தொடர்பாடல் பிரிவின் துணைத் தலைவர் உபுல் அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில், “விளையாட்டு என்பது இளைஞர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மற்றும் உணர்ச்சி ரீதியாகவும் தனித்துவமான சவால்களை வழங்கி, வெறும் போட்டிகளுக்கு அப்பால் அவர்களின் நற்பண்புகளைக் கட்டியெழுப்புகிறது.
HNB இல், இந்த மாற்றமானது அடிமட்ட நிலையிலிருந்தே ஆரம்பமாவதை நாங்கள் காண்கிறோம். இந்த கனிஷ்ட வயதுப் பிரிவு நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம், வாய்ப்புகள், சமமான அணுகல் மற்றும் அபிலாஷைகள் ஆகியவற்றின் மீது நாங்கள் முதலீடு செய்கிறோம். இலங்கையில் நீச்சல் விளையாட்டின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் இவ்வாறானதொரு தளத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் இலங்கை நீர் விளையாட்டு சங்கத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.” என தெரிவித்தார்.
இந்த அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், HNB இன் வர்த்தகத் தூதுவரும் இலங்கை தேசிய நீச்சல் அணியின் தலைவருமான கைல் அபேசிங்க, வளர்ந்து வரும் நீச்சல் வீரர்களுக்கு ஒரு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகத் தொடர்ந்து திகழ்கின்றார். 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ள அவர், ஒரு வீரரின் வளர்ச்சிப் பயணத்தில் ஆரம்பகாலப் போட்டி அனுபவம், வழிகாட்டல் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறார்.
2026 HNB கனிஷ்ட வயதுப் பிரிவு நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியின் ஊடாக, ஒவ்வொரு வெற்றியாளரும் தனது முதல் பாய்ச்சலிலிருந்தே (First dive) பயணத்தை ஆரம்பிக்கிறார்கள் என்ற நம்பிக்கையை HNB மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ‘வெல்வதற்காகவே இதில் இருக்கிறோம்’ (In it to win It) என்ற வாசகத்திற்கு இணங்க, நாட்டின் அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களை வலுப்படுத்துவதன் மூலம் இலங்கையின் எதிர்காலத்தை HNB முன்னின்று வழிநடத்துகிறது.



