கிரிக்கட்டில் சிகரம் தொட்டு லெஜன்ட்களாக வர்ணிக்கப்படும் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்களை முதற்தடவையாக இலங்கையில் ஒன்றாக களம் காணச் செய்யும் லெஜன்ட்ஸ் வெற்றிக்கிண்ண சுற்றுத்தொடர் மார்ச் எட்டாம் திகதி கண்டியில் உள்ள பள்ளேகல மைதானத்தில் ஆரம்பமாகிறது. இந்த சுற்றுத்தொடருக்குரிய போட்டிகள் தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். இந்த சுற்றுத்தொடர் கடந்த ஆண்டு டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டு சிறப்பாக நடந்து முடிந்தது. இம்முறை வெற்றிக் கிண்ணத்தை தமதாக்கிக் கொள்வதற்காக, நட்சத்திரங்களாகத் திகழ்;ந்து ஓய்வு பெற்ற கிரிக்கட் வீரர்கள் ஏழு அணிகளாக களமிறங்குகிறார்கள்.
இந்த சுற்றுத்தொடர் LCT T20 League Pvt Limited நிறுவனத்தால் ஸ்தாபிக்கப்பட்டது. இதில் பாகிஸ்தான், இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நட்சத்திர வீரர்கள் ஏழு அணிகளில் இடம்பெறுவார்கள். இந்தத் தகவல்கள் வீரர்களை அணிகளாக பிரித்து, வெற்றிக்கிண்ண சுற்றுத்தொடரின் ஜெர்சியை வெளியிடும் வைபவத்தில் வெளியிடப்பட்டன. கொழும்பு ஹில்ட்டன் ஹோட்டலில் வைபவம் நடைபெற்றது. முன்னாள் கிரிக்கட் வீரர் பர்வீஸ் மஹ்ரூப் அணிகளுக்கு வீரர்களை பிரித்தொதுக்கும் நடைமுறையை வழிநடத்தினார். இதில் சமிந்த வாஸ், திஸர பெரேரா ஆகியோரும் இணைந்திருந்தார்கள். ஏழு அணிகளாக பிரித்து ஒதுக்கப்பட்ட வீரர்களில் யுவராஜ் சிங், கிரிஸ் கெயில், சுரேஷ் ரெய்னா, பென் டங்க், ரொஸ் ரெயிலர், ஜொஹான் போத்தா, ஹர்பஜன் சிங், ஷஹீட் அப்ரிடி, கம்ரான் அக்மல், சனத் ஜயசூரிய, மிஸ்பா உல்-ஹக், அம்பாட்டி ராயுடு, ட்வெயின் ப்ராவோ, திஸர பெரேரா, இம்ரான் தாஹிர் ஆகியோரும் அடங்குகிறார்கள். இந்த வீரர்கள் ராஜஸ்தான் கிங்ஸ், டெல்லி டெயார் டெவில்ஸ், பஞ்சாப் ரோயல், கெண்டி வோரியர்ஸ், கொலம்போ லயன்ஸ், நிவ்யோர்க் சுப்பர் ஸ்டார் ஸ்ட்ரைக்கர்ஸ், டுபாய் ஜயன்ட்ஸ் ஆகிய அணிகளில் விளையாடுவார்கள்.
இந்நிகழ்வில் LCT யின் பணிப்பாளர் ஷிவயின் ஷர்மா செய்தியாளர்களிடம் பேசினார்: ‘கடந்த ஆண்டில் இடம்பெற்ற சுற்றுத்தொடர் மிக வெற்றிகரமாக அமைந்தது. இதற்கு முற்றுமுழுதாக அனுசரணை வழங்கிய விளையாட்டு செயலியான (gaming app) KhiladiX மூலம் அதன் இணையத்தளத்தை நாடியவர்களின் எண்ணிக்கை 62 சதவீதத்தால் அதிகரித்துடன், அந்த செயலி பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்டது. முன்னைய தொடரின் வெற்றியைக் கருதுகையில், 2ஆவது தடவையாக சுற்றுத்தொடரை நடத்த சந்தேகத்திற்கு இடமின்றி இலங்கையே சிறப்பான தெரிவாக அமைகிறது. இந்தியாவைப் போன்று இலங்கையிலும் கிரிக்கட் மீது அபார மோகம் உள்ளதுடன், தமது கிரிக்கட் நட்சத்திரங்களை ஆடுகளத்தில் காண ரசிகர்கள் விரும்புகிறார்கள். இந்த நட்சத்திரங்கள் ஆடுகளத்தில் ஆளுமை செலுத்தும் ஆற்றலுடன், இவர்கள் சிறப்பாக விளையாடுவதை ரசிகர்கள் காணச் செய்யும் நிகழ்ச்சிகளுள் இதுவும் ஒன்றாகும். இலங்கையானது 90 பந்துவீச்சுக்கள் என்ற குறுகிய வடிவத்திற்கு மிகவும் பொருத்தமான ஆடுகள நிலைமையைக் கொண்டிருக்கிறது.’