உணவு மேசையில் குடும்பங்களை ஒன்றிணைக்கும்‘TikTok அப்பா’

Share

Share

Share

Share

உணவு விமர்சனம் என்று வரும்போது உலகப் புகழ்பெற்ற கார்டன் ராம்ஸே போன்ற நடுவர்களை விட, நம் இலங்கைத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு எப்போதும் தங்களது தந்தையர்களின் கருத்துகளே முதன்மையானதாக இருக்கும். அவர்கள் தான் உண்மையான மற்றும் மிக முக்கியமான உணவு விமர்சகர்களாவர். ஒவ்வொரு குடும்பத்திலும் அப்படி ஒரு தந்தை இருப்பார். தட்டில் உள்ள உணவை முதல் வாய் சாப்பிடுவதற்கு முன், அமைதியாக உற்று நோக்கி ஆராய்வார். சாதம் சரியாக வெந்துள்ளதா, நண்டு கறிக்கு மசாலா போதுமானதாக இருக்கிறதா, இந்த உணவகத்திற்கு மீண்டும் வர வேண்டுமா என்றெல்லாம் துல்லியமாகக் கணிக்கக்கூடியவர். இவர்களது விமர்சனங்கள் இணையத்தில் பதிவேற்றப்படாவிட்டாலும், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை சாப்பாட்டு மேசையில் இருக்கும் அனைவரும் நன்கு அறிவர்.

நீங்கள் சமீபகாலமாக TikTok இல் உலா வருபவராக இருந்தால், அத்தகைய ஒரு தந்தையின் உணவு விமர்சனங்கள் ஆயிரக்கணக்கானோரின் மனங்களைக் கவர்ந்திருப்பதை அவதானித்திருக்கலாம். அவர்தான் ‘Dam.eats’ என்ற பெயரில் TikTok இல் வலம் வரும் தமித் விக்ரமசிங்க.

TikTok தளத்தில் பார்ப்பவர்கள் அனைவரையும் அன்போடு ‘புதா’ (மகன்/மகள்) என்று அழைத்து, அனைவரையும் ஒரு பெரிய உணவுப் பிரியர்களின் குடும்பமாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. இவரது உண்மையான உணவு விமர்சனங்கள், கலகலப்பான குடும்பப் பேச்சுக்கள் மற்றும் பார்ப்பவர்களைத் தன் குடும்ப உறுப்பினர் போல் உணர வைக்கும் அன்பு ஆகியவற்றால் குறுகிய காலத்தில் ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவரது வீடியோக்களின் பின்னணியில், அவரது மகள் தியாரா (Diarra), ‘அப்பா, முதலில் ஒரு சட்டை போடுங்கள்!’ என்று கூறுவதைக் கேட்கும்போதே, அங்கே ஒரு சுவையான உணவும், அதைவிடச் சிறந்ததொரு விமர்சனமும் வரப்போகிறது என்பதை ரசிகர்கள் உணர்ந்துகொள்வார்கள்.

ஆனால் இந்த தந்தையர் தினத்தில், பிரியாணி விமர்சனங்கள் மற்றும் உணவகப் பயணங்களைத் தாண்டி, அந்தத் திரைக்குப் பின்னால் இருக்கும் ஒரு பாசமுள்ள தந்தையை நாம் சந்திக்கவிருக்கிறோம். ஒரு சாதாரண குடும்பத்தின் கலகலப்பான சூழலை, இலங்கையின் மிகவும் விரும்பப்படும் இணையக் சமூகமாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. உலகம் முழுவதும் #FathersDay என்ற ஹேஷ்டேக் மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகள் பகிரப்பட்டு வரும் வேளையில், தமித்தின் இந்தத் தனித்துவமான கதை மிகவும் பொருத்தமான ஒன்றாக அமைகிறது.

TikTok இற்கு முந்தைய குடும்பப் பின்னணி
இணையத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், வெளியில் செல்லும் இடங்களில் ஆயிரக்கணக்கான ‘புதாக்கள்’ (மகன்ஃமகள்) அவரை அன்போடு அழைத்தாலும், சமூக ஊடகங்கள் என்பது தனது வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே என்பதை தமித் நினைவுபடுத்துகிறார். ‘சமூக ஊடகங்களுக்கு வருவதற்கு முன்பாக, நான் ஒரு சாதாரண தந்தை, ஒரு கணவன், மற்றும் கடின உழைப்பையும் எளிய விழுமியங்களையும் நம்பும் ஒரு மனிதன்’ என்று அவர் பகிர்ந்து கொள்கிறார்.

பல தந்தையர்களைப் போலவே, அவரது வாழ்க்கைப் பயணமும் வணிகச் சவால்கள், குடும்பப் பொறுப்புகள் மற்றும் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளால் வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். அத்தனையையும் தாண்டி, அவர் தனது வாழ்க்கையில் மிகவும் மதிக்கும் ஒரு பொறுப்பு ‘தந்தை’ என்ற பாத்திரமே ஆகும். இன்று உலகம் அவரை TikTok மூலம் அறிந்திருந்தாலும், இந்த கணக்கின் தொடக்கப்புள்ளி அவரது மகள்களிடமிருந்தே ஆரம்பித்தது. ‘எனக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள், ஆனால் தியாராதான் எனக்கு மிகவும் பிடித்தவள்,’ என்று அவர் சிரித்துக் கொண்டே கூறுகிறார்.

கேமராவுக்குப் பின்னால் இருக்கும் மகள்
வீடியோக்களில் தமித் முகமாகத் தெரிந்தாலும், இதன் பின்னாலுள்ள உண்மையான இயங்குசக்தி மகள் தியாரா தான். ‘நான் சாப்பிடுகிறேன், அவள் எடிட் செய்கிறாள்’ என்று தமித் சுருக்கமாகக் கூறுகிறார். உணவகங்களைத் தேர்ந்தெடுப்பது, படம்பிடிப்பது, எடிட்டிங் செய்வது என அனைத்தையும் தியாராவே கவனித்துக்கொள்கிறார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இணைந்து ‘பிங்க் சோல்ட்’ (Pink Salt) என்ற என்ற பக்கத்தை சமூக ஊடகங்களில் தொடங்கிய இவர்களுக்கு, உணவு என்பது வெறும் தொழில் அல்ல. அதுவொரு தீராக் காதல். சில நேரங்களில் மகள் கடைசியாகச் சாப்பிடுவதைக் கண்டு தமக்குக் கொஞ்சம் வருத்தமாக இருக்கும் என்றும், அதனால் அவளுக்கு ஒரு சில வாய்கள் சாப்பாடு எடுத்து வைப்பதாகவும் தமித் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். ‘வீடியோவில் பார்ப்பது போலவே நிஜ வாழ்விலும் நாங்கள் மிகவும் யதார்த்தமானவர்கள்’ என்கிறார் அவர்.

உணவு, குடும்பம் மற்றும் நிறைந்த சாப்பாட்டு மேசை
தமித் விக்ரமசிங்கவின் வீட்டில் எப்போதும் உணவுக்குத் தனி இடமுண்டு. சமையல் செய்வதில் மிகுந்த ஆர்வமுள்ள தமித், ஒவ்வொரு கிறிஸ்மஸ் பண்டிகைக்கும் தனது மனைவியின் விருப்பப்படி ‘பாகா நண்டுக்கறி’ (Paka crab curry) சமைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

மகள்கள் வளர்ந்து, தத்தமது வாழ்க்கையைத் தேடிச் சென்ற பின் வீடு அமைதியானது. இது பல பெற்றோர் எதிர்கொள்ளும் ஒரு உணர்வுப்பூர்வமான கட்டமாகும். ஆனால், வாரத்திற்கு இருமுறை செய்யும் இந்த உணவு விமர்சனங்கள், தமித்-மனைவி தம்பதியினருக்கு மீண்டும் ஒரு நிறைந்த, மகிழ்ச்சியான சாப்பாட்டு மேசையைத் தந்துள்ளது. இதனால்தான் இவர்களது வீடியோக்கள் பலருக்கும் தங்களது சொந்தக் குடும்ப உரையாடல்களை நினைவூட்டுகின்றன.

‘Dam.eats’ உருவான கதை
TikTok பயணம் திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட ஒன்றல்ல. தியாராவின் சிற்றுண்டிச்சாலையில் தமித் டோனட் சாப்பிட்ட காணொளிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் மற்றும் TikTok பக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. பின்னர் ‘சானாஸ்’ (Chana’s) உணவகத்தின் பிரியாணி விமர்சனம் இணையத்தில் வைரலானது. ‘நான் views> shares பற்றி யோசிக்கவில்லை. சாப்பிட்டேன், உண்மையான கருத்தைக் கூறினேன்’ என்கிறார் தமித். அந்த நேர்மையே இன்று ஒரு பெரும் சமூகத்தை உருவாக்கியுள்ளது.

ரசிகர்களைத் தாண்டிய ஒரு குடும்பம்
‘இது எண்களைப் பற்றியது அல்ல, நாங்கள் உருவாக்கிய பிணைப்பைப் பற்றியது’ என்று தமித் நெகிழ்கிறார். பலரும் இவர்களைத் தங்களது சொந்தக் குடும்பம் போல நினைப்பதாகவும், இவர்களின் வீடியோக்களைப் பார்த்துவிட்டுப் பல குடும்பங்கள் ஒன்றாக வெளியே சென்று உணவருந்தத் தொடங்கியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

வீட்டில் பிள்ளைகளை அழைக்கப் பயன்படுத்தும் ‘புத்தா’ என்ற வார்த்தையே இன்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் இணைக்கும் பாலமாக மாறியுள்ளது. ‘இப்போது இந்தச் சமூகத்தில் உள்ள அனைவரும் எனது பிள்ளைகளே’ என்கிறார் அவர்.

இந்தத் தந்தையர் தினத்தில், தந்தை என்ற பதவி தமக்கு சகிப்புத்தன்மை, அர்ப்பணிப்பு மற்றும் நிபந்தனையற்ற அன்பைக் கற்றுத் தந்துள்ளதாகக் கூறும் தமித், மகள்களிடம் இருந்தே வாழ்க்கையை எப்படிக் கொண்டாடுவது என்பதைக் கற்றுக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார்.

இறுதியாக அவர் தரும் செய்தி எளிமையானது. ‘வாழ்க்கை எவ்வளவு வேலைப்பலுவாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் நேரத்தை ஒதுக்குங்கள். ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள், பேசுங்கள், நினைவுகளை உருவாக்குங்கள். ஏனெனில், நீங்கள் எங்குச் செல்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, அதை யாருடன் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்பதே முக்கியம்’.

கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் புதிய...
உணவு மேசையில் குடும்பங்களை ஒன்றிணைக்கும்‘TikTok அப்பா’
Mahindra Ideal Finance කොළඹ ප්‍රධාන...
Xiaomi 17T அறிமுகத்துடன், Xiaomi இன்...
காலி நகரின் பிரம்மாண்டமான கொண்டாட்டங்களுக்கான புதிய...
அகமதாபாத் – கொழும்பு இடையே நேரடி...
Perituza engages Sri Lanka’s agency...
Prime Lands களுத்துறையின் முதலாவது பாதுகாப்பு...
அகமதாபாத் – கொழும்பு இடையே நேரடி...
Perituza engages Sri Lanka’s agency...
Prime Lands களுத்துறையின் முதலாவது பாதுகாப்பு...
First Capital සමාගම ප්‍රාග්ධන වෙළඳපොළ...