இலங்கை காப்புறுதி சங்கம் (IASL) தனது சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை மன்றம் மூலம் 16ஆவது NAFLIA மாநாட்டை அண்மையில் மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் வெற்றிகரமாக நடத்தியது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வானது, நாட்டின் ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களின் தொழில்முறை திறன்களை வளர்த்தெடுப்பதிலும், அங்கீகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது ஆயுள் காப்புறுதித் துறையின் தரத்தை உயர்த்துவதற்கும், சிறப்பை நிலைநிறுத்துவதற்குமான IASL-இன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.
இந்த ஆண்டின் மாநாடு “மாற்றத்தின் இயக்கிகள்: காப்பீட்டின் புதிய உலகில் வளர்ச்சியை முன்னெடுத்தல்” (Drivers of Change: Driving Growth in a New World of Insurance) என்ற கருப்பொருளில் நடைபெற்றது. தொழில்நுட்ப முன்னேற்றம், வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள், மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் சந்தை போக்குகளால் மாறிவரும் துறையில் ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களின் பங்கு குறித்து இந்நிகழ்வில் கவனம் செலுத்தப்பட்டது. அதேபோல, ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் மற்றும் சந்தை போக்குகள் ஆகியவற்றால் உருமாறும் துறையில் முகவர்கள் புத்தாக்கத்தை தழுவி, டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தி, வாடிக்கையாளர் மைய தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் (IRCSL) பிரதிநிதிகள், IASL உறுப்பினர்கள், முன்னணி காப்புறுதி நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், ஆலோசகர்கள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்கள் உட்பட 700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இம்மாநாடு புதிய கருத்துக்களை பகிர்ந்துகொள்ள, சவால்களை ஆராய மற்றும் இலங்கையில் ஆயுள் காப்புறுதியின் எதிர்காலத்தை ஒன்றிணைந்து உருவாக்க ஒரு பயனுள்ள தளமாக அமைந்தது.
அதுமாத்திரமின்றி, இந்நிகழ்வில் முதுநிலை முகாமைத்துவ நிறுவனத்தின் (PIM) பணிப்பாளரும், தலைவருமான கலாநிதி அசங்க ரணசிங்க ஆற்றிய முக்கிய உரையும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இடம்பிடித்தது. அவர் மாறிவரும் மக்கள்தொகை மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களால் இத்துறையில் உருவாகும் வாய்ப்புகள் குறித்து சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களைப் பகிர்ந்தார். இத்தகைய சூழலில் துறையானது வலுவான தலைமைத்துவம், வளர்ச்சி மற்றும் உருமாற்றத்தை கோருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மாநாட்டில் IRCSL இன் பணிப்பாளர் நாயகம் தமயந்தி பெர்னாண்டோ உரையாற்றுகையில், “ஆயுள் காப்புறுதி ஆலோசகர்கள் நிதி மீள்திறன் மற்றும் நம்பகத்தன்மையை உருவாக்குவதில் இன்றியமையாத பங்காளிகளாக உள்ளனர். NAFLIA போன்ற தளங்கள் சிறப்பை அங்கீகரிப்பதிலும், தொடர்ச்சியான கற்றலை ஊக்குவிப்பதிலும், துரிதமாக மாறிவரும் சூழலில் நிபுணர்கள் வெற்றிபெற தயார்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இவ்வாண்டிற்கான நிகழ்வை பொருத்தமான கருப்பொருளின் கீழ் ஒழுங்கமைத்ததற்காக IASL மற்றும் MSF அமைப்புகளைப் பாராட்டுகிறோம். இலங்கையில் காப்புறுதி பாதுகாப்பு இடைவெளியைக் குறைக்க மேலும் பல கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் IASL இன் தலைவர் லசித விமலரட்ன உரையாற்றும்போது, துறையின் எதிர்காலத்தை வழிநடத்துவதில் மீள்திறன், புத்தாக்கம் மற்றும் தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், “ஆயுள் காப்புறுதித் துறை பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது. இம்மாற்றத்தின் மையத்தில் நமது ஆலோசகர்கள் உள்ளனர். IASL-இல் நாங்கள் அவர்களுக்கு தொலைநோக்கு பார்வையுடனும் தலைமைத்துவத்துடனும் அதிகாரமளிப்பதை நம்புகிறோம். NAFLIA 2025 நிகழ்வானது நிலைபேறான வளர்ச்சியை முன்னெடுத்து, இலங்கையில் ஆயுள் காப்புறுதியின் மதிப்பை மறுவரையறை செய்யும் எதிர்கால நிபுணர்களை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை காட்டுகிறது.” என்று குறிப்பிட்டார்.
NAFLIA 2025 நிகழ்வின் முக்கிய கவர்ச்சியாக ஆயுள் காப்புறுதித் துறையில் சிறப்பான பங்களிப்பினை வழங்கியவர்களை கௌரவிக்கும் விருது விழா அமைந்தது. முக்கிய விருதாளர்களில், AIA நிறுவனத்தின் E. துவராகா தேசிய பிரிவில் சிறந்த வங்கிக் காப்புறுதி விற்பனை அதிகாரிக்கான தங்கப் பதக்கத்தை வென்றார். யூனியன் அஷூரன்ஸ் நிறுவனத்தின் தர்மராஜசிங்கன் கோகுலராமணன், தேசிய பிரிவில் சிறந்த வங்கிக் காப்புறுதி விற்பனை மேற்பார்வையாளர்/குழுத் தலைவருக்கான தங்கப் பதக்கத்தைப் பெற்றார். செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் S. தர்ஷன் தேசிய பிரிவில் சிறந்த கிளை முகாமையாளராக அங்கீகரிக்கப்பட்டு தங்கப் பதக்கத்தை வென்றார். அதே நிறுவனத்தின் R.P. எதிரிசிங்க தேசிய பிரிவில் சிறந்த மேற்பார்வையாளருக்கான தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
தேசிய அளவிலான சிறந்த ஆலோசகருக்கான தங்கப் பதக்கத்தை செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் A.S. ஹெட்டியாராச்சி மீண்டும் தன்வசப்படுத்தினார்.
இலங்கை காப்புறுதி சங்கத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை மன்றம் காப்புறுதி குறித்த பொதுமக்களின் ஈடுபாடு மற்றும் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. காப்புறுதி விழிப்புணர்வு மாத பிரச்சாரங்கள், NAFLIA மாநாடு போன்ற முக்கிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் நாடெங்கிலும் காப்புறுதியின் தெரிவுநிலையையும் புரிதலையும் உயர்த்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
NAFLIA 2025 இன் வெற்றி, ஆயுள் காப்புறுதித் துறையில் தலைமைத்துவத்தை வளர்ப்பதிலும், புத்தாக்கத்தை ஊக்குவிப்பதிலும், தொழில்முறை தரத்தை உயர்த்துவதிலும் IASL-இன் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது. காப்புறுதி துறை தொடர்ந்து மாறிவரும் நிலையில், NAFLIA போன்ற மன்றங்கள் இலங்கையின் காப்புறுதி நிபுணர்கள் முன்னேறுவதற்கு உறுதுணையாக இருக்கின்றன.