கொழும்பில் நடைபெற்ற விசேட மாநாட்டில், தனது சமூக நிலைத்தன்மையின் புதிய யுகத்தை பிரகடனப்படுத்தியுள்ள இலங்கையின் ஆடைத் துறை

Share

Share

Share

Share

இலங்கையின் ஆடைத் துறையானது நெறிமுறை சார்ந்த உற்பத்தியில் தனக்குள்ள தலைமைத்துவத்தை, 2026 ஜனவரி 13 அன்று கொழும்பில் நடைபெற்ற உயர்மட்ட மாநாடொன்றில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டின் ஏற்றுமதிப் போட்டித்திறனை சமூக நிலைத்தன்மை எவ்வாறு வலுப்படுத்தும் என்பதை ஆராய்வதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச நிபுணர்கள் இம்மாநாட்டில் ஒன்றுகூடினர். தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், WRAP (Worldwide Responsible Accredited Production), Intertek (சர்வதேச உறுதிப்படுத்தல், ஆய்வு மற்றும் சான்றிதழ் நிறுவனம்), இலங்கையின் ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF), முன்னணி ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் நிலைத்தன்மை தொடர்பான நிபுணர்கள் கலந்துகொண்டனர். உலகளாவிய சந்தையில் அதிகரித்துவரும் புதிய விதிமுறைகளுக்கு மத்தியில், இலங்கை எவ்வாறு தன்னை ஒரு வலுவான நிலையில் நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய WRAP அமைப்பின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான Avedis Seferian, நிலைத்தன்மை குறித்த உலகளாவிய வேகம் மற்றும் கடந்த பல தசாப்தங்களாக இலங்கை கட்டியெழுப்பியுள்ள போட்டித்தன்மை வாய்ந்த அனுகூலங்கள் குறித்து தனது முக்கிய உரையை ஆற்றினார். அவரது செய்தி மிகத் தெளிவாக இருந்தது: உலகின் மிகப்பெரிய சந்தைகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், கட்டாய மனித உரிமைகள் உரிய ஆய்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் மூலத்தைக் கண்டறியும் தன்மை ஆகியவற்றை நோக்கி மிக வேகமாக நகர்ந்து வருகின்றன. ஏற்றுமதியாளர்களைப் பொறுத்தவரை, நிலைத்தன்மை என்பது இனி ஒரு தெரிவல்ல; அது சந்தைக்கான பிரவேசத்தைப் பெறுவதற்கு மிக முக்கியமான ஒரு காரணியாகும்.

“உலகளாவிய வர்த்தகத்தின் எதிர்காலம் நிலைத்தன்மையினால் வடிவமைக்கப்படுகிறது,” என செஃபெரியன் குறிப்பிட்டார். “வாடிக்கையாளர், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் முதலீட்டாளர்கள் என அனைவரும் பொறுப்பான உற்பத்தியைக் கோருவதில் ஒரே நேர்க்கோட்டில் உள்ளனர். இலங்கை இதற்கான ஒரு பலமான அடித்தளத்தை ஏற்கனவே கட்டியெழுப்பியுள்ளது. இந்த அர்ப்பணிப்பை மேலும் ஆழப்படுத்துவதும், அதனை ஒவ்வொரு வணிக முடிவிலும் உள்வாங்குவதுமே இனிவரும் காலத்திற்கான பாதையாகும்.”

2003 ஆம் ஆண்டிலேயே இலங்கை தனது முதல் WRAP சான்றிதழ் பெற்ற தொழிற்சாலையை உருவாக்கியதை அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், ‘Garments Without Guilt’ போன்ற செயற்திட்டங்களை இலங்கை ஆரம்பகாலத்திலேயே ஏற்றுக்கொண்டமையானது, இன்றைய விதிமுறைசார் இணக்கப்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சூழலுக்கு நாட்டைச் சிறப்பாகத் தயார்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலிலும் விளக்கக்காட்சிகளிலும் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள இந்த வரலாற்றுப் பின்னணியானது, தற்போது ஒரு மூலோபாய பொருளாதார வாய்ப்பாக உருவெடுத்துள்ளது.

முக்கிய உரையைத் தொடர்ந்து உரையாற்றிய JAAFஇன் பொதுச் செயலாளர் Yohan Lawrence, நிலைத்தன்மை என்பது ஒரு சந்தைப்படுத்தல் கருவி என்ற நிலையிலிருந்து மாறி, பொருளாதார மீள்திறனைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாக எவ்வாறு உருவெடுத்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார். நிலைத்தன்மை ஊடாக வணிக மற்றும் பொருளாதார தாக்கம் குறித்த தனது அமர்வின் போது பகிர்ந்து கொள்ளப்பட்ட நுண்ணறிவுகளின் அடிப்படையில் கருத்துத் தெரிவித்த Lawrence, இலங்கை நிலைத்தன்மையை ஒரு ஒழுங்குமுறைத் தடையாக கருதாமல், நீண்டகாலப் போட்டித்தன்மையை பாதுகாக்கும் ஒரு அரணாக கருத வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“நிலைத்தன்மை என்பது ஒரு செலவு அல்ல, அது ஒரு செலாவணி,” என்று லோரன்ஸ் அழுத்தமாகக் குறிப்பிட்டார். “தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இவ்வுலகில், மூலத்தைக் கண்டறியும் தன்மையும் மற்றும் சமூக இணக்கப்பாடும் யார் வெற்றி பெறுவார்கள், யார் பின் தங்குவார்கள் என்பதைத் தீர்மானிக்கும். அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பொறுப்பான கொள்முதல் குறித்த எதிர்பார்ப்புகளைக் கடுமையானதாக்கி வருகின்றன. நாம் ஏற்கனவே சிறப்பாகச் செய்துவரும் விடயங்களை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை மிகவும் சாதகமான நிலையில் உள்ளது. நமது தொழில்துறையின் எதிர்காலம் என்பது, நிலைத்தன்மையை அனைத்து மட்டத்திலுமான முடிவெடுக்கும் செயல்முறைகளில் உள்வாங்குவதிலேயே தங்கியுள்ளது,” என்றும் அவர் கூறினார்.

தரவுகளின் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தையும் இந்த மாநாடு வலியுறுத்தியது. குறிப்பாக, உலகளாவிய வர்த்தக நாமங்கள், மூலப்பொருள் முதல் முடிக்கப்பட்ட தயாரிப்பு வரை சரிபார்க்கக்கூடிய, நிகழ்நேர மூலத்தைக் கண்டறியும் தன்மையை எதிர்பார்க்கின்றன. மூலத்தைக் கண்டறியும் தன்மையை “நம்பிக்கையின் செலாவணி” என்று லோரன்ஸ் வர்ணித்தார். WRAP தரவுகள் போன்ற சமூகத் தணிக்கை முடிவுகளை, வெளிப்படையான விநியோகச் சங்கிலித் தளங்களுடன் ஒருங்கிணைக்கும் டிஜிட்டல் அமைப்புகளுக்கான கேள்வி, வாங்குபவர்களிடையே அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

செஃபெரியன், லோரன்ஸ், MAS Holdings நிறுவனத்தின் நிலையான வணிகப் பிரிவின் தலைவர் அஷாந்தி பெரேரா மற்றும் Star Garments நிறுவனத்தின் செனுர தர்மதாச ஆகியோர் பங்கேற்ற குழு விவாதம் ஒன்று நடைபெற்றது. Courtaulds Group நிறுவனத்தின் குழும ESG பிரிவின் உதவி பொது முகாமையாளர் சுமித் சிரிவர்தன இதனை நெறிப்படுத்தினார். வளர்ந்து வரும் ‘உரிய ஆய்வு’ சட்டங்களுக்கு இணங்குவதற்கும், இடர் முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கும், உலகளாவிய கொள்வனவாளர்களிடையே நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் WRAP சான்றிதழ் எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து இதில் ஆராயப்பட்டது. கோர்டால்ட்ஸ் குழுமம் மற்றும் WRAP சான்றிதழ் பெற்ற மற்றுமொரு தொழிற்சாலையினால் முன்வைக்கப்பட்ட உண்மைநிலை ஆய்வுகள், கட்டமைக்கப்பட்ட நிர்வாகக் கட்டமைப்புகள் எவ்வாறு தொழிலாளர் நலனை மேம்படுத்தவும், செயல்பாட்டு இடர்களைக் குறைக்கவும் மற்றும் நிலையான நிதியுதவிகளை ஈர்க்கவும் முடியும் என்பதை உறுதிப்படுத்தின.

நிகழ்வின் எதிர்கால நோக்குமிக்க தொனியை மேலும் வலுப்படுத்தும் வகையில், கருத்து தெரிவித்த செஃபெரியன், “மாறிவரும் உலகளாவிய சூழலில் இலங்கைக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பு உள்ளது. வலுவான, வெளிப்படையான மற்றும் மக்களை மையமாகக் கொண்ட நிலைத்தன்மை அமைப்புகளில் ஆரம்பத்திலேயே முதலீடு செய்யும் நாடுகளே செழிப்படையும். இதனை அங்கீகரிக்கும் நாடுகளுக்கு எதிர்காலம் பிரகாசமாக உள்ளது, மேலும் இலங்கை ஏற்கனவே பல போட்டி நாடுகளை விட முன்னிலையில் உள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிகளவிலான பங்கேற்பாளர்களுடன் இடம்பெற்ற ஒன்றுகூடலுடன் அன்றைய மதிய நேர அமர்வுகள் நிறைவடைந்த வேளையில், ஒரு செய்தி மிக வலுவாகப் பதிவானது: தரவு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பான வணிக நடைமுறைகள் ஆகியவை சந்தை பிரவேசத்தை தீர்மானிக்கும் காரணியாக மாறிவரும் இவ்வுலகில், இலங்கையின் ஆடைத் துறையானது ஏனைய நாடுகளுடன் வெறும் போட்டியாளராக மட்டும் இருக்கவில்லை; மாறாக அது உலகளாவிய தரநிலைகளையே வடிவமைத்துக்கொண்டிருக்கிறது.

உலகளாவிய விதிமுறைகள் கடுமையானதாகி வருவதுடன், கொள்வனவாளர்கள் சரிபார்க்கப்பட்ட நெறிமுறை சார்ந்த கொள்முதலை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், சமூக நிலைத்தன்மை மீதான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பு, எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு வலுவான தளத்தை வழங்குகிறது. செஃபெரியன் மற்றும் லோரன்ஸ் ஆகிய இருவரும் வலியுறுத்தியது போல, இந்தத் தொழில்துறையின் அடுத்த அத்தியாயம் ஒரு கொள்கையினால் வரையறுக்கப்படும்: நிலைத்தன்மை என்பது இனி ஒரு மேலதிக விடயமல்ல; அதுவே ஒரு மூலோபாயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

අටාලේ ශ්‍රී ලංකාවේ විශාලතම රබර්...
2025 மூன்றாம் காலாண்டில் 20 கோடிக்கும்...
கொழும்பில் நடைபெற்ற விசேட மாநாட்டில், தனது...
CINEC Celebrates 1,800 Graduates and...
Sunshine Holdings to Acquire 75%...
සොෆ්ට්ලොජික් ලයිෆ්, Norfund සහ OP...
Sri Lanka Chamber of the...
Felix Fernando elected Chairman of...
සොෆ්ට්ලොජික් ලයිෆ්, Norfund සහ OP...
Sri Lanka Chamber of the...
Felix Fernando elected Chairman of...
அட்டாலே எஸ்டேட்: இலங்கையின் மிகப்பெரிய ரப்பர்...