ஜனசக்தி பைனான்ஸ் மேம்பட்ட இலாபத்தன்மையுடன் நான்காம் காலாண்டில் வலுவான வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது

Share

Share

Share

Share

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, 2026 மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் வலுவான செயல்திறனை பதிவு செய்துள்ளது. திட்டமிட்ட செயலாக்கம், தொடர்ச்சியான வணிக விரிவாக்கம் மற்றும் அதன் பிரதான கடன் மற்றும் வைப்பு வணிகங்களில் நிலையான வளர்ச்சி வேகம் ஆகியவை இந்த முன்னேற்றத்திற்கு காரணமாக அமைந்தன. மேம்பட்டு வரும் பொருளாதாரச் சூழல், கடன் தேவையின் அதிகரிப்பு மற்றும் செயற்பாட்டு ஒழுங்கு மற்றும் பொறுப்பான சேவைத்தொகுப்பு முகாமைத்துவத்தின் மீதான நிறுவனத்தின் தொடர்ச்சியான கவனம் ஆகியவையும் இச் செயல்திறனை மேலும் வலுப்படுத்தின.

கணக்காய்வு செய்யப்படாத இடைக்கால நிதி அறிக்கைகளின் அடிப்படையில், 2026 மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த 12 மாத காலப்பகுதிக்கான வரிக்கு முந்தைய இலாபம் (PBT) ரூ.564 மில்லியனாகப் பதிவாகியுள்ளது. இது முந்தைய நிதியாண்டில் மறுசீரமைக்கப்பட்ட ரூ.348 மில்லியன் PBT உடன் ஒப்பிடுகையில் 62% வளர்ச்சியைச் சுட்டிக்காட்டுகிறது. இதே வேளை, நிகர தொழிற்பாட்டு வருமானம் 35% ஆல் உயர்ந்து ரூ.3.1 பில்லியனாக பதிவாகியுள்ளது. அதிகரித்த வணிக நடவடிக்கைகள், செயற்பாட்டு மேம்பாடுகள் மற்றும் முக்கிய சந்தைப் பிரிவுகளில் இடம்பெற்ற விரிவாக்கம் என்பன இந்த வளர்ச்சிக்கு ஆதரவளித்தன.

மதிப்பாய்வுக்குட்பட்ட ஆண்டில், வரிக்குப் பிந்தைய நிகர இலாபம் (NPAT) 38% ஆல் உயர்ந்து ரூ.403 மில்லியனாகப் பதிவானது. மாறிவரும் சந்தைச் சூழலிலும் நிறுவனத்தின் நிதி ஒழுங்கும் திட்டமிட்ட வளர்ச்சி அணுகுமுறையும் உறுதியான வருமானத்தை உருவாக்கியதை இது பிரதிபலிக்கிறது. நிறுவனம், நான்காம் காலாண்டிலும் தனது வளர்ச்சி பாதையில் மேலும் முன்னேறியது. காலாண்டு அடிப்படையில் PBT 17% ஆல் உயர்ந்து ரூ.175 மில்லியனாகவும், NPAT 39% ஆல் அதிகரித்து ரூ.163 மில்லியனாகவும் பதிவானது. இதேவேளை, நிகர தொழிற்பாட்டு வருமானம் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 31% அதிகரித்து ரூ.883 மில்லியனாக உயர்ந்தது.

வலுவான வணிக விரிவாக்கம் மற்றும் சந்தை நம்பிக்கையின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில், 2026 மார்ச் 31 ஆம் திகதியளவில் ஜனசக்தி பைனான்ஸின் கடன்கள் மற்றும் வருமதிகளின் பெறுமதி (Loans and Receivables Portfolio) 48% ஆல் உயர்ந்து ரூ.32.96 பில்லியனாக வளர்ச்சி கண்டது. பிரதான கடன் பிரிவுகளின் விரிவாக்கம், சேவைத்தொகுப்பு பன்முகப்படுத்தல் மற்றும் பொறுப்பான கடன் வழங்கல் நடைமுறை ஆகியவை இந்த வளர்ச்சிக்கு பங்களித்தன. அதேவேளை, வைப்புத் தொகைகள் 14% ஆல் அதிகரித்து ரூ.18.2 பில்லியனாக உயர்ந்துள்ளமை வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான நம்பிக்கையையும் நாடளாவிய நிதி அணுகலின் விரிவாக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

முன்னைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், நான்காம் காலாண்டிலும் தொடர்ச்சியான முன்னேற்றம் காணப்பட்டது. PBT 18% ஆலும், NPAT 66% ஆலும் மற்றும் நிகர தொழிற்பாட்டு வருமானம் 12% ஆலும் அதிகரித்திருந்தது. புதிய நிதியாண்டை நோக்கி நகரும் நிலையில், நிறுவனத்தின் செயற்பாட்டுத் திறன் மற்றும் வருவாய் உருவாக்கும் வலிமை மேலும் வலுப்பெற்றுள்ளதை இது வெளிப்படுத்துகிறது.

செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் தலைவர் ராஜேந்திர தியாகராஜா, “இந்த ஆண்டின் செயல்திறன் எங்கள் வணிக வடிவத்தின் வலிமையையும் நீண்டகால நோக்குடன் முன்னெடுக்கப்படும் எங்கள் திட்டங்களின் வெற்றிகரமான செயலாக்கத்தையும் பிரதிபலிக்கிறது. பொருளாதாரம் மீண்டும் புத்துணர்ச்சி பெறும் இந்த சூழலில், நம்பகத்தன்மையும் முன்னேற்ற நோக்குமிக்க அணுகுமுறையும் கொண்ட வங்கியல்லாத நிதி நிறுவனமாக, அனைத்து பங்குதாரர்களுக்கும் நிலையான பெறுமதியை உருவாக்கும் எங்கள் பங்கை மேலும் வலுப்படுத்தும் நிலையில் ஜனசக்தி பைனான்ஸ் தயாராக உள்ளது.” என்றார்.

நிறுவனத்தின் செயற்பாட்டு முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவித்த ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன், “ஆரோக்கியமான சேவைத்தொகுப்பு விரிவாக்கம், மேம்பட்ட செயற்பாட்டு வேகம் மற்றும் வாடிக்கையாளர்களின் அதிகரித்த நம்பிக்கை ஆகியவை நான்காம் காலாண்டின் வலுவான செயல்திறனிற்கு காரணமாக அமைந்தன. எதிர்காலத்தை நோக்கி நகரும் நிலையில், தரமான வளர்ச்சியை விரிவுபடுத்துதல், சேவைகளின் அணுகலை அதிகரித்தல், செயற்பாட்டு துரிதத்தன்மையை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கையின் மாறிவரும் வாடிக்கையாளர் தேவைகளுக்கேற்ப புதுமையான, வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட நிதித்தீர்வுகளை வழங்குதல் ஆகியவற்றில் எங்கள் கவனம் தொடரும்.” என்றார்.

வலுவான காலாண்டு வளர்ச்சி, விரிவடைந்து வரும் கடன் சேவைகள் மற்றும் வைப்புத் தளத்துடன், ஜனசக்தி பைனான்ஸ் புதிய நிதியாண்டை நிலையான வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்துடன் எதிர்கொள்கிறது. சந்தை நிலைப்பாட்டை மேலும் ஆழப்படுத்துதல், செயற்பாட்டு திறன்களை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் புதுமையான நிதித்தீர்வுகளை முன்னெடுத்தல் ஆகியவற்றின் மூலம் பங்குதாரர்கள் மற்றும் அனைத்து தொடர்புடைய தரப்பினருக்கும் நீண்டகால பெறுமதியை உருவாக்கும் நோக்கில் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

ஜனசக்தி பைனான்ஸ் பற்றி

ஜனசக்தி பைனான்ஸ் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பரந்தளவு நிதிச் சேவைகளை வழங்குகிறது. அதில், வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித் தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிறுவனம் 44 வருட கால உறுதித்தன்மை, வலிமை, நம்பகத்தன்மை மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை நிதித்துறையில் கொண்டுள்ளது. வாடிக்கையாளரை நோக்காகக் கொண்ட நிதிச்சேவைகள் வழங்குனராக ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், புத்தாக்கத்துக்கு முக்கியத்துவமளித்து, சிறந்த தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. ஜனசக்தி பைனான்ஸ் ஒரு JXG (ஜனசக்தி குழும கம்பனி) என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி மற்றும் LRA இடமிருந்து BB+ (Positive Outlook) தரப்படுத்தலை பெற்றுக் கொண்டுள்ள நிறுவனமாகும்.

ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி – https://www.janashakthifinance.lk/

Sri Lanka strengthens business confidence...
ජී.එස්.පී ප්ලස් යලි සලකා බැලීම...
99x Rebuilds Flood-Damaged IT Labs...
Sunshine Holdings records 16.6% YoY...
Janashakthi Life සමාගම Great Place...
கிழக்கிலங்கையில் தடம் பதிக்கும் BYD: மட்டக்களப்பில்...
Samsung Sri Lanka Opens Pre-orders...
The Royal College Union, jointly...
கிழக்கிலங்கையில் தடம் பதிக்கும் BYD: மட்டக்களப்பில்...
Samsung Sri Lanka Opens Pre-orders...
The Royal College Union, jointly...
සන්ෂයින් හෝල්ඩින්ග්ස් අනාගතය වෙනුවෙන් සිය...