தெல்பெத்த எஸ்டேட் பாரம்பரியத்தையும் சிறப்பையும் ஒருங்கிணைக்கும் உவாவின் தேயிலை

Share

Share

Share

Share

1893 ஆம் ஆண்டில் கப்டன் சி.சி. ஹெர்பர்ட் என்பவரால் நிறுவப்பட்ட தெல்பெத்த எஸ்டேட் இலங்கையின் ஊவா மாகாணத்தில், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1,036 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள இந்த எஸ்டேட், நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேயிலை வளையத்தின் ஒரு பகுதியாகும். பல ஆண்டுகளாக, தெல்பெத்த ஒரு அடையாளச் சின்னமாக வளர்ந்து, 1,121 ஹெக்டேயர் பரப்பளவில், 512 ஹெக்டேயர் தேயிலை செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இலங்கையின் துடிப்பான தேயிலை துறையில் பாரம்பரியம் மற்றும் தழுவல் ஆகிய இரண்டிற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது, மேலும் இது நடுத்தரத் தரத்தில் வளர்க்கப்படும் மரபுவழி கருப்புத் தேயிலை வகையை (Orthodox Black Tea) உற்பத்தி செய்வதற்காக அறியப்படுகிறது.

“தெல்பெத்த” என்ற பெயர் உள்ளூர் (பூர்வீக) வேர்களைக் கொண்டதாக நம்பப்படுகிறது. வாய்வழி வரலாற்றின் படி, இது ஒரு காலத்தில் இப்பகுதியில் வளர்ந்த “அதிசய மரங்கள்” என்பதிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மரங்களிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் விளக்கு எரிக்க பயன்படுத்தப்பட்டது. அந்த மரங்கள் பின்னர் தீக்குச்சித் தொழிலுக்காக வெட்டப்பட்டன. இயற்கை வளங்கள் மற்றும் கிராமப்புற அறிவுத்திறன் உடனான இந்தக் தொடர்பு, இந்த எஸ்டேட்டின் தனித்துவமான அடையாளத்திற்கு மேலும் ஒரு பரிமாணத்தைச் சேர்க்கிறது. இன்று, தெல்பெத்த எஸ்டேட், மெல்ஸ்டாகார்ப் (Melstacorp) குழுமத்தின் ஒரு பகுதியான பலாங்கொடை பிளாண்டேஷன்ஸ் பிஎல்சி (Balangoda Plantations PLC) நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

தெல்பெத்தவின் தேயிலைத் தோட்டங்கள் முதன்மையாக Assam மற்றும் Manipuri Jat வகைகளைச் சார்ந்தவை; இவை அவற்றின் திடமான இலை மற்றும் முழுமையான சுவை தன்மைகளுக்காக அறியப்படுகின்றன. ஆரம்பத்தில் இது உயர் நிலத் தோட்டமாக வகைப்படுத்தப்பட்டாலும், ஜூன் 1959 இல் நடுத்தர நிலத் தோட்டமாக மீண்டும் வகைப்படுத்தப்பட்டது. இந்த மாற்றம் அதன் புவியியல் யதார்த்தம் மற்றும் வணிக உத்தி இரண்டையும் பிரதிபலித்தது, மேலும் பிரிட்டன் போன்ற பாரம்பரிய சந்தைகளுக்கு தொடர்ந்து ஏற்றுமதி செய்ய இது உதவியது.

தெல்பெத்த எஸ்டேட்டின் மிகச்சிறந்த பலங்களில் ஒன்று அதன் நிலையான விவசாய நடைமுறைகள் ஆகும். இந்தத் தோட்டம் நடுத்தரக் கொழுந்து பறிக்கும் தரத்தைப் பின்பற்றுகிறது. இது, தரத்தை அதிகரிக்கும் மெல்லிய (fine) கொழுந்து பறிக்கும் முறைக்கு ஒரு நடுநிலையான தீர்வாகும். இந்த நடுத்தர அணுகுமுறை, தயாரிக்கப்பட்ட தேயிலையின் தோற்றம் மற்றும் சந்தை மதிப்பு, ஒரு ஏக்கருக்கான உற்பத்தித்திறன் மற்றும் ஒட்டுமொத்த உற்பத்திச் செலவு ஆகிய அனைத்து முக்கியமான அம்சங்களையும் சமநிலைப்படுத்துகிறது. கொழுந்து பறிக்கும் சுற்றுகள் பொதுவாக 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை, நிலத்தின் உயரம் மற்றும் வயல் நிலைமைகளைப் பொறுத்து மேற்கொள்ளப்படுகின்றன.

பெரும்பாலான பெரிய தேயிலைத் தோட்டங்களைப் போலவே, கவாத்து (Pruning) செய்வதும் தோட்ட பராமரிப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும். தெல்பெத்த எஸ்டேட் பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற ஒரு கட்டமைக்கப்பட்ட கவாத்து சுழற்சியைப் பின்பற்றுகிறது. இது தேயிலைச் செடிகள் அவற்றின் தாவர நிலையைத் தக்கவைத்து, உகந்த அளவில் புதிய கொழுந்துகளை உற்பத்தி செய்ய முடிவதை உறுதி செய்கிறது. சிறந்த தரத்திலான தேயிலைப் புதர் சுத்திகரிப்புக்காக, கவாத்து கத்திகள் (pruning knives), கவாத்து இயந்திரங்கள் (pruning machines) மற்றும் மரம் வெட்டும் கருவிகள (hand saws) போன்ற கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக 1940களில் ஏற்பட்ட கொப்புள நோய் (blister blight) வெடிப்பு போன்ற கடந்தகால சவால்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்தத் தோட்டம் சாய்வு கவாத்து (slope pruning) மற்றும் வயலுக்குத் தகுந்த பிரத்யேக கவாத்து சுழற்சிகளையும் கடைப்பிடிக்கிறது.

வரலாற்று ரீதியாக, தோட்டங்களில் இருந்து தொழிற்சாலைக்கு தேயிலைக் கொழுந்தை கொண்டு செல்வதற்கு பாரம்பரிய மற்றும் புத்திசாலித்தனமான தீர்வுகளின் கலவை தேவைப்பட்டது. ஆரம்ப தசாப்தங்களில், கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களால் சுமந்து செல்லப்பட்டது அல்லது மாட்டு வண்டிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர், மோட்டார் லொரிகள் பயன்படுத்தப்பட்டன; அவை தேயிலையை மையப் புள்ளிகளில் இறக்கின. அங்கிருந்து, அவை கம்பி வழிகள் (wire shoots) மூலம் நகர்த்தப்பட்டன. இந்த தொங்கும் கேபிள் அமைப்பு கொழுந்தைத் தொழிற்சாலைக்கு கீழ்நோக்கி அனுப்பியது. இருப்பினும், செப்டம்பர் 1945 இல் தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தைத் தொடர்ந்து இந்த அமைப்பு இல்லாமல் போனது. பின்னர் ஒரு புதிய தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது, இது உற்பத்தியை சீரமைத்து, தோட்டத்தின் வேலை முறையை நவீனப்படுத்தியது.

ஏப்ரல் 2020 இல், தெல்பெத்த எஸ்டேட் கொழும்புத் தேயிலை ஏலத்தில், “FBOP” தரத்திலான ஒரு கிலோகிராம் தேயிலைக்கு 1,250 ரூபா என்ற சாதனையை அடைந்து, செய்திகளில் இடம்பிடித்தது. இது சந்தையில் அதன் தொடர்ச்சியான முக்கியத்துவத்தையும், உயர்தர நிலையையும் எடுத்துக்காட்டுகிறது.

சமூகம், நிலைத்தன்மை மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியம்
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உட்பட சுமார் 5,000 பேருக்கு வீடாக உள்ள இந்தத் தோட்டம், வேலைவாய்ப்பு மற்றும் அன்றாட வாழ்க்கையை ஆதரிக்கும் உள்கட்டமைப்பு ஆகிய இரண்டையும் வழங்குகிறது. இதில் குடியிருப்பவர்கள் மற்றும் குடியிருக்காதவர்கள் என 540க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், அவர்களுக்கு ஆதரவாக 41 பணியாளர்களும், நான்கு நிர்வாகிகளும் பணிபுரிகின்றனர்.

தெல்பெத்தயில் உள்ள வேலைவாய்ப்பு தேயிலைத் தோட்டங்களுக்கு அப்பாலும் நீண்டுள்ளது. இந்தத் தோட்டம் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கையை ஆதரிப்பதன் மூலமும், சுய தொழில் முயற்சிகளுக்கு கூட்டுறவுச் சங்கக் கடன்களை வழங்குவதன் மூலமும் உள்ளூர் தொழில்முனைவோரை வலுப்படுத்துகிறது. இது தொழிலாளர்களுக்கு அவர்களின் வருமானத்தை பெற்றுக்கொள்ள உதவுவதுடன், சுற்றியுள்ள கிராமங்களுக்குள்ளும் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது.

தெல்பெத்த சுற்றுச்சூழல் நட்புரீதியான கிருமி கட்டுப்பாடு முறைகள் மற்றும் மண் பாதுகாப்பு நுட்பங்களை ஊக்குவிப்பதில் அறியப்படுகிறது. நச்சுத்தன்மை வாய்ந்த களைக்கொல்லிகளைப் பயன்படுத்திய கடந்தகாலத் தொழில்துறை நடைமுறைகளுக்கு மாறாக, தெல்பெத்த இன்று பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அத்துடன், சிறந்த விவசாய நடைமுறைகள் குறித்து தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து பயிற்சியளித்து, பல்லுயிர்த்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கிறது.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களுடனான கூட்டுறவுகள், விவசாய அறிவியல் மற்றும் தோட்ட நிர்வாகத்தில் மாணவர்கள் செயல்முறைப் பயிற்சியைப் பெறுவதற்கான வாய்ப்புகளைத் திறந்துள்ளன. இந்தக் கூட்டுப் பணிகள் கோட்பாட்டையும் நடைமுறையையும் இணைக்க உதவுவதுடன், நிலையான தோட்டப் பயிர்ச்செய்கை நடைமுறைகளில் புத்தாக்கங்களையும் ஊக்குவிக்கின்றன.

தெல்பெத்த தோட்டமானது அண்மையில் தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினால் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த தேயிலை உற்பத்தியாளர்கள் போட்டியில் ஊவா பிராந்தியத்தில் வெற்றி பெற்ற தேயிலை உற்பத்தியாளர்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த கௌரவம் தெல்பெத்தயின் தரம் மற்றும் சிறப்புக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதுடன், இலங்கையின் தேயிலைத் துறையில் ஒரு முன்னணிப் பெயராக அதன் இடத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. பல ஆண்டுகளாக, தெல்பெத்த கொழும்பு தேயிலை ஏலங்களில் தொடர்ந்து சாதனை விலைகளை நிர்ணயித்துள்ளது. 2022 மார்ச்சில் கிலோவுக்கு 1,350 ரூபா, அதே மாதத்தின் பிற்பகுதியில் 1,950 ரூபா, மற்றும் “ஊவா மீடியம்” பிரிவில் அதன் BOP1 தரத்திற்கு 2022 ஏப்ரலில் 2,500 ரூபா என்ற அதன் எல்லா நேர சாதனை விலையும் இதில் அடங்கும். இந்தச் சந்தை சாதனைகளுக்கு மேலதிகமாக, தெல்பெத்த தனது OP1 தரத்திற்காக 2வது உலக கருப்புத் தேயிலைத் தர மதிப்பீட்டுப் போட்டியில் (2022, சீனா) தங்கப் பதக்கத்தையும், 8வது ஆசியா-பசுபிக் தேயிலை போட்டியில் (2023, பெய்ஜிங்) தங்க விருதையும் உள்ளடக்கிய சர்வதேசப் பாராட்டுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூரிலும் வெளிநாட்டிலும் பெற்ற இந்தச் சாதனைகள், உயர்தர தேயிலைகளை உற்பத்தி செய்வதில் தோட்டத்திற்குள்ள நற்பெயரை எடுத்துக்காட்டுவதுடன், இலங்கையின் பெருமைமிகு தேயிலைப் பாரம்பரியத்தை நிலைநாட்டுவதில் அதன் பங்களிப்பையும் பிரதிபலிக்கின்றன.

நவீன காலத்தில் பாரம்பரியத்தைத் தக்கவைத்தல்
இது இலங்கையின் தேயிலைப் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தாலும், பாரம்பரிய நடைமுறைகளை நவீன உற்பத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் சமநிலைப்படுத்தி, தொடர்ந்து புத்தாக்கங்களைப் புகுத்தி வருகிறது.
தெல்பெத்த பல தலைமுறைகளின் அறிவு, உழைப்பு மற்றும் நில நிர்வாகம் ஆகியவை ஒன்றிணைந்து உலகத் தரம் வாய்ந்த தேயிலையை உற்பத்தி செய்யும் ஒரு பாரம்பரியத்தைக் குறிக்கிறது. உலகளாவிய தேயிலைத் தளமானது மாறிவரும் நிலையில், தெல்பெத்த எதிர்காலத்தில் நிலையான முறையில் வளரத் தயாராக உள்ளது.

பாரம்பரியம் மற்றும் நிலைத்தன்மையுடன் முன்னேறும் Dunsinane...
Softlogic Life Celebrates “THE POWER...
ஒவ்வொரு இல்லத்திற்கும் அதிக சேமிப்பையும், உயர்ந்த...
සැම්සුන් ශ්‍රී ලංකා “Go Save...
Chocoholics Café Announces First International...
2025 ICC කාන්තා ලෝක කුසලානයේදී...
லபுக்கெல்ல தோட்டத்தின் கதை – பாரம்பரிய...
தெல்பெத்த எஸ்டேட் பாரம்பரியத்தையும் சிறப்பையும் ஒருங்கிணைக்கும்...
2025 ICC කාන්තා ලෝක කුසලානයේදී...
லபுக்கெல்ல தோட்டத்தின் கதை – பாரம்பரிய...
தெல்பெத்த எஸ்டேட் பாரம்பரியத்தையும் சிறப்பையும் ஒருங்கிணைக்கும்...
Closeup ලංකාවේ පළමු වරට ජනතා...