நவலோக்க மருத்துவ நிலையத்தை கையகப்படுத்துவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு எதிராக HNB முன்வைத்த ஆட்சேபனைகளை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை, நவலோக்க மருத்துவ நிலையத்தின் சொத்தை பராட்டே சட்டத்தின் கீழ் சுவீகரிப்பதற்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் இதற்கு முன்னர் வழங்கிய தடையுத்தரவை நீடிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் துணை நிறுவனமான நவலோக்க மருத்துவ நிலையத்தினால் கடனாகவும் வட்டியாகவும் HNB இற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான ரூ. 600 மில்லியன் தொடர்பில், பராட்டே சட்டத்தின் கீழ் நவலோக்க வைத்தியசாலையின் வளாகமொன்றை ஏலத்தில் விடும் அவ்வங்கியின் தீர்மானத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த நவலோக்க மருத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்திருந்தது. அதன்படி கடந்த மார்ச் மாதம் இந்தச் சம்பவம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவொன்றை பிறப்பித்தது.
இதேவேளை, நவலோக்க மருத்துவமனை குழுமத்துடன் இணைந்த அதன் துணை நிறுவனங்களால் பெறப்பட்ட அனைத்து கடன்கள் மற்றும் வட்டித் தவணைகளை உரிய முறையில் மீளச் செலுத்துவதற்குரிய, வலுவான நிதி ஆதாரங்கள் நவலோக்க மருத்துவமனை குழுமத்திற்கு உள்ளது எனவும், இந்த நிலைமையானது நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் எந்தவொரு தடையையும் ஏற்படுத்தாது எனவும் தனது பங்குதாரர்களுக்கும் பொதுமக்களுக்கும் நவலோக்க மருத்துவமனை குழுமத்தினால் அறிவிக்கப்படுகின்றது.