இலங்கையின் கிராமப்புற நுண் நிதித் துறையின் முன்னேற்றத்திற்காக தீவிரமாக பாடுபடும் நாட்டின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB ஆறாவது தடவையாக நடத்தும் “HNB கெமி புபுதுவ” புத்தாண்டுச் சந்தை 2025, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதுமுள்ள 150 நுண் நிதி தொழில்முனைவோர், தங்கள் உற்பத்திப் பொருட்களை “HNB கெமி புபுதுவ” புத்தாண்டுச் சந்தையில் காட்சிப்படுத்த உள்ளனர். இந்த நிகழ்வு அவர்களின் பொருட்களை விற்பனை செய்வதற்கு மட்டுமல்லாமல், புதிய சந்தை வாய்ப்புகளைப் பெறுவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
HNBயின் முக்கிய நுண் நிதி திட்டமான “கெமி புபுதுவ” புத்தாண்டுச் சந்தையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம், கிராமப்புற நுண் நிதி தொழில்முனைவோரை நகர்ப்புற சந்தைகளுடன் இணைப்பதாகும். கிராமப்புற நுண் நிதி தொழில்முனைவோருக்காக வங்கியால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் இந்த ஆண்டு புத்தாண்டுச் சந்தை நிகழ்வு, இலங்கையின் நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs) ஆதரவளிப்பதில் HNBயின் அர்ப்பணிப்பை சிறப்பாக வெளிப்படுத்துகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த HNB நுண் நிதித் துறையின் துணைத் தலைவர் மஹிந்த செனவிரத்ன, “கெமி புபுதுவ புத்தாண்டுச் சந்தை, கிராமப்புற தொழில்முனைவோருக்கு புதிய சந்தைகளுக்கான அணுகலை வழங்குவதுடன், புதிய வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், தங்கள் வணிகங்களை விரிவுபடுத்தவும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். கொழும்பு போன்ற பொருளாதார ரீதியாக முக்கியமான நகரத்திற்கு அவர்களைக் கொண்டு வந்து இந்த வாய்ப்பை வழங்குவதன் மூலம், எங்கள் நுண் நிதி வாடிக்கையாளர்கள் சிறிய உள்ளூர் வணிகங்களிலிருந்து நிலையான, விரிவான தொழில்முனைவோராக வளர்வதற்கு நாங்கள் உதவுகிறோம்.” என தெரிவித்தார்.
HNB கெமி புபுதுவ புத்தாண்டுச் சந்தைக்கு வருகை தரும் பார்வையாளர்கள், HNB நுண் நிதி சேவைகளின் ஆதரவைப் பெறும் தொழில்முனைவோரால் உருவாக்கப்பட்ட பாரம்பரிய உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், மசாலாப் பொருட்கள், ஆடை மற்றும் காய்கறி வகைகள் உள்ளிட்ட உள்நாட்டு உற்பத்திப் பொருட்களைக் கண்டு மகிழ்வதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். மேலும், இந்த நுண் நிதி தொழில்முனைவோருக்கு தங்கள் பொருட்களை விற்பனை செய்வது மட்டுமல்லாமல், புதிய கொள்வனவாளர்கள், பெருநிறுவன பங்காளிகள் மற்றும் வணிக பங்காளர்களுடன் இணைந்து தங்கள் வளர்ச்சிக்கு ஆதரவாக செயல்படுவதற்கான வாய்ப்புகளும் இங்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் நடைபெறும் HNBஇன் புத்தாண்டு சந்தை, கிராமப்புற தொழில்முனைவோரின் திறமைகளை வெளிக்காட்டுகிறது. இது அவர்களுக்கு மதிப்புமிக்க அங்கீகாரத்தையும் வருமான வாய்ப்புகளையும் வழங்குகிறது.
கெமி புபுதுவ புத்தாண்டுச் சந்தையின் மூலம், HNB தொழில்முனைவோருக்கு நிதி உதவி, வணிக ஆலோசனைகள், சந்தை வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் திறன் வளர்ச்சி ஆகியவற்றில் தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வருகிறது.