முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலுதவி, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான பயிற்சி

Share

Share

Share

Share

Michelin, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை பொலிஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலுதவி மற்றும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் தொடர்பாக பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பிலுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் நேற்று (10) இடம்பெற்றது.

இலங்கை தற்போது மோசமான வீதிப் பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அண்மைய புள்ளிவிபரங்களின்படி, நாட்டில் ஏற்படுகின்ற அதிகளவு மரணங்களுக்கான இரண்டாவது பிரதான காரணமாக வீதி விபத்துகள் மாறியுள்ளது. 2025 செப்டம்பர் 04ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1872 உயிரிழப்புகள் வீதி விபத்துகளால் பதிவாகியுள்ளன. குறிப்பாக நடைபயணிகள், சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் போன்றோர் இந்த விபத்துக்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் இலக்குகளுக்கு ஏற்ப வீதிப் பாதுகாப்பு மற்றும் சமூக நலனை மேம்படுத்தும் நோக்கில், Michelin Lanka (மிஷ்லின் லங்கா) நிறுவனம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கை பொலிஸாருடன் இணைந்து, அடிப்படை முதலுதவி மற்றும் பாதுகாப்பான வாகனோட்டல் குறித்த ஒரு கூட்டுப் பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மேல் மாகாணத்தில் 500 முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். மேலும், அடுத்த ஆண்டு முதல் நாட்டின் பிற மாகாணங்களுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Michelin Lanka நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு மற்றும் நிலைபேறாண்மை முயற்சிகளின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த திட்டம், வீதி விபத்துகளில் பெரும்பாலும் முதல் உதவியாளர்களாக செயல்படும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு உயிர் காப்பாற்றும் திறன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்பயிற்சியில் முதலுதவி நுட்பங்களுடன், சாரதிகளுக்கு பாதுகாப்பான வாகனோட்டல் பற்றிய அடிப்படைகள் மற்றும் நன்மைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும், இதன்மூலம் அவர்களுக்கு ஆபத்துகளை முன்கூட்டியே கணித்து வீதியில் ஏற்படக்கூடிய அபாயங்களைத் தவிர்க்க முடியும்.சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக முச்சக்கர வண்டி சாரதிகளின் தொழில்முறை தகுதியை உயர்த்துவதும், சமூகத்தில் அவர்கள் மீதான நல்லெண்ணதை உருவாக்குவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டம் தொடர்பில் Michelin Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் அதுல் ரென்விகார் கருத்து தெரிவிக்கையில், “உலகின் முன்னணி டயர் நிறுவனமாகவும், இலங்கையின் முக்கிய டயர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமாகவும், பாதுகாப்பு என்பது எமது அனைத்து செயல்பாடுகளிலும் முக்கிய அம்சமாக உள்ளது. முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான இந்த சிறப்பு பயிற்சித் திட்டத்தின் மூலம், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் முதலுதவி பயிற்சிகளை வழங்கி, இலங்கையில் வீதி விபத்து மரணங்களைக் குறைப்பதற்கு எமது பங்களிப்பை வழங்குவதில் பெருமைப்படுகிறோம்,” என்று தெரிவித்தார்.

இந் நிகழ்ச்சியில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மஹேஷ் குணசேகர உரையாற்றுகையில், “முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான இப்பயிற்சித் திட்டம் தற்போதைய சூழலில் மிகவும் அவசியமானது என்று நாங்கள் கருதுகிறோம். சமூகத்தின் முன்னணி மனிதாபிமான அமைப்பாக, நாடு முழுவதும் உயிர் காக்கும் முதலுதவி அறிவைப் பரப்புவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தி பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கும் இந்த முக்கிய பயிற்சித் திட்டத்திற்கு எங்கள் முழு ஆதரவை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று தெரிவித்தார்.

இதனிடையே, இத்திட்டம் பற்றி இலங்கை பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் உரையாற்றிய போது,“Michelin Lanka மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் முன்னெடுத்துள்ள இந்த நிலைபேறான முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம். இது போன்ற பொது-தனியார் கூட்டு முயற்சிகள் முச்சக்கர வண்டி சாரதிகள் சமூகத்தில் நம்பிக்கை, பாதுகாப்பு மற்றும் மீள்திறனை வளர்ப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். வீதி விபத்துகளைக் குறைப்பது என்பது வெறும் சட்ட அமலாக்கம் மட்டுமல்ல, மாறாக கல்வி, பொறுப்புணர்வு மற்றும் பொதுப் பாதுகாப்பில் அக்கறை கொண்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதையும் உள்ளடக்கியது,” என்று கூறினார்.

Huawei Commercially Verifies the World’s...
MAS Holdings, වේගවත් තිරසාර ඇඟලුම්...
Colombo Comedy Show 2025 to...
MAS ஹோல்டிங்ஸினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Plan for...
JAAFஇன் ஆடை ஏற்றுமதி செயல்பாடு குறித்த...
BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு:...
Evolution Auto opens Sri Lanka’s...
எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட...
BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு:...
Evolution Auto opens Sri Lanka’s...
எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட...
Social Media’s Role in STEM...