வணிக நம்பிக்கையை வலுப்படுத்த வர்த்தக மத்தியஸ்த முறைமையை அறிமுகப்படுத்தியது இலங்கை

Share

Share

Share

Share

வணிகத் தகராறுகளைத் தீர்ப்பதற்கும் வணிக உறவுகளைப் பாதுகாப்பதற்குமான நவீன மற்றும் சர்வதேசத் தரம் வாய்ந்த மத்தியஸ்த நடைமுறையை இலங்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாட்டின் வணிக நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

இதன் ஆரம்பமாக, இலங்கை சர்வதேச மாற்றுத் தகராறு தீர்வு மையத்தினால் (International Alternative Dispute Resolution Center, Sri Lanka – IADRC) கொழும்பு துறைமுக நகரின் விற்பனை வளாகத்தில் பெருநிறுவனங்களுக்கான சிறப்பு நிகழ்வு ஒன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், வணிகத் தொடர்புகளில் ஏற்படும் தகராறுகளைத் தீர்ப்பதற்கான முதன்மை வழிகளில் ஒன்றாக ‘மத்தியஸ்த செயல்முறையை’ ஏற்றுக்கொள்வதாக 25 முன்னணி நிறுவனங்கள் உறுதியளித்தன.

2026 ஜூன் 30 முதல் நடைமுறைக்கு வந்த 13 ஆம் இலக்க மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டத்தின் கீழ், இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்புதிய சட்டமூலமானது சிவில் மற்றும் வர்த்தகத் தகராறுகளைத் தீர்ப்பதற்கான ஒரு முக்கிய வழிமுறையாக மத்தியஸ்த அங்கீகாரத்தை வழங்குவதோடு, மத்தியஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கான வழிகாட்டுதல்களையும், எட்டப்படும் தீர்வுகளை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்துவதற்கான கட்டமைப்பையும் வழங்குகிறது.

வணிக நிறுவனங்களுக்கு இந்த புதிய சட்டக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தியதன் காரணமாக, தங்களது வணிக பிணக்குகளை மிகவும் இரகசியமான, கூட்டுறவு மற்றும் நடைமுறை வழியில் தீர்த்துக்கொள்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு கிடைக்கிறது. பல நேரங்களில் நீண்ட காலமாக இழுபறியாக இருக்கும் பாரம்பரிய நீதிமன்ற வழக்குகளைப் போலல்லாமல், மத்தியஸ்தச் செயல்முறையின் மூலம் இரு தரப்பினரும் நேரடியாகப் பேசுவதற்கும், பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளைக் காண்பதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. மோதல்கள் காரணமாக முறிவடையும் அபாயத்தில் உள்ள மதிப்புமிக்க வணிக மற்றும் வர்த்தக உறவுகள் அவ்வாறே பாதுகாக்கப்பட்டு, வணிகங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்.

உலகளாவிய வணிகச் சூழல் நாளுக்கு நாள் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டு வரும் நிலையில், வணிக நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் ஒரு நாட்டின் முதலீட்டுச் சூழலை மதிப்பிடும் போது, அங்குள்ள நம்பகமான தகராறு தீர்வு முறைமைகளையே முக்கிய காரணியாகக் கருதுகின்றனர். ஒரு பலமான மத்தியஸ்தக் கட்டமைப்பு, வணிக வேறுபாடுகளைத் திறம்படவும், இரகசியத்தன்மையுடனும், வணிக உறவுகளின் தொடர்ச்சியை உறுதிசெய்யும் வகையிலும் கையாளுவதற்கு வழிவகுக்கிறது. இதன் மூலம், வணிகர்களுக்கு அதிகப் பாதுகாப்பையும் உறுதியையும் வழங்குகிறது.

இலங்கையில் வலுவடைந்து வரும் மத்தியஸ்த நடைமுறை, உள்நாட்டு வணிக நம்பிக்கையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வணிகத் தகராறுகளைத் தீர்ப்பதற்கான ஒரு நம்பகமான சர்வதேச மையமாக நாடு உருவெடுக்கவும் வழிவகுக்கிறது. இந்தியப் பெருங்கடல் வர்த்தகப் பாதைகளின் மையத்தில் அமைந்துள்ள இலங்கையின் மூலோபாய இருப்பிடம், பலப்படுத்தப்பட்ட சட்டக் கட்டமைப்பு மற்றும் வளர்ந்து வரும் நிறுவனத் திறன் ஆகியவை, உள்நாட்டு வணிகங்களுக்கு மட்டுமன்றி, எல்லை தாண்டிய சர்வதேச வணிக நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில் இலங்கையை வலுவான இடத்தில் நிறுத்தியுள்ளன.

வணிகப் பங்காளிகளுக்கு இடையிலான தகராறுகள், நிறுவனங்களின் அன்றாடச் செயல்பாடுகளைப் பாதிக்காத வகையிலும், நீண்டகால வணிக உறவுகளைப் பாதுகாக்கும் வகையிலும் திறம்படக் கையாளப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு நிறுவனங்களிடையே அதிகரித்து வருவதை இந்தப் ‘பெருநிறுவன மத்தியஸ்த உறுதிமொழி’ பிரதிபலிக்கிறது. இந்த உறுதிமொழியின் மூலம், பங்கேற்கும் நிறுவனங்கள் தங்களின் தகராறு தீர்க்கும் அணுகுமுறையில் மத்தியஸ்த முறையையும் ஒரு பகுதியாகப் பரிசீலிக்க ஒப்புக்கொண்டுள்ளன. முறையான தகராறு மேலாண்மையானது, பொறுப்புள்ள பெருநிறுவன ஆளுமைக்கும் (corporate governance) நிலையான வணிக வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது என்பதை அவை உணர்ந்துள்ளன.

இந்தப் புதிய முயற்சி, வணிகத் தகராறுகளைத் தீர்ப்பதற்கான முதன்மை நடைமுறையாக மத்தியஸ்த முறையை முன்னிறுத்தும் உலகளாவிய போக்குடன் ஒத்துப்போகிறது. சர்வதேச அளவில், நீண்டகால மோதல்களால் ஏற்படும் செலவுகள் மற்றும் காலதாமதங்களைக் குறைத்து, நெகிழ்வுத்தன்மை, இரகசியத்தன்மை மற்றும் வணிக உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் தீர்வுகளை வழங்குவதால், பல்வேறு நிறுவனங்களும் அமைப்புகளும் மத்தியஸ்த முறையை அதிகளவில் பின்பற்றி வருகின்றன.

ஆசிய மன்றம் (The Asia Foundation) அமைப்பின் ஆதரவோடு நடைபெற்ற இந்தப் பெருநிறுவன மத்தியஸ்த உறுதிமொழி நிகழ்வுக்கு, கொழும்பு துறைமுக நகரம் (Colombo Port City) நிகழ்வுப் பங்காளராகச் செயல்பட்டது.

சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஆடைத்...
Carnage அறக்கட்டளையின் ஆதரவோடு சர்வதேச விளையாட்டரங்கில்...
First Capital Treasuries, மூலதனச் சந்தை...
A Little Love for Every...
BYD, කුඩා පරිමාණ වාහන වෙළෙඳපොළට...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
ITC Ratnadipa Presents Weddings Above...