இலங்கையின் முன்னணி கையுறை பாதுகாப்பு தீர்வுகள் உற்பத்தியாளர்களில் ஒன்றான டிப்ட் புரொடக்ட்ஸ் பிஎல்சி (DPL), அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50,000 பாதுகாப்பு கையுறைகளை பாதுகாப்பு அமைச்சிடம் நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த நன்கொடையை , தேசிய அனர்த்த முயற்சிகளுக்கு தனியார் துறையின் அர்ப்பணிப்பை வலியுறுத்தும் விதமாக, ஹேலீஸ் பிஎல்சி நிறுவனத்தின் தலைவர் மோகன் பண்டிதகே மற்றும் டிப்ட் புரொடக்ட்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் புஷ்பிகா ஜனதீர ஆகியோர் இணைந்து, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.
இந்தக் கையுறைகள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, துப்புரவு மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிவாரண பணியாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு விநியோகிக்கப்படும். இது நிவாரண நடவடிக்கைகளின் போது பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் தொடர் செயற்பாடுகளை உறுதிப்படுத்த உதவும்.
இந்த முயற்சி குறித்து கருத்துத் தெரிவித்த DPL இன் பிரதிநிதிகள், இந்நன்கொடையானது சமூகப் பொறுப்புணர்வு மீதான நிறுவனத்தின் நீண்டகால அர்ப்பணிப்பையும், தேசியத் தேவையின் போது சமூகங்களுடன் துணைநிற்க வேண்டிய அதன் பொறுப்பையும் பிரதிபலிக்கிறது என எடுத்துரைத்தனர். உலகளாவிய சந்தைகளுக்குப் பாதுகாப்பு கையுறைகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற ரீதியில், அனர்த்த மீட்புப் பணியில் முக்கிய பங்காற்றும் முன்னணிப் பணியாளர்கள் மற்றும் தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை DPL வலியுறுத்தியது.
இந்த முன்முயற்சியானது, டிப்ட் புரொடக்ட்ஸ் பிஎல்சி மற்றும் ஹேலீஸ் குழுமம் ஆகிய இரண்டின் பரந்த நிலைபேண்தன்மை மற்றும் சமூக ஈடுபாடு சார்ந்த அர்ப்பணிப்புகளுடன் ஒத்துப்போவதோடு சமூக நலனுக்கு ஆதரவளிக்கும் DPL இன் பங்களிப்புகள் மீதான கவனத்தை வலுப்படுத்துகிறது.
தான் பெறுவதை சமூகத்திற்கு மீளவும் கொடுக்கும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, டிப்ட் புரொடக்ட்ஸ் பிஎல்சி நிவாரணம் மற்றும் சமூக முன்முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது.



