1 பில்லியன் டொலர் உள்ளூர் மதிப்புக்கூட்டல் வாய்ப்பை இலக்காகக் கொண்டு, 2026/27 ஆம் ஆண்டிற்கான புதிய செயற்குழுவை FAAMA நியமித்துள்ளது

Share

Share

Share

Share

இலங்கை ஆடை மற்றும் ஆபரண உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (FAAMA) வருடாந்த பொதுக்கூட்டம் 2026 செப்டம்பர் 25 அன்று கொழும்பு Hilton ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், Noyon Lanka தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த திரு. ஹுஸ்னி சாலிஹ் 2026/27 ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்கான தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த வருடாந்த பொதுக்கூட்டத்தில், இலங்கையின் முதலீட்டுச் சபையின் (BOI) தலைவர் திரு. துமிந்த ஹுலங்கமுவ பிரதம விருந்தினராக இணையவழியில் கலந்துகொண்டார். மேலும், இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டுச் சபையின் (EDB) தலைவர் திரு. மங்கள விஜேசிங்க கௌரவ அதிதியாக நேரில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வானது FAAMA அமைப்பின் உறுப்பினர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகள் பலரை ஒன்றிணைத்தது. இது சங்கத்தின் கடந்த கால சாதனைகளை மறுபரிசீலனை செய்யவும், வரவிருக்கும் ஆண்டிற்கான முக்கிய முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடவும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

இலங்கையின் ஆடைத் தொழிற்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மை அமைப்பான ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் (JAAF) கீழ் இயங்கும் ஒரு உறுப்புச் சங்கமாகவே FAAMA திகழ்கிறது. JAAF அமைப்பின் தலைவர் திரு. ஃபிலிக்ஸ் பெர்னாண்டோ புதிய தலைவருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், “இந்தப் புதிய தலைமைத்துவமானது இலங்கையின் உள்ளூர் ஜவுளி மற்றும் ஆபரண விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த உதவுவதோடு, எமது 2030 ஆம் ஆண்டுக்கான இலக்குகளை நோக்கி இத்தொழிற்துறையை வெற்றிகரமாக வழிநடத்தும் என்று நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டார்.

ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள பிரம்மாண்ட வாய்ப்பு
கடந்த ஆண்டின் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்து பேசிய தலைவர் திரு. ஹுஸ்னி சாலிஹ், இலங்கையின் ஒட்டுமொத்த 5 பில்லியன் அமெரிக்க டொலர் ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதியில், உள்ளூர் ஆடை மற்றும் ஆபரணத் தொழில் மட்டும் சுமார் 800 மில்லியன் முதல் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை பங்களிப்பை வழங்குகிறது எனத் தெரிவித்துள்ளார். எனினும், ஆடைகளைத் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களில் ஒரு பெரும் பகுதி இன்னும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.

“நாட்டின் ஆடை ஏற்றுமதியை 2030 ஆம் ஆண்டிற்குள் 5 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 8 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்த இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனால், உள்ளூரிலேயே மூலப்பொருட்களை உற்பத்தி செய்ய 1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பெரும் வாய்ப்பு நமக்குக் காத்திருக்கிறது” என்று அவர் கூறினார். “மேலும், எமது தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்களை எந்தவொரு தனி நிறுவனமோ அல்லது சங்கமோ தனியாகத் தீர்த்துவிட முடியாது. அதற்கு ஒட்டுமொத்த ஆடைத் துறையும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டில், FAAMA அமைப்பு தனது உறுப்பினர்களுக்காகவும் தொழில்துறை வளர்ச்சிக்காகவும் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்கான பொதுவான ஆடைத் துறை வியூகத்தை வகுக்க JAAF, BOI மற்றும் EDB ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றியது. முன்னணி ஆடை உற்பத்தியாளர்களுடன் இரகசிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியதுடன், வரிகள் மற்றும் ஏற்றுமதி விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகளையும் நடத்தியது. தொழிலாளர்களின் தொழில்நுட்பத் திறன்களை வளர்ப்பதற்காக தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டது. SVAT வரி முறையை ரத்து செய்தல் மற்றும் வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவு வரம்புகள் போன்ற உற்பத்தியாளர்களின் முக்கிய கவலைகளை ஜனாதிபதி, BOI மற்றும் EDB ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டுச் சபையின் (EDB) தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியான மங்கள விஜேசிங்க, நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக ஆடைத் துறை பங்களிப்பதாகவும், இதன் ஏற்றுமதி மதிப்பு சுமார் 5.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவித்தார். மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக இந்த ஆண்டு உலகளாவிய தேவை குறைந்து ஏற்றுமதி சற்று மந்தமடைந்திருந்தாலும், எதிர்காலத்தில் சராசரியாக 7 சதவீத ஏற்றுமதி வளர்ச்சியும், சுமார் 6 சதவீத பொருளாதார வளர்ச்சியும் (GDP) ஏற்படும் என EDB கணித்துள்ளது.

இலங்கை சுமார் 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளில் இருந்து ஜவுளிகளை இறக்குமதி செய்வதற்காகச் செலவிடுகிறது என்பதை EDB சுட்டிக்காட்டியுள்ளது. இது உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும். “இந்த உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு நாம் ஆதரவளித்தால், பெருமளவிலான வெளிநாட்டு நாணயத்தை நாம் சேமிக்க முடியும். அத்துடன் நமது ஒட்டுமொத்த ஆடைத் துறையையும் மேலும் வலுப்படுத்த முடியும்” என்று EDB பிரதிநிதி தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) புதிய கடுமையான வர்த்தக விதிகள் காரணமாக, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கும் என்பதை EDB ஏற்றுக்கொண்டுள்ளது. இருப்பினும், இது ஒரு நல்ல வாய்ப்பாகும். “இலங்கை ஏற்றுமதியாளர்கள் மீள்சுழற்சி முறைகள், குறைந்த கார்பன் உமிழ்வு உற்பத்தி மற்றும் துல்லியமான தயாரிப்புத் தகவல் போன்ற சர்வதேசத் தரங்களைப் பின்பற்றினால், போட்டி நாடுகளை விட நாம் தனித்து நிற்க முடியும். இதன் மூலம் ஐரோப்பியச் சந்தையில் மிக வலுவான இடத்தை நாம் பிடிக்க முடியும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முதலீட்டுச் சபையின் (BOI) தலைவர் திரு. துமிந்த ஹுலங்கமுவ தனது வீடியோ வாழ்த்துச் செய்தியில், புதிய செயற்குழுவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், ஆடைத் துறையின் நேங்குத்து ஒருங்கிணைப்பு ஒரு மூலோபாய சாதகமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். “உள்ளூரிலேயே ஜவுளிகள் மற்றும் ஆபரணங்களைத் தயாரித்து முழு உற்பத்திச் சங்கிலிக்கும் வழங்குவதன் மூலம் நாம் வலுவான ஒருங்கிணைப்பைப் பெற்றுள்ளோம்” என்று அவர் கூறினார். மேலும், தற்போதுள்ள மட்டத்திலிருந்து உள்ளூர் மூலப்பொருள் கொள்வனவை மேலும் அதிகரிப்பதற்கு FAAMA அமைப்புடன் இணைந்து BOI நெருக்கமாகச் செயல்படும் என்றும், இந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காகப் புதிய செயற்குழுவை விரைவில் நேரில் சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாற்றத்திற்கான ஒரு தருணம்
மீளத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் கருத்து தெரிவிக்கையில், “சவால்களைப் புரிந்துகொள்வதற்காக நாம் ஏற்கனவே நீண்ட காலம் செலவிட்டுவிட்டோம். இனிமேல் ஒன்றிணைந்த கூட்டு நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய தருணம் இதுவாகும்” என்று குறிப்பிட்டதுடன், மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுமாறு உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். “மிகவும் வலிமையானதோ அல்லது மிக வேகமானதோ அல்ல, மாறாக மாற்றங்களுக்கேற்பத் தங்களைத் தகுந்தவாறு மாற்றிக்கொள்பவையே பிழைத்திருக்கும்” என்ற புகழ்பெற்ற பொன்மொழியை நினைவு கூர்ந்த அவர், இத்தருணமானது FAAMA அமைப்பிற்கும் எமது ஒட்டுமொத்த ஆடைத் தொழில்துறைக்கும் ஒரு முக்கியமான மாற்றத்தின் காலகட்டம் என்பதை எடுத்துரைத்தார்.

1 பில்லியன் டொலர் உள்ளூர் மதிப்புக்கூட்டல்...
BookLanka.com Launches AI-Powered Travel Marketplace...
2028 ඔලිම්පික් සිහිනය සැබෑ කරගැනීමට...
Advantis මෙරට විශාල පරිමාණ ව්‍යාපෘති...
ரப்பர் உற்பத்தியின் 150 ஆண்டுகள்: கொண்டாடப்பட...
Moonamal Knowledge Series to Explore...
පාරිභෝගිකයින්ට නම්‍යශීලී ලීසිං සහ ප්‍රතිලාභ...
சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஆடைத்...
Moonamal Knowledge Series to Explore...
පාරිභෝගිකයින්ට නම්‍යශීලී ලීසිං සහ ප්‍රතිලාභ...
சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஆடைத்...
Carnage அறக்கட்டளையின் ஆதரவோடு சர்வதேச விளையாட்டரங்கில்...