Lina Manufacturing, சன்ஷைன் ஹோல்டிங்ஸின் மருந்து உற்பத்தி பிரிவானது, இலங்கை நுரையீரல் நோய் நிபுணர்களின் கல்லூரியின் 15வது வருடாந்திர கல்வி மாநாடான RESPIRE 2025 இன் பிளாட்டினம் அனுசரணையாளராக, அண்மையில் அக்கல்லூரியுடன் கைகோர்த்து, சுவாசத்துடன் தொடர்புடைய ஆரோக்கியத்திற்கான தங்களது அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டில், உலகளவிலும் பிராந்திய அளவிலும் உள்ள சுவாச மருத்துவம் சார்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், இந்தத் துறையின் சமீபத்திய முன்னேற்றங்கள், ஆராய்ச்சிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
இலங்கை நுரையீரல் நோய் நிபுணர்களின் கல்லூரியின் “உங்களுக்கும் எனக்கும் மூச்சுவிட இடமுண்டு” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற RESPIRE 2025 மாநாட்டில், அனைவருக்கும் சமமான வாய்ப்புக்களை வழங்குவதன் மூலம் உயர்தர சுவாச ஆரோக்கியத்தை அடையும் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
பிரித்தானியாவின் தோல்பட்டை சத்திரசிகிச்சை சங்கத்தின் தலைவர் பேராசிரியர் நிக் மாஸ்கெல் (இங்கிலாந்து), உலகின் முன்னணி நுரையீரல் நோய் நிபுணரான பேராசிரியர் அனீடா சைமண்ட்ஸ் (இங்கிலாந்து) உள்ளிட்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பிரதம அதிதிகள் பலர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். அவர்களின் பங்கேற்பு இந்த நிகழ்வின் உலகளாவிய முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தியது, மேலும் நவீன ஆராய்ச்சிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த பெறுமதிமிக்க புரிதலை பங்கேற்பாளர்களுக்கு வழங்கியது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த Lina Manufacturing நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் டி. சயந்தன், “சுவாசம் தொடர்பான மருத்துவத் துறையில் தொடர்ச்சியான புதிய யோசனைகளை முன்வைப்பதும் மேம்பாடுகளைக் கொண்டு வருவதும் எவ்வளவு முக்கியமானது என்பதை Lina Manufacturing நிறுவனம் நன்கு புரிந்துள்ளது. புத்தாக்க ஒத்துழைப்பு மற்றும் அறிவைப் பகிர்வதன் மூலம் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை வழங்குவதற்கும், சுகாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்களை ஊக்குவிப்பதற்கும் RESPIRE 2025 ஒரு சிறந்த தளமாக விளங்குகிறது. இந்த மாநாட்டிற்கு நாங்கள் வழங்கும் ஒத்துழைப்பு, சுவாச ஆரோக்கியம் மற்றும் நோய் நிவாரண முறைகள் தொடர்பான புதிய முன்னேற்றங்கள் குறித்து இலங்கையின் சுகாதார நிபுணர்கள் மற்றும் தொழிற்துறை நிபுணர்களை புதுப்பிக்கும் வகையில் நமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.” என தெரிவித்தார்.
இலங்கையின் முன்னணி மருந்து உற்பத்தியாளராக, இந்த மாநாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் மருத்துவ சமூகத்திற்கு உதவுவதும், சுவாசம் தொடர்பான நோய்களுக்கான சிகிச்சைகளை மேம்படுத்துவதற்குமான Lina Manufacturing நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இந்நிறுவனம் உற்பத்தி செய்யும் சுவாசம் சார்ந்த மருந்துகளில் Metered Dose Inhalers (MDIs), Dry-Powder inhalers (DPLs) மற்றும் Nebulize சிகிச்சைகளுக்கான தயாரிப்புகள் அடங்கும், இவை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முறையில் விரைவான குணமளிப்பிற்கு உதவுகின்றன.
மூன்று நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில் பயிற்சிப் பட்டறைகள், சிறப்பு விரிவுரைகள், சிறப்பு அதிதிகளின் கலந்துரையாடல்கள் மற்றும் பிரயோக பயிற்சி அமர்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
செயற்கை சுவாச வழியின்றி சுவாசிக்க உதவும் அழுத்தம் கூடிய காற்றை வழங்கும் சுவாச உதவி முறை (non-invasive ventilation), மார்பு சார்ந்த சிகிச்சைகள், நுரையீரல் தொற்றுகள், தூக்கத்தில் ஏற்படும் சுவாச பிரச்சினைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் போன்ற முக்கியமான தலைப்புகளுக்கும் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்வின் மூலம் வெளிநாட்டு நிபுணர்களுடன் தொடர்பு கொள்ளவும், தொழில்முறை உறவுகளை வளர்க்கவும் வாய்ப்பு கிடைத்தது. இந்த செயற்பாடு சுவாசம் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களுக்கான சிகிச்சைகளை மேம்படுத்துவதற்கான புதிய யோசனைகள் மற்றும் கூட்டு முயற்சிகளுக்கு சிறந்த வாய்ப்பை வழங்கியது.