இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பதின்ம வயதினரையும் சமூக ஊடகங்களையும் பற்றிப் பேசும்போது, “அவற்றை முழுமையாகத் தடை செய்யுங்கள், குழந்தைகளை இணையத்திலிருந்து தள்ளி வையுங்கள்” என்பதே பெரும்பாலானோரின் உடனடித் தீர்வாக இருக்கிறது. ஆனால், இணையத்திற்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையிலான எல்லைகள் மெல்ல மெல்ல மறைந்துவரும் சூழலில், இளைஞர்கள் தங்களின் நட்பு, ஆர்வம், கற்றல் மற்றும் மனநலம் சார்ந்த கலந்துரையாடல்கள் என அனைத்திற்கும் இணையத்தையே சார்ந்திருக்கின்றனர். எனவே, பதின்ம வயதினர் இணையத்தைப் பயன்படுத்த வேண்டுமா என்ற கேள்வியை விட, அவர்களுக்காக நாம் எத்தகைய இணைய உலகை உருவாக்குகிறோம் என்பதே முதன்மையான வினாவாக எழுகிறது.

2026 ஆம் ஆண்டின் உலக மனநல தினத்திற்காக உலக சுகாதார நிறுவனம், “வாழும் அனுபவங்களுக்குச் செவிமடுத்தல்: நிஜமான குரல்கள், நிஜமான மாற்றம்” (Lived experiences heard: real voices, real change) என்ற கருப்பொருளை முன்வைத்துள்ளது. இது மக்களின் கருத்துக்களைக் கேட்பதோடு மட்டுமன்றி, அவர்களின் நிஜ அனுபவங்கள் மூலமே முடிவுகளையும் அமைப்புகளையும் உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இதே கொள்கை தான் இளைஞர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கும் பொருந்தும். டிஜிட்டல் பாதுகாப்பு என்பது பதின்ம வயதினருக்கான கட்டுப்பாடுகளை விதிப்பது மட்டுமல்ல. மாறாக, பொருத்தமான சுதந்திரம், பாதுகாப்பு அம்சங்கள், நம்பிக்கையான பெரியவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆபத்துகளை அடையாளம் காணும் திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதாகும்.
பெற்றோர்கள் தங்கள் வளரிளம் பருவக் காலத்தோடு இன்றைய குழந்தைகளின் சூழலை ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தொழில்நுட்பத்தை எதிர்ப்பதற்குப் பதிலாக, விழிப்புணர்வு மூலம் அதை நல்வழிப்படுத்தக் பழக வேண்டும். சாதனப் பயன்பாடு குழந்தைகளின் தூக்கம், கல்வி மற்றும் உறவுகளைப் பாதிக்கிறதா என்பதைக் கண்காணித்து, பயமில்லாத, பொறுப்பான டிஜிட்டல் பழக்கவழக்கங்களை ஊக்குவிக்க வேண்டும். இதுவே ‘தடைச் சுவர்’ எழுப்பாமல் ‘பாதுகாப்பு அரண்’ அமைக்கும் அணுகுமுறையாகும்.
இக்கருத்தை மையமாகக் கொண்டு சில தளங்கள் இயங்குகின்றன. உதாரணத்திற்கு, TikTok போன்ற தளங்கள் பாதுகாப்பை பயனர் மீது மட்டும் சுமத்தாமல், இயல்பாகவே தளத்தின் அமைப்பிலேயே பாதுகாப்பு அம்சங்களை உள்ளீடு செய்துள்ளன. 18 வயதிற்குட்பட்ட பயனர்களுக்குத் தானியங்கி கணக்கு அமைப்புகள், நேரக் கட்டுப்பாடு, நேரடிச் செய்திகளுக்கான தடைகள் மற்றும் தேவையற்ற உள்ளடக்கக் கட்டுப்பாடுகள் ஆகியவை இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய இயல்புநிலைச் செயல்பாடுகள், சிறுவர்களின் அறியாமையினால் ஏற்படும் ஆபத்துகளைத் தொடக்கத்திலேயே தடுக்கின்றன.
பாதுகாப்பு என்பது கட்டுப்பாடுகளால் மட்டும் சாத்தியமாவதில்லை. பதின்ம வயதினர் எதையும் ஆர்வத்துடன் சோதித்துப் பார்க்கும் இயல்புடையவர்கள் என்பதால், பிழைகள் நடப்பது இயல்பு. இதைக் கருத்தில் கொண்டு, இயல்புநிலைப் பாதுகாப்புடன் சேர்த்து, பெற்றோர்கள் கண்காணிக்கும் வசதிகளும், பதின்ம வயதினர் தங்களுக்கு விருப்பமான உள்ளடக்கங்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும். தளம், பெற்றோர் மற்றும் பதின்ம வயதினர் ஆகிய மூவரும் இணைந்து செயல்படும் அடுக்கு பாதுகாப்பு முறையே இங்கு அவசியமாகிறது.
மேலும், இணையப் பயன்பாட்டு நேரத்தைக் கணக்கிடுவதை விட, அங்கு பெறப்படும் அனுபவத்தின் தரமே மனநலனைத் தீர்மானிக்கிறது. இரவில் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் இடைவேளை எடுப்பதற்கான எச்சரிக்கைகள், வழிகாட்டப்பட்ட தியானப் பயிற்சிகள் போன்ற அம்சங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடும். இவை மனநலச் சிகிச்சைக்கு மாற்றாகாது என்றாலும், பயனர்களின் நலனில் தளங்கள் கொள்ள வேண்டிய பொறுப்பை நினைவூட்டுகின்றன.
மிக முக்கியமாக, இளைஞர்களுக்கான பாதுகாப்பை அவர்களின் பங்கேற்பு இல்லாமல் உருவாக்க முடியாது. பெரியவர்களும் நிறுவனங்களும் ஆபத்துகளைக் கணிக்க முடிந்தாலும், பதின்ம வயதினர் சந்திக்கும் சமூக அழுத்தங்கள் மற்றும் இணையச் சிக்கல்களின் நிஜத் தன்மையை அவர்களாலேயே சிறப்பாகப் புரிந்துகொள்ள முடியும். எனவே, இளைஞர்களை வெறும் கொள்கைகளின் இலக்காகப் பார்க்காமல், தளங்களை வடிவமைக்கும் பங்காளர்களாக மாற்ற வேண்டும்.
இணையத்தில் ஆபத்துகளே இல்லாத நிலையை உருவாக்க முடியாது. ஆனால், அதற்காக ஒன்றும் செய்ய முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாதுகாப்பு என்பது இளைஞர்களைத் தனிமைப்படுத்தும் சுவராக இல்லாமல், உலகை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும் பாதுகாப்பு அரணாக அமைய வேண்டும். இளைஞர்களை இணையத்திலிருந்து எப்படி விலக்கி வைப்பது என்று சிந்திப்பதை விட, இணையத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது என்பதே இன்றைய காலத்தின் இன்றியமையாத தேவையாகும்.
இக்கட்டுரையானது, ஆலோசகர் உளவியலாளரும், விரிவுரையாளருமான டாக்டர் அவந்தி ஜயசிங்க அவர்களால் எழுதப்பட்டதாகும்.




