சர்வதேச முன்னணி விருந்தோம்பல் நிறுவனமான அக்கோர் (Accor), தனது உலகப் புகழ்பெற்ற வர்த்தக நாமமான ‘புல்மேன்’ (Pullman) ஹோட்டல்களை இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இதைக் குறிக்கும் வகையில், கொழும்பிலுள்ள ‘புல்மேன் கொழும்பு டவுன்டவுன்’ ஹோட்டலின் Vistas Rooftop Bar உணவகத்தில் பிரத்தியேக வரவேற்பு நிகழ்வு ஒன்று அண்மையில் நடைபெற்றது.
நாட்டின் முக்கிய வணிக மையமான கொழும்பில் ‘புல்மேன் கொழும்பு டவுன்டவுன்’ மற்றும் தென்னிலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா நகரங்களில் ஒன்றான பெந்தோட்டையில் ‘புல்மேன் பெந்தோட்டை ரிசார்ட் & ஸ்பா’ ஆகிய இரு சொகுசு ஹோட்டல்கள் மூலம் புல்மேன் வர்த்தக நாமம் இலங்கையில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்வில், அக்கோர் தெற்காசியப் பிராந்தியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி ரஞ்சு அலெக்ஸ், இலங்கை வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ விஜித ஹேரத், ஹோட்டல்களின் உரிமையாளர்கள், மூத்த நிர்வாகிகள் மற்றும் நாட்டின் முன்னணி ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வணிகத் தலைநகரான கொழும்பின் பரபரப்பான சூழலையும், பெந்தோட்டை கடற்கரையின் இயற்கை அழகையும் ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டுள்ள இந்த இரு ஹோட்டல்களும், இலங்கையின் வர்த்தக மற்றும் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அக்கோர் குழுமத்தின் நவீன விருந்தோம்பல் சேவைகளை வழங்கவுள்ளன.

இந்நிகழ்வானது வெறும் அறிமுக விழாவாக மட்டுமன்றி, இலங்கையின் வர்த்தகத் தலைவர்கள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த முக்கிய பங்குதாரர்களுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கான ஒரு தளமாகவும் அமைந்தது. அத்துடன், வணிகம், பொழுதுபோக்கு மற்றும் ஒன்றுகூடல்களை ஒருங்கிணைக்கும் புல்மேன் வர்த்தக நாமத்தின் தனித்துவமான நவீன விருந்தோம்பல் அனுபவத்தை வருகை தந்த விருந்தினர்கள் நேரடியாகப் பெற்றுக்கொண்டனர்.
இந் நிகழ்வில் உரையாற்றிய அக்கோர் தெற்காசியப் பிராந்தியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி சஞ்சு அலெக்ஸ், “அக்கோர் குழுமத்தின் தெற்காசிய வளர்ச்சி உத்தியில் இலங்கை ஒரு முக்கியமான சந்தையாகும். புல்மேன் வர்த்தக நாமத்தின் இந்த அறிமுகம் இலங்கையில் எமது இருப்பை மேலும் பலப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகும். கொழும்பு மற்றும் பெந்தோட்டை ஆகிய இடங்களில் அமைந்துள்ள இந்த இரு ஹோட்டல்கள் மூலம் வர்த்தக மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு நவீன விருந்தோம்பல் அனுபவத்தை வழங்கவுள்ளோம். எமது விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமன்றி, இலங்கையின் சுற்றுலாத் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு பங்களிப்பதும், நீண்டகாலப் பங்காளித்துவங்களை உருவாக்குவதுமே எமது முதன்மை நோக்கமாகும்.” என்றார்.

இந்த நிலையில், சாஃப்ட்லொஜிக் குழுமம் மற்றும் சாஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான திரு. அசோக் பத்திரகே தெரிவிக்கையில், “அக்கோர் குழுமத்துடன் இணைந்து புல்மேன் வர்த்தக நாமத்தை இலங்கைக்கு வரவேற்பது சாஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு ஒரு பெருமையான தருணமாகும். புல்மேன் கொழும்பு டவுன்டவுன் மற்றும் புல்மேன் பெந்தோட்டை ரிசார்ட் & ஸ்பா ஆகிய இரண்டு ஹோட்டல்களும் இலங்கையின் சுற்றுலாத் துறை மீது நாங்கள் வைத்துள்ள நீண்டகால நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன. இவை இலங்கையின் உயர்நிலை விருந்தோம்பல் துறைக்கு ஒரு புதிய தரநிலையை நிர்ணயிக்கும் என நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் பெந்தோட்டை ஆகிய இரு முக்கிய இடங்களிலும் ‘புல்மேன்’ ஹோட்டல்கள் தொடங்கப்பட்டிருப்பது, இலங்கையில் அக்கோர் குழுமத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியில் ஒரு முக்கியமான அத்தியாயத்தைக் குறிக்கிறது. வணிகம் மற்றும் ஓய்வுநேரச் சுற்றுலா என ஒன்றோடொன்று இணைந்த இரு வேறு சூழல்களில் குழுமத்தின் இருப்பை இந்த ஹோட்டல்கள் மேலும் வலுப்படுத்துகின்றன. அத்துடன், சுற்றுலாத்துறையில் அர்த்தமுள்ள பங்களிப்புகளை உருவாக்குவதிலும், சர்வதேச அளவில் இலங்கையை ஒரு முன்னணி சுற்றுலா மையமாக தொடர்ந்து உயர்த்துவதிலும் அக்கோ நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இது உறுதிப்படுத்துகிறது.
‘புல்மேன் ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ்’ என்பது நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பயணிக்கும் சர்வதேசப் பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரீமியம் உலகளாவிய விருந்தோம்பல் வர்த்தக நாமமாகும். நவீன வடிவமைப்பு, இயல்பான உபசரிப்பு, தனித்துவமான உணவு வகைகள், புத்துணர்ச்சி மையங்கள் மற்றும் துடிப்பான சமூக ஒன்றுகூடல்களுக்கான இடங்களை ஒருங்கிணைத்து, பயணிகள் பணிபுரியவும், தொடர்பு கொள்ளவும், புத்துணர்ச்சி பெறவும், புதிய அனுபவங்களைத் தேடவும் ஏற்ற சூழலை வழங்குகிறது. வேலை மற்றும் ஓய்வுநேர வாழ்க்கைமுறைகளை இணைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கும் புல்மேன், பாரம்பரிய ஹோட்டல் அனுபவங்களைக் கடந்து, பயணிகள் புதிய மனிதர்களுடனும், உள்ளூர் கலாச்சாரத்துடனும், சுற்றியுள்ள பகுதிகளுடனும் சுலபமாக ஒன்றிணைவதற்கான சூழலை உருவாக்குகிறது.

அத்துடன், அக்கோர் குழுமத்தின் உலகளாவிய முன்பதிவு மற்றும் வாடிக்கையாளர் Loyalty Programme திட்டமான ‘ALL – Accor Live Limitless’ வலையமைப்பில் இந்த ஹோட்டல்களும் இணைந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் பிரத்தியேக தள்ளுபடி கட்டணங்களைப் பெற முடியும். மேலும், உலகம் முழுவதிலும் உள்ள இக்குழுமத்தின் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் அனுபவங்களின் மூலம் புள்ளிகளைச் (Reward points) சேகரிக்கவும், அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். அதுமாத்திரமின்றி, வாடிக்கையாளர்களின் உறுப்பினர் தகுதிநிலைக்கு ஏற்ப, வரவேற்பு உபசரிப்புகள், இலவச அறை மேம்பாடுகள் (Room upgrades), முன்கூட்டியே செக்-இன் செய்யும் வசதி (Early check-in) மற்றும் தாமதமாக செக்-அவுட் செய்யும் வசதி (Late check-out) போன்ற பல்வேறு கூடுதல் சலுகைகளையும் அவர்கள் அனுபவிக்க முடியும்.
தற்போது அக்கோர் நிறுவனம் இந்தியா மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தில் Raffles, Fairmont, Sofitel, Pullman, Grand Mercure, Novotel, Mercure, ibis மற்றும் ibis Styles ஆகிய முன்னணி வர்த்தக நாமங்களின் கீழ் சொகுசு, பிரீமியம், நடுத்தர, பட்ஜெட் மற்றும் எகொனமி ஆகிய அனைத்துப் பிரிவுகளிலும் 75 ஹோட்டல்களை இயக்கி வருகிறது. அத்துடன், அக்கோர் குழுமத்தின் Lifestyle ஹோட்டல் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Ennismore நிறுவனமும் இப்பகுதியில் தனது இருப்பை வேகப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, Morgans Originals வர்த்தக நாமத்தின் கீழ் Roswyn ஹோட்டல் அண்மையில் மும்பையில் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



