கொழும்பு, இலங்கை – 27 நவம்பர் 2024:
இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ், தனது பிரதான சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டமான சுவமக ஊடாக, சமூகத்தின் நலனுக்கு வளமூட்டும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்த வண்ணமுள்ளது. இலங்கையில் அதிகரித்துச் செல்லும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் பங்களிப்பு வழங்கும் வகையில், தனது வர்த்தக நாம நோக்கமான வாழ்க்கையை பாதுகாத்தல் மற்றும் அனைவரின் நலனுக்கும் வளமூட்டல் என்பதற்கமைவாக, சுவமக திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. நீரிழிவு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சிறந்த ஆரோக்கியமான வாழ்க்கைமுறைகளை ஊக்குவிப்பதில் இந்தத் திட்டம் பரந்தளவில் கவனம் செலுத்துவதுடன், ஆரம்ப கட்டத்தில் இனங்காண்பதற்கு உதவுதல் மற்றும் இடர் முகாமைத்துவத்துக்கு பங்களிப்பு செய்வதுடன், சமூக ஈடுபாட்டை கட்டியெழுப்புவதிலும் கவனம் செலுத்துகின்றது.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் அங்கமாக, நிறுவனம் தனது ‘சுவமக நடமாடும் இனங்காணல் அலகு’ என்பதை 2024 நவம்பர் 27 ஆம் திகதி கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் அறிமுகம் செய்திருந்தது. இந்நிகழ்வில், சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை நீரிழிவு சங்கத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். சுவமக நடமாடும் இனங்காணல் அலகு என்பது, தகைமை பெற்ற சுகாதார பராமரிப்பு நிபுணர்களைக் கொண்ட சகல வசதிகளையும் உள்ளடக்கிய நீரிழிவு பரிசோதனைகளை இலவசமாக முன்னெடுக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட நடமாடும் ட்ரக் வண்டியாக அமைந்துள்ளது. இந்த பரிசோதனைகளை மேற்கொண்ட பங்குபற்றுனர்களுக்கு சுகாதார அறிக்கைகள் வழங்கப்படுவதுடன், சுகாதார இடர்களை தணித்துக் கொள்வது மற்றும் நிர்வகித்துக் கொள்வது தொடர்பான பிரத்தியேகமான வழிகாட்டல்களும் வழங்கப்படும். இந்த நடமாடும் அலகு இலங்கை முழுவதும் விஜயம் செய்யவுள்ளதுடன், சகல வயதினருக்கும் இலவச பரிசோதனையை மேற்கொள்ளும் வசதி வழங்கப்படுவதை உறுதி செய்யும். யூனியன் அஷ்யூரன்ஸ் வாடிக்கையாளர்கள் மற்றும் அதன் வாடிக்கையாளர் அல்லாதவர்களுக்கும் இந்த பரிசோதனைகளில் பங்கேற்க முடியும் என்பதால், பொது மக்கள் சுகாதார சேவைகளை பெற்றுக் கொள்ளும் அணுகல் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை நீரிழிவு நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளது. பத்தில் ஒரு வயது வந்தவர் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இனங்காணப்படாத பலரும் இடரை எதிர்நோக்கியுள்ளனர். ஆரம்பத்தில் இனங்காணல் மற்றும் உரிய நேரத்தில் சிகிச்சைகளை பெற்றுக் கொள்வது என்பது நீரிழிவை நிர்வகித்துக் கொள்வதற்கு முக்கியமானது என்பதுடன், பாரதூரமான சிக்கல் நிலைகளை தவிர்த்துக் கொள்ளவும் உதவும். சுவமக திட்டத்தின், நடமாடும் இனங்காணல் அலகினால், தனிநபர்களுக்கு தமது சுகாதார நிலை தொடர்பில் பரிசோதனையை மேற்கொண்டு, வலுவூட்டப்பட்ட வாழ்க்கைமுறைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும். நாடு பொருளாதார சவால்களிலிருந்து தொடர்ந்து மீண்ட வண்ணமுள்ள நிலையில், இந்தத் திட்டம் மிகவும் முக்கியமான தருணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் சுகாதார பராமரிப்பு சேவைகளை அணுகக்கூடிய நிலையில் இருப்பதை உறுதி செய்துள்ளது. குறிப்பாக, மருத்துவ வசதிகள் மட்டுப்படுத்தப்பட்ட பின்தங்கிய பகுதிகளிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.
“பாரம்பரிய காப்புறுதி செயற்பாடுகளுக்கு அப்பால் சென்று, மக்களின் வாழ்வுடன் நெருக்கமான தொடர்பை கொண்ட நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. அனைவரின் வாழ்க்கையை பாதுகாப்பது மற்றும் நலனை மேம்படுத்துவது எனும் வர்த்தக நாமத்தின் நோக்கத்துக்கமைய எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் நிலையில், நாம் பொதுவாக முகங்கொடுக்கும் பிரச்சனைக்கு எதிராக போராடுவதற்காக பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை குடிமகனாக நாம் நாடளாவிய ரீதியில் எமது ஆதரவை வழங்க முன்வந்துள்ளோம். சமூகத்தில் காணப்படும் அமைதியான உயிர்கொல்லிக்கு எதிராக பரந்தளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் எம்மை அர்ப்பணித்துள்ளோம். நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்த நாம் எதிர்பார்ப்பதுடன், இலங்கையில் நீரிழிவை நிர்வகிப்பது தொடர்பில் நீண்ட கால திட்டங்களை கொண்டிருக்க எதிர்பார்க்கின்றோம்.” என யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி மஹேன் குணரட்ன தெரிவித்தார்.
யூனியன் அஷ்யூரன்ஸ் பற்றி:
கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய கூட்டுநிறுவனமான, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் (ஜேகேஎச்) அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 80இற்கும் அதிகமான நிறுவனங்களைக் கொண்டு இயங்குகின்றது. அதன் அங்கத்துவ நிறுவனமாகத் திகழ்ந்து, துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2024 செப்டெம்பர் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 27.8 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 74.7 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.