பலங்கொடை ப்ளாண்டேஷன்ஸ் பி.எல்.சி.இனால் நிர்வகிக்கப்படும் தெல்பெத்த தேயிலைத் தோட்டம் Ceylon Specialty Estate Tea Awards 2025 நிகழ்வில் மிக உயர்ந்த தங்க விருதை வென்றது.
இலங்கை தேயிலை சபை, கொழும்பு தேயிலை வணிகர்கள் சங்கம் மற்றும் கொழும்பு தேயிலை ஏல சங்கம் ஆகியவை இணைந்து, ஒரு தனித் தோட்டத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட மிக உயர்தர தேயிலைத் தயாரிப்பை வழங்கியமைக்காக இந்த விருதை தெல்பெத்த தேயிலைத் தோட்டத்திற்கு வழங்கியுள்ளது. தெல்பெத்த தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆரஞ்சு பெக்கோ 1 (OP1) தயாரிப்பு, போட்டி வகையின் கீழ், அதன் தனித்துவமான தரம், அதன் சிறப்பியல்பு அம்சங்கள் மற்றும் நிலையான சிறப்பு ஆகியவற்றிற்காக குறிப்பாகப் பாராட்டப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம், ஒரு தனித் தோட்டத்தில் இருந்து விளைந்த தேயிலைகளால் உற்பத்தி செய்யப்படும் உயர்தர தேயிலைப் பொருட்களின் முன்னணி வகைகளில் (Premium Tea Category) தெல்பெத்த தோட்டம் முன்னணி இடத்தைப் பிடிக்க முடிந்துள்ளது. தேயிலை உற்பத்தியில் அவர்கள் காட்டிய தொழில்நுட்ப திறன் மற்றும் நிலையான தேயிலை விவசாயத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்பு இந்த விருதில் வெளிப்படுகிறது. இந்த விருதை வென்ற தேயிலை தொகையானது, ஜப்பானின் ஓசாகா நகரத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு ஏலத்தில் (Special Charity Auction) விற்கப்பட்டது. அந்த ஏலத்தில், இந்த தோட்டத்தின் ஒரு கிலோ தேயிலை 65,000 யென் (அதாவது ரூபாய் 133,620) விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச அளவில் இலங்கையின் சிறப்பு தேயிலைகளுக்கு (Specialty Teas) உள்ள அதிகரித்த தேவையை இந்த ஏலம் சுட்டிக்காட்டுகிறது.
பலங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திமுத் விக்குணகொடை கருத்து தெரிவிக்கையில், “தெல்பெத்த தோட்டத்தால் உற்பத்தி செய்யப்படும் சிறப்பு தேயிலைக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம், எங்கள் நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் மிகப்பெரிய பெருமையைத் தருகிறது. இந்தப் பாராட்டு, தெல்பெத்த தேயிலைக்கு உலகளாவிய ரீதியில் கொள்வனவாளர்களிடையே இருக்கும் நம்பிக்கை மற்றும் விருப்பத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால், தரத்தை மேம்படுத்தும் எங்கள் எதிர்கால முதலீட்டு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த நமக்கு ஊக்கமளிக்கிறது. மேலும், இதுபோன்ற அங்கீகாரங்கள், சுத்தமான இலங்கைத் தேயிலைக்கான உலகளாவிய ரீதியில் ஏற்பு மற்றும் எங்கள் தேயிலையின் சிறந்த தரத்தின் அளவுகோலையும் உயர்த்த உதவும்.” மெல்ஸ்டாகோப் மற்றும் ஸ்டெஸன் குழுமத்தின் வழிகாட்டுதலின் கீழ், இந்த தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையின் தரத்தை மேம்படுத்தும் பணியில் அவர்கள் மேலும் கவனம் செலுத்துவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.
தெல்பெத்த எஸ்டேட், ஊவா மாகாணத்தின் 2025 ஆம் ஆண்டின் சிறந்த தேயிலை உற்பத்தியாளர் என தேயிலை ஏற்றுமதியாளர்களின் சங்கம் மூலம் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டது. மேலும், கடந்த பல ஆண்டுகளாக, இது கொழும்பு தேயிலை ஏலச் சந்தையில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச விலையை பெறுவதில் வெற்றி பெற்றுள்ளது. உள்நாட்டில் பெற்ற வெற்றிகளுக்கு மேலதிகமாக, தெல்பெத்த எஸ்டெட் இரண்டாவது முறையாக நடைபெற்ற உலக கருந்தேயிலை தர மதிப்பீட்டு போட்டியில் (2022, சீனா) கலந்து கொண்டது. மேலும், OP1 வகைக்காக 8வது ஆசியா-பசுபிக் தேயிலை போட்டியில் (2023, பீஜிங்) ஒரு தங்கப் பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.