
இலங்கையின் ஆடை உற்பத்தித் தொழில்துறையின் உயர்மட்ட அமைப்பான ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் (JAAF) 22ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில், அதன் புதிய தலைவராக பீலிக்ஸ் ஏ. பெர்னாண்டோ ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உலக வர்த்தக மாற்றங்கள், ஒழுங்குமுறை சவால்கள் மற்றும் காலநிலை பாதிப்புகள் உள்ளிட்ட சவாலான காலக்கட்டத்தில் JAAF அமைப்பை வழிநடத்திய சைபுதீன் ஜெஃபர்ஜியின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, பீலிக்ஸ் பெர்னாண்டோ புதிய தலைவராகப் பதவியேற்கிறார்.
தனது பதவிக்காலம் குறித்து கருத்துத் தெரிவித்த வெளியேறும் தலைவர் சைபுதீன் ஜெஃபர்ஜி, “நிச்சயமற்ற சூழல்களுக்கு மத்தியிலும் எமது தொழில்துறை மீண்டும் ஒருமுறை தனது உறுதியான மீளெழுச்சியை நிரூபித்துள்ளது. புதிய தலைமைத்துவம், இலங்கையின் ஆடைத் தொழில்துறையின் கூட்டு நலன்களை முன்னிலைப்படுத்தி, சர்வதேச சந்தை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், போட்டித்தன்மை மற்றும் நீண்டகால நிலைபேறான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் தொடர்ந்து குரல் கொடுக்கும் என நம்புகிறேன்.” என்றார்.
இதனிடையே, தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பீலிக்ஸ் ஏ. பெர்னாண்டோ, தன் மீது நம்பிக்கை வைத்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தனது எதிர்கால முன்னுரிமைகள் குறித்தும் விளக்கமளித்தார்.
“நாட்டிற்கும் எமது தொழில்துறைக்கும் ஒரு முக்கியமான காலகட்டத்தில் இந்தப் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதை ஒரு கௌரவமாகக் கருதுகிறேன். ஒரு தொழில்துறை அமைப்பின் தலைமைத்துவம் என்பது இறுதியில் சேவை, பொருத்தப்பாடு மற்றும் எமது நாட்டின் ஏற்றுமதித் தளத்தை வலுப்படுத்தக்கூடிய பெறுபேறுகளை வழங்குவதாகும்.” என அவர் குறிப்பிட்டார்.
தொழில்துறையின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சி குறித்து வலியுறுத்திய அவர், “இலங்கையின் ஆடைத் துறையானது சர்வதேச ரீதியில் போட்டித்தன்மை மிக்கதாகவும், சுறுசுறுப்பாகவும், உலகளாவிய சந்தை நோக்கிய பார்வையை கொண்டதாகவும் இருக்க வேண்டும். தொழில் புரிவதை எளிதாக்கவும், நிலைபேறான தன்மையை மேம்படுத்தவும், தொழில்துறையின் நீண்டகால வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் JAAF தொடர்ந்து கொள்கை வகுப்பாளர்களுடனும், பங்குதாரர்களுடனும் நெருக்கமாக இணைந்து பணியாற்றும்.” என மேலும் தெரிவித்தார்.
பெலிக்ஸ் பெர்னாண்டோ, Omega Line Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆவார். 35 ஆண்டுகளுக்கும் மேலான உற்பத்தி துறை அனுபவத்துடன், இலங்கையின் ஆடைத் துறையில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் பணியாற்றியவர். நாட்டின் முன்னணி ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றாக ஒமேகா லைன் நிறுவனத்தை கட்டியெழுப்புவதில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். அதுமாத்திரமின்றி, முதலீட்டுச் சபையின் (BOI) அங்கீகாரம் பெற்ற பல உற்பத்தி நிறுவனங்கள் ஊடாக 15,000-ற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிய பெருமை இவரைச் சாரும்.
பிரித்தானியாவின் CIMA அமைப்பின் பட்டய உறுப்பினர் (Fellow Member) மற்றும் சான்றளிக்கப்பட்ட உலகளாவிய முகாமைத்துவக் கணக்காளரான (CGMA) இவர், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல், வார்டன் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பானின் AOTS ஆகியவற்றில் உயர் நிர்வாகக் கல்வியைப் பயின்றவர். ஆடை ஏற்றுமதி மற்றும் சர்வதேச போட்டித்தன்மை தொடர்பான விடயங்களில் இவர் ஒரு முக்கியமான ஆளுமையாகக் கருதப்படுகிறார்.
2026 ஆம் ஆண்டுக்கான JAAF நிறைவேற்றுக் குழுவில், பெலிக்ஸ் பெர்னாண்டோ தலைவராகவும், அரூன் ஹைத்ராமனி மற்றும் ஹேமந்த பெரேரா துணைத் தலைவர்களாகவும், யொஹன் லோரன்ஸ் பொதுச் செயலாளராகவும் தொடர்வர். அதேபோல, முன்னாள் தலைவர்களான சைபுதீன் ஜெஃபர்ஜீ, ஷரட் அமலீன், ஏ. சுகுமாரன், நோயல் பிரியதிலக, அஸீம் இஸ்மாயில் மற்றும் அஷ்ரொஃப் ஒமார் ஆகியோரும் நிறைவேற்றுக் குழுவில் இடம்பெற்று தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் நிறுவன ரீதியான அனுபவத்தை வழங்கவுள்ளனர்.
JAAF இன் உறுப்பினர் சங்கங்களின் பிரதிநிதிகளாக ஹுஸ்னி சாலிஹ், தம்மிக பெர்னாண்டோ, ரஜிதா ஜயசூரிய, வில்ஹெம் எலியாஸ் மற்றும் ஹேமந்த பெரேரா ஆகியோரும், தனிநபர் உறுப்பினர்களாக மகேஷ் ஹைத்ராமனி, அஜித் விஜேசேகர, ஜாஃபர் சத்தார், அனிஸ் சத்தார், ரெஹான் லகானி, மஹிகா வீரகோன் மற்றும் இந்திக லியனஹேவாகே ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.





