ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற சந்தைகளில் வலுவான செயல்திறன் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு (USA and UK) ஏற்றுமதி குறைந்த போதிலும், செப்டம்பர் 2025இல் இலங்கையின் ஆடை ஏற்றுமதிகள் ஆண்டுக்கு ஆண்டு மிதமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைந்திருந்தாலும், செப்டம்பர் மாதம் வரலாற்று ரீதியாகவே ஆகஸ்ட் மாதத்தை விட குறைவாகவே இருக்கும் என்பதைக் குறிப்பிடுவது அவசியமாகும்.
செப்டம்பர் 2025இல் மொத்த ஆடை ஏற்றுமதிகள் 403.01 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது, இது செப்டம்பர் 2024இன்போது 396.73 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த தொகையை விட 1.58 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நோக்கான ஏற்றுமதிகள் முறையே 4.71 சதவீதம் மற்றும் 15.06 சதவீதம் குறைந்துள்ளன. அதேநேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதிகள் 10.75 சதவீதமாகவும், பிற சந்தைகளுக்கான ஏற்றுமதிகள் 19.49 சதவீதமாகவும் உயர்ந்துள்ளன.
செப்டம்பர் மாதத்தில் கலவையான சந்தை நிலவரங்கள் இருந்த போதிலும், ஆடைத் துறை ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நிலையான முன்னேற்றத்தைப் பேணியது. ஜனவரி முதல் செப்டம்பர் 2025 வரையான மொத்த ஆடை ஏற்றுமதிகள் 3,798.25 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. 2024 ஆம் ஆண்டின் அதே காலத்தில் பதிவான 3,555.54 மில்லியன் அமொிக்க டொலருடன் ஒப்பிடும்போது இது 6.83 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது.
அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் 1.73 சதவீதம் வளர்ச்சியடைந்து 1,461.02 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளன. அதேநேரத்தில், ஐரோப்பிய ஒன்றியம் (இங்கிலாந்து தவிர) 14.24 சதவீதம் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்து 1,173.21 மில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளது. இங்கிலாந்திற்கான ஏற்றுமதிகள் 2.31 சதவீதம் உயர்ந்து 533.73 மில்லியன் அமெரிக்க டொலராகவும், பிற சந்தைகளின் ஏற்றுமதிகள் 10.45 சதவீதம் வளர்ச்சியடைந்து 630.29 மில்லியன் அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளன.
“சில பாரம்பரிய சந்தைகளில் இருந்து வரும் தேவை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும், நமது ஏற்றுமதியாளர்கள் செயல்திறன், புத்தாக்கம் மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் மூலம் குறிப்பிடத்தக்க தகவமைப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளனர். சாதகமான ஒட்டுமொத்த வளர்ச்சி, உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இலங்கையின் ஆடைத் துறையின் வலிமையையும் போட்டித்தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது,” என்று JAAF தனது அறிக்கைியல் தெரிவித்தது.
சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், கொள்கை சீரமைப்பை உறுதி செய்வதற்கும், நம்பகமான, நெறிமுறை மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான கொள்முதல் இலக்காக தொழில்துறையின் நிலையைத் தக்கவைப்பதற்கும், இலங்கை அரசாங்கம் மற்றும் தொழில் பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அதன் உறுதிப்பாட்டை ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



