இலங்கை முழுவதும் சைபர் பாதுகாப்பு திறமைகளை மேம்படுத்தி, தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை வலுப்படுத்துவதே புதிய நிலையத்தின் குறிக்கோளாகும்.
சைபர் தாக்குதல்களை முறியடிப்பதில் புதுமையான பாதுகாப்பு தீர்வுகளை வழங்கும் உலகளாவிய முன்னணி நிறுவனமான Sophos, இலங்கையின் முன்னணி சைபர் பாதுகாப்பு தீர்வு வழங்குநரான Sinetcom (Pvt) Ltd. நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிலையத்தை (ATC) திறந்து வைத்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள இப்புதிய பயிற்சி நிலையம், உள்ளூர் சைபர் பாதுகாப்பு திறனை வளர்ப்பதிலும், தனது பங்காளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நேரடி பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதிலும் Sophos இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
Sophos ATC திட்டம் ஒரு உலகளாவிய முயற்சியாகும். இது தேர்ந்தெடுக்கப்பட்ட பங்காளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு உத்தியோகப்பூர்வ Sophos பயிற்சி மற்றும் சான்றிதழ் பாடநெறிகளை வழங்க உதவுகிறது. இந்த திட்டம் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் மேம்பட்ட திறன்களைப் பெறுவதற்கும், பங்காளர் திறன்களை வலுப்படுத்துவதற்கும், நிறுவனங்கள் Sophos இன் அதிநவீன சைபர் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை நம்பிக்கையுடன் செயல்படுத்தவும் நிர்வகிக்கவும் உறுதிசெய்ய உதவுகிறது.
இது தொடர்பாக Sophos இன் இந்தியா மற்றும் சார்க் பிராந்தியத்திற்கான விற்பனைப் பிரிவின் முகாமைத்துவப் பணிப்பாளரும், துணைத் தலைவருமான சுனில் சர்மா கருத்து தெரிவிக்கையில், “கொழும்பில் எங்கள் ATC ஐ தொடங்குவதன் மூலம், இலங்கை மற்றும் பரந்த தெற்காசிய பிராந்தியத்தில் சைபர் பாதுகாப்பு நிபுணத்துவத்தை வலுப்படுத்துவதில் எங்கள் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறோம். Sinetcom நிறுவனத்துடனான இந்த கூட்டாண்மை, எங்கள் பங்காளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உலகத் தரம் வாய்ந்த பயிற்சியையும், மாறிவரும் சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தேவையான சமீபத்திய அறிவையும் நேரடியாக பெறுவதை உறுதிசெய்யும்.” என்றார்.
Sophos ATC திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: ஆழமான தொழில்நுட்ப நிபுணத்துவம் பெற்ற Sophos சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலில் நடைபெறும் நிபுணர் பயிற்சி, உத்தியோகப்பூர்வ Sophos பயிற்சிப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பான மெய்நிகர் ஆய்வகங்களுக்கு நேரடி அணுகல், உலகளாவிய தரநிலைகளை ஆதரிக்கும் வகையில் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி சான்றிதழ் முறை, மற்றும் Sophos இடமிருந்து தொடர்ச்சியான திட்ட ஆதரவு, செயல்திறன் கண்காணிப்பு மற்றும் வழக்கமான புதுப்பிப்புகள் ஆகியவை இதில் அடங்கும்.
இந்த திட்டத்தின் மூலம், Sinetcom முக்கிய Sophos தொழில்நுட்பங்களான firewall, endpoint மற்றும் cloud security தீர்வுகளை உள்ளடக்கிய Sophos சான்றிதழ் பயிற்சித் திட்டங்களை வழங்கும். பாதுகாப்பு நிர்வாகிகள் முதல் தீர்வு வடிவமைப்பாளர்கள் வரை அனைத்து நிலைகளிலும் உள்ள தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டங்கள், நிறுவனங்கள் தங்கள் பாதுகாப்பை வலுப்படுத்தவும், வளர்ந்துவரும் சைபர் அபாயங்களை விட முன்னணியில் இருக்கவும் உதவுகின்றன.
பங்காளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான நன்மைகள்: இலங்கையில் உத்தியோகப்பூர்வ Sophos பயிற்சி மற்றும் சான்றிதழுக்கு நேரடி அணுகல் வசதி, தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்கான திறன் வளர்ச்சி வாய்ப்புகள், மேலும் தொழில்முறை நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் ஆகியவை இதில் அடங்கும்.
ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் பாட நெறிப் பொருட்கள், நேரடிப் பயிற்சி ஆய்வகச் சூழல்கள் மற்றும் Sophos பயிற்சி வலைத்தளம் மூலமாக சான்றிதழ் உரிமத்திற்கான அணுகல் வசதிகளுடன் கூடிய Sophos பயிற்சி தொகுப்பு வழங்கப்படும்.
Sinetcom இன் கொழும்பு நிலையத்தில் அமைந்துள்ள Sophos ATC அக்டோபர் 28, 2025 அன்று அதிகாரபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. முதல் பயிற்சி அமர்வுகளுக்கான பதிவுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.



