22 ஆகஸ்ட் 2023: கடந்த ஞாயிற்றுக்கிழமை (20 ஆகஸ்ட் 2023), நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், எல்கடுவ தோட்டத்திற்குச் சொந்தமான ரத்வத்த தோட்டத்தின் சிரேஷ்ட முகாமையாளரை தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து அச்சுறுத்தியுள்ளார். அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இந்த நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தவேண்டுமென இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
தோட்டத்தில் பணிபுரியாதவர்கள் சட்டவிரோதமாக கட்டடங்களை அமைத்ததால் தோட்ட நிர்வாகத்தினர் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்த பின்னர், சட்டத்திற்கு அமைவாக காணியின் பாதுகாவலர்களாக அரச சொத்துக்களை பாதுகாக்க நிர்வாகம் தமது அதிகாரத்தை பிரயோகித்தது. ரத்வத்தை தோட்டத்தின் காணி அரசாங்கத்திற்கு சொந்தமானதுடன் இதன் நிர்வாகிப்பு ஒப்பந்தம் எல்கடுவ பெருந்தோட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
“பெருந்தோட்டக் கைத்தொழில்துறையின் உச்ச அமைப்பு என்ற வகையில், அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரின் இத்தகைய வார்த்தைப் பிரயோகம், மற்றும் அச்சுறுத்தல் போன்ற செயல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறான உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட தோட்டக் கம்பனிகளின் முகாமைத்துவத்தை நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக அனுமதிக்குமாறு அமைச்சரிடம் கோருகின்றோம்” என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.