தொழில்துறை பாவனையாளர்களுக்கான நீர் கட்டணங்களை குறைக்க வேண்டும் என, ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF), இலங்கை வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (FCCISL), இலங்கைக்கான ஐரோப்பிய வர்த்தக சம்மேளனம் (ECCSL), இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம் (EASL), இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) மற்றும் தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் (NCE) உள்ளிட்ட தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இலங்கை தொழில்களில் நிலவும் நிதி சுமையைக் குறைப்பதற்கும், அத்தியாவசிய சேவைகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்யும் செலவுகளை பிரதிபலிக்கும் விலை நிர்ணய முறையை செயல்படுத்த வேண்டிய அவசியத்திற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம், அமைச்சரவைப் பேச்சாளரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன, நீர் கட்டணத்தை குறைப்பதற்கான புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று, உள்நாட்டு நுகர்வோருக்கான குடிநீர் கட்டணத்தை 7 சதவீதம் குறைப்பதாக அரசு அறிவித்தது. மேலும், அரச மருத்துவமனைகளுக்கு 4.5 சதவீத கட்டணக் குறைப்பும், கோயில்கள் மற்றும் பிற மத முக்கியத்துவம் வாய்ந்த தலங்களுக்கு 6.3 சதவீதக் கட்டணமும் குறைக்கப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டது. நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானால் வெளியிடப்பட்ட இந்த திருத்தப்பட்ட கட்டணக் கொள்கை ஆகஸ்ட் 21 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்தது.
மொத்த விற்பனையாளர்களுக்கு நியாயமான விலை நிர்ணயத்திற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இந்த அறிவிப்பு இருந்த போதிலும், தொழில்துறை விகிதங்களை தங்கள் விலை நிர்ணய சூத்திரத்தில் இருந்து விடுவித்த முடிவு குறித்து சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
“இலங்கை தொழில்துறைகளுக்கு நீர் ஒரு முக்கியமான மூலதனமாகும், இது செயல்பாட்டு செலவுகளை நேரடியாக பாதிக்கிறது. அதிக விகிதங்கள் போட்டித்திறனை பெரிதும் பாதித்து, உற்பத்தி போன்ற துறைகளில் தேவையான முதலீட்டைத் தடுக்கின்றன,” என JAAF செயலாளர் நாயகம் யொஹான் லோரன்ஸ் கூறினார். “படிப்படியான நீர் விகிதங்கள் பொருளாதார மீட்சியை நிலைநிறுத்தி, உலகளாவிய போட்டித்திறனை நிர்வகிப்பதற்கு இன்றியமையாதது.”
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்த ஒப்பந்தத்தின்படி நிறுவப்பட்ட புதிய விலை நிர்ணய சூத்திரம், நீர் வழங்கலின் உண்மையான செலவுகளை பிரதிபலிக்கும் நோக்கம் கொண்டுள்ளது. சமீபத்தில் எரிபொருள் மற்றும் மின்சார விகிதங்களில் குறைப்பு ஏற்பட்டதால், நீர் விகிதங்களில் மேலும் சில மாற்றங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
புதிய விகிதங்களின் கீழ், உள்நாட்டு விகிதங்களில் பல்வேறு குறைப்புகள் இப்போது நடைமுறையில் உள்ளன, ஆனால் தொழில்துறை விகிதங்கள் மாறாமல் உள்ளன, மேலும் தொழில்துறை விகிதங்களை தொடர்ந்து அதிகரிக்கும் போக்கு உள்ளது.
எடுத்துக்காட்டாக, BOI மண்டலங்களுக்கு வழங்கப்படும் குடி நீரின் விகிதம் 2022 இல் 65 ரூபாவிலிருந்து 85 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. இந்த விகிதம் மீண்டும் 2023 இல் ஒரு அலகுக்கு 150 ரூபாவாக திருத்தப்பட்டது.
இலங்கை மின்சார சபை (CEB) மின் விகிதங்களை குறைத்ததோடு, எரிபொருள், இரசாயன மற்றும் வட்டி செலவுகளும் குறைந்துள்ள நிலையில், நீர் விகிதங்களையும் மறுபரிசீலனை செய்து குறைப்பதற்கு வலுவான சந்தர்ப்பம் இருப்பதாக சங்கங்கள் வலியுறுத்துகின்றன. உள்நாட்டு பாவனையாளர்களுக்கான தற்போதைய குறைப்பு, வர்த்தமானி 2398/19 இன் கீழ் அறிவிப்பு செய்யப்பட்டது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, இந்த அங்கீகரிக்கப்பட்ட விகித வரையறை மற்றும் சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, 2023 ஆகஸ்ட் 1 முதல் தற்போதுள்ள நீர் கட்டணங்களை செயல்படுத்தியுள்ளது. தொழில்துறை சங்கங்கள், நீர் விகிதங்களை குறைப்பது பொருளாதார மீட்சியை ஆதரிப்பதற்கும் அத்தியாவசிய சேவைகள் அனைத்து இலங்கையர்களுக்கும் மலிவு விலையில் இருப்பதை உறுதி செய்வதற்கும் ஒரு முக்கியமான படியாகும் என்று நம்புகின்றன.