ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் நீரிழிவு விழிப்புணர்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனமான Suwa Diviya, உலக நீரிழிவு மாதத்தை முன்னிட்டு 2023 நவம்பர் 4 ஆம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் விசேட பொது நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. “Unmask Diabetes” எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் நோக்கம் நீரிழிவு நோய், அதன் தடுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் சமூக நோக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகும். அன்றைய தினம் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொதுமக்களுக்காக இந்த இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
அன்றைய நிகழ்ச்சியானது நீரிழிவு நோய் தடுப்பு பற்றிய ஒரு கவர்ந்திழுக்கக் கூடிய விளக்கக்காட்சியுடன் தொடங்கும், இதில் பங்கேற்பாளர்கள் நீரிழிவு அபாயத்தைக் குறைக்க எடுக்கக்கூடிய நடைமுறைகள் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்நிகழ்ச்சியில் பிரசித்தி பெற்ற உட்சுரப்பியல் நிபுணரான திருமதி. திமுத்து முத்துகுட அவர்கள் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். நீரிழிவு நோய் குறித்த விரிவான விழிப்புணர்வு அமர்வை அவர் நடத்துவார். இந்த நாட்பட்ட நிலையின் சிக்கல்களை மருத்துவர் முழுமையாக விளக்கி, பங்கேற்பவர்களுக்கு அதைப் பற்றிய சிறந்த புரிதலை வழங்குவார்.
இந்த திட்டத்தில் ஒரு கண் மருத்துவ நிபுணர், சிறுநீரக மருத்துவ நிபுணர், குடும்ப மருத்துவ நிபுணர், ஊட்டச்சத்து நிபுணர் ஆகியோர் அடங்குவர். மேலும் ஒரு உடற்பயிற்சி நிபுணர் உட்பட புகழ்பெற்ற மற்றும் நிபுணர் குழுவும் பங்கேற்கும். இந்த நிபுணர் குழு கேள்வி-பதில் அமர்வில் பங்கேற்கும், அங்கு பங்கேற்பாளர்கள் அவர்களிடம் நேரடியாக கேள்விகளைக் கேட்க முடியும், மதிப்புமிக்க ஆலோசனை மற்றும் அறிவைப் பெற முடியும்.
இந்த அமர்வுகளுக்கு மேலதிகமாக, இதயம் மற்றும் இருதய அமைப்பு மற்றும் நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் சத்தான உணவின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கியது. பங்கேற்பாளர்களை புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் வைத்திருக்க அன்றைய தினம் ஒரு மெய்நிகர் ஜூம்பா அமர்வு நடைபெறும்.
இது குறித்து கருத்து தெரிவித்த Suwa Diviya நிறுவனத்தின் நிறுவுனர் திருமதி கலாநிதி காயத்ரி பெரியசாமி அவர்கள், “நீரிழிவு நோயைத் தடுப்பதற்கும் திறம்பட நிர்வகிப்பதற்கும் பொதுமக்களுக்கு அறிவு மற்றும் கருவிகளை வழங்குவதே Suwa Diviya எங்கள் குறிக்கோள். உலக நீரிழிவு நோய் மாதத்தின் இந்த நிகழ்ச்சி நமது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சிறந்த சான்றாகும். நீரிழிவு நோயற்ற எதிர்காலத்திற்காக நீரிழிவு நோயைத் தடுப்பதற்கு விழிப்புணர்வோடு பங்கேற்கவும், செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்கவும் நவம்பர் 4 ஆம் திகதி எங்களுடன் சேருமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.” என தெரிவித்தார்.
மேலும், இந்த திட்டம் நீரிழிவு தொடர்பான பல்வேறு தகவல்களையும் தயாரிப்புகளையும் கொண்டுள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட காலணி, மருந்துப் பொருட்கள், ஊட்டச்சத்து உணவுகள், ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ்/பொருட்கள் மற்றும் கண் பரிசோதனைச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகள் நிகழ்ச்சி வளாகத்தில் உள்ள விற்பனையாளர்களிடமிருந்து, பங்கேற்பாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
இந்தத் திட்டத்தைப் பற்றி மேலும் அறிய அல்லது கலந்துகொள்ள, Suwa Diviya சமூக ஊடகப் பக்கங்களைப் பார்வையிடவும் அல்லது 77 353 3791 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.