அமெரிக்காவின் 30% வரி விதிப்பதால் இலங்கையின் தென்னை தொழில்துறைக்கு பாரிய பின்னடைவு – இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம்

Share

Share

Share

Share

இலங்கையின் தென்னை சார்ந்த பொருட்கள் மீது அமெரிக்கா 30% இறக்குமதி வரி விதிக்கவுள்ளமை அந்தத் துறையில் பாரிய பின்னடைவைக் கொடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ள இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI), இதுதொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு அவசர வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளது.

ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரும் இப்புதிய தீர்வை வரி, ஆண்டுதோறும் 857 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருவாய் ஈட்டும் இலங்கையின் முக்கிய ஏற்றுமதித் துறையை பாதிக்கும் என்பதோடு, ஆயிரக்கணக்கான கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தையும் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளும் அபாயம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா இலங்கையின் தென்னை சார்ந்த தயாரிப்புகளை வாங்குகின்ற மிகப்பெரிய நாடாக உள்ளது. இது ஆண்டுக்கு சுமார் 160 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடன், துறையின் மொத்த ஏற்றுமதியில் 20% க்கும் அதிகமாக உள்ளது. இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் கூற்றுப்படி, இப்புதிய தீர்வை வரி விதிப்பால் அமெரிக்க சந்தையில் இலங்கையின் போட்டித்தன்மை கடுமையாக பாதிக்கப்படும். பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் இந்தியா போன்ற போட்டி நாடுகளுக்கு சலுகை வர்த்தக உறவுகள் உள்ளதால், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தரத்தைக் கொண்டிருந்தாலும், இலங்கை தயாரிப்புகள் அதிக விலை காரணமாக புறக்கணிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இப்புதிய வரி விதிப்பு தொடர்பில் இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் கருத்து தெரிவிக்கையில், “இது வெறுமனே ஒரு கொள்கை மாற்றம் மட்டுமல்ல. இலங்கை பல ஆண்டுகளாக உழைத்து வளர்த்த முழு தொழிற்துறைக்கும் அழிவை ஏற்படுத்தும் அடியாகும். எமது தயாரிப்புகள் அவற்றின் தூய்மை, சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்புக்காக உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும், 30% வரி அவற்றை வாங்குபவர்களுக்கு கட்டுப்படியாகாததாக மாற்றுகிறது. தரத்தின் காரணமாக அல்ல, விலை காரணமாக மட்டுமே நாங்கள் சந்தையில் இருந்து வெளியேற்றப்படுவோம்.

ஆரம்பத்தில் முன்மொழியப்பட்ட 44% இலிருந்து வரி குறைக்கப்பட்டதை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், 30% வரி கூட எங்களின் ஏற்றுமதி போட்டித்திறனுக்கும், இத்தொழிலைச் சார்ந்திருக்கும் லட்சக்கணக்கான கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்” என தெரிவித்தார்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆபத்தில் உள்ள இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களில் உலர்ந்த தேங்காய் (desiccated coconut), சுத்தமான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய், தேங்காய் பால், கிரீம், இளநீர், தென்னம்நார் தயாரிப்புகள், செயலாக்கப்பட்ட கார்பன் மற்றும் தேங்காய் முந்திரை அடிப்படையிலான தோட்டச்செய்கை ஊடகங்கள் (growing media) ஆகியவை அடங்கும். இவற்றில் பெரும்பாலானவை இலங்கை உலகச் சந்தையில் முன்னோடியாக அறிமுகப்படுத்திய இந்த உயர்தர ஏற்றுமதிப் பொருட்களை வாங்குபவர்கள் இனி மலிவான நாடுகளிலிருந்து பொருட்களை வாங்க நிர்பந்திக்கப்படுவர்.

அமெரிக்க வரி விதிப்பானது வெறும் வர்த்தக புள்ளிவிபரங்களை மட்டும் பாதிக்கவில்லை. சிறு விவசாயிகள், பதப்படுத்துபவர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள், போக்குவரத்து சேவை வழங்குநர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் உட்பட 8 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு தென்னை தொழிலையே நம்பியுள்ளனர். உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் துறைகளில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட நேரடி வேலைவாய்ப்புகள் தற்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. ஏற்றுமதி தேவை திடீரெனக் குறைவதால், விற்கப்படாத பொருட்கள் உள்நாட்டு சந்தையில் குவிந்து, பண்ணை நுழைவாயில் “farm gate” விலைகள் குறைந்து, ஏற்கனவே பணவீக்கம் மற்றும் உயரும் உற்பத்திச் செலவால் பாதிக்கப்பட்ட கிராமப்புற குடும்பங்களின் வருமானம் முற்றிலுமாக துண்டிக்கப்படுவதற்கும் வழிவகுக்கும்.

தென்னை ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்படுவதால், பரந்த பொருளாதார தாக்கங்கள் ஏற்படும் என இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் அந்நிய நேரடி முதலீட்டில் சரிவை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சீர்திருத்த திட்டத்தின் கீழ் தன்னை ஒரு நம்பகமான, போட்டித்திறன் மிக்க நாடாக நிலைநிறுத்த முயற்சிக்கும் நேரத்தில், ஏனைய தென்னை உற்பத்தி நாடுகள் சிறந்த கொள்கை ஆதரவு மற்றும் குறைந்த செலவு கட்டமைப்புகளை வழங்குவதால், உள்ளூர் தொழிலதிபர்கள் தங்கள் தொழில்துறை செயல்பாடுகளை வெளிநாடுகளுக்கு மாற்றக்கூடும் அபாயம் உள்ளது. இதனால் வேலைவாய்ப்புகள், மூலதனம் மற்றும் நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளும் நாட்டை விட்டு வெளியே செல்லும் நிலை உருவாகாலாம்.

இதைக் கருத்தில் கொண்டு, தென்னை தொழில்துறையைப் பாதுகாக்க அவசர மற்றும் ஒருங்கிணைந்த அரசாங்க நடவடிக்கைக்கு இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், வரிச் சலுகை அல்லது வரிவிலக்குகளுக்கான வாய்ப்புகளை ஆராய அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தவும் வலியுறுத்தியுள்ளது. முக்கிய சந்தைகளுக்கு நியாயமான அணுகலை உறுதிப்படுத்தும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை செய்யவும், ஏற்றுமதியாளர்கள் குறுகிய காலத்தில் சந்திக்கும் நெருக்கடிகளை சமாளிக்கவும், நீண்ட கால போட்டித்திறனை மேம்படுத்தவும் அரசு இலக்கு வைக்கப்பட்ட ஆதரவை வழங்க வேண்டும் என்றும் இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் மேலும் வலியுறுத்துகிறது.

“தென்னை தொழில்துறையைப் பாதுகாப்பது வெறும் பொருளாதார பிரச்சினை அல்ல, அது ஒரு தேசிய முன்னுரிமை” என்று இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் தெரிவித்தார். “இத்தொழிலை கவனிக்காமல் விட்டால், ஒரு முக்கிய ஏற்றுமதி வருமானத்தை மட்டுமல்ல, கிராமப்புற மீள்திறன், உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சியின் முக்கிய தூணையும் இழக்கும் அபாயம் உள்ளதாகவும், உடனடி நடவடிக்கை தேவை” என்றும் அவர் வலியுறுத்தினார்.

Softlogic Life Grows 29% with...
TikTok Launches Time and Well-being...
மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் ஒருங்கிணைந்த நியமன இயக்கத்துடன்...
Sri Lanka Targets Inclusive Economic...
2025 SLIM ජාතික විකුණුම් සම්මාන...
2025 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் நிகழ்வில்...
ශ්‍රී ලංකාවේ ක්ෂුද්‍ර, සුළු හා...
සතුට, විනෝදය සහ එකමුතුකම සමඟින්...
2025 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் நிகழ்வில்...
ශ්‍රී ලංකාවේ ක්ෂුද්‍ර, සුළු හා...
සතුට, විනෝදය සහ එකමුතුකම සමඟින්...
Global Talent Competes to Solve...