இலங்கை கால்நடை மருத்துவ சங்கம் (SLVA) தனது 75வது வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் வருடாந்த மாநாட்டை 01 டிசம்பர் 2023 அன்று ஷங்ரிலா ஹோட்டலில் மிக பிரமாண்டமாக நடத்தியது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
SLVA தலைவர் பேராசிரியர் டிலான் சதரசிங்க நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றதுடன், இத்துறையின் முன்னேற்றத்திற்காக சிறந்த பங்களிப்பை வழங்கிய கால்நடை மருத்துவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் இணைந்துகொண்ட அனைவருக்கும் அர்த்தமுள்ள மற்றும் இனிமையான நினைவுகளை அளித்தது.
அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தின் ஒப்பீட்டு நோயறிதல் மற்றும் மக்கள்தொகை மருத்துவம் துறைத் தலைவர் திருமதி சுபாசினி காரியவசம் தலைமையுரை நிகழ்த்தியதுடன், அதன் மூலம், பங்கேற்பாளர்களின் அறிவு மேலும் வளப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
76ஆவது நிறைவேற்றுக்குழு நியமனத்துடன், இலங்கை கால்நடை மருத்துவ சங்கத்தின் 76ஆவது தலைவராக கால்நடை டொக்டர் மொஹமட் இஜாஸ் நியமிக்கப்பட்டார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், கால்நடை மருத்துவத்தின் எதிர்காலத்தில் சங்கத்தை சிறப்பாக வழிநடத்தத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
400க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், இலங்கை கால்நடை மருத்துவர்களின் ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பு வெளிப்பட்டது.
1940 இல் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை கால்நடை மருத்துவ சங்கம் (SLVA) என்பது இலங்கையில் கால்நடை மருத்துவத் தொழிலின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் சேவை செய்வதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட அமைப்பாகும். இதில் 1300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளதுடன், ஏறக்குறைய அனைவரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பீடத்தில் பட்டம் பெற்றவர்கள் ஆவர். மேலும் SLVA தொழில்முறை தரம் மற்றும் விலங்குகளின் நலனை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல்வேறு துறைகளில் பணிபுரியும் கால்நடை மருத்துவர்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதில் SLVA முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில்சார் சிறப்புக்கான சங்கத்தின் அர்ப்பணிப்பு பாராட்டப்பட வேண்டிய நிலையில் இருப்பதுடன், இலங்கையில் கால்நடை மருத்துவத்தின் நடைமுறைகள் மற்றும் தரங்களை மேம்படுத்துவதில் இது குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.