ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நிலைபேறாண்மை மற்றும் லேபிளிடல் நிபந்தனைகள்: இலங்கை ஆடைத் தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்களும் வாய்ப்புகளும்

Share

Share

Share

Share

448 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோரைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் (European Union), இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்கான முக்கிய இடமாக எப்போதும் இருந்து வருகிறது. உயர்தர மற்றும் நெறிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கு பெயர் பெற்ற இலங்கை இப்போட்டித் துறையில் வலுவான இடத்தைப் பெற்றுள்ளது.
எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நிலைத்தன்மை மற்றும் லேபிளிடல் நிபந்தனைகள் இலங்கையில் உள்ள ஆடை உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதோடு, சவால்களையும் ஏற்படுத்துகின்றன. இந்த சிறப்புக் கட்டுரை மாறிவரும் ஒழுங்குமுறை நிலப்பரப்பு, இலங்கையில் உள்ள நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இந்த மாற்றங்களுக்கு இணங்குவதன் நன்மைகள் ஆகியவற்றை ஆராய்கிறது.

உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில், குறிப்பாக சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும் ஆடைத் துறையில், நிலைத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் கண்டறியும் தன்மை ஆகியவற்றை ஊக்குவிப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் முன்னணியில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆடை ஒழுங்குமுறையானது டிஜிட்டல் தயாரிப்பு கடவுச்சீட்டு (Digital Product Passport) முன்முயற்சி மற்றும் ஜேர்மன் விநியோகச் சங்கிலி கண்காணிப்புச் சட்டம் போன்ற ஒழுங்குமுறைகள், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை தரநிலைகளை பூர்த்தி செய்து உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்த ஒழுங்குறையானது டிஜிட்டல் தயாரிப்பு கடவுச்சீட்டுக்கு மாற்றப்பட்டது ஒரு முக்கிய மாற்றமாக விளங்குகிறது. இதன்படி 2027 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஆடைத் தயாரிப்புகளும் QR குறியீட்டைக் கொண்டிருக்க வேண்டும், இது தயாரிப்பின் தோற்றம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த விரிவான தகவல்களை வழங்கிறது. வாடிக்கையாளர் தங்களின் கொள்முதல் குறித்த அதிக வெளிப்படைத்தன்மையை கோருவதால், இந்த நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலையான நுகர்வுக்கான முயற்சியுடன் ஒத்துப்போகிறது.

மேலும், ஜேர்மன் விநியோகச் சங்கிலி கண்காணிப்புச் சட்டம், நிறுவனங்கள் தங்களின் விநியோகச் சங்கிலி முழுவதும் மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்குகிறது. எனவே, இதற்கு இணங்காவிட்டால் அபராதங்கள் அல்லது ஜேர்மன் சந்தையிலிருந்து நீக்கப்படலாம். இதனால் இலங்கை ஏற்றுமதியாளர்கள் இதற்கு ஏற்ப மாறுவது முக்கியமானதாகும்.

இது தொடர்பில் இலங்கையில் உள்ள ஜேர்மன் தொழில்துறை மற்றும் வர்த்தகக் குழுவின் (AHK இலங்கை) நிறுவன விவகாரங்கள்/ ஏற்றுமதி ஊக்குவிப்புத் தலைவர் மலிந்த கஜநாயக்க கருத்து தெரிவிக்கையில், “ஐரோப்பிய ஒன்றியத்தினால் அறிமுக்கப்படுத்தப்பட்ட புதிய நிலைத்தன்மை மற்றும் லேபிளிடல் நிபந்தனைகள் இலங்கைக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகின்றன. இதற்கு இணங்குவதற்கு கணிசமான முதலீடு தேவைப்படும். குறிப்பாக, உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்காக முதலீடு செய்ய வேண்டும். இது விநியோகச் சங்கிலியின் வெளிப்படைத்தன்மை மற்றும் டிஜிட்டல் லேபிளிடல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தும்” என அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், போட்டிச் சந்தையில் இலங்கை தனது நிலையை மேலும் வேறுபடுத்திக் கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். நெறிமுறைகள் மற்றும் நிலையான உற்பத்தி செயல்முறைகள் ஆகியவற்றில் நமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதன் மூலம் இதைச் செய்ய முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

சவால்கள் மற்றும் வாய்ப்புகள்

இந்த புதிய விதிமுறைகள் குறிப்பிடத்தக்க சவால்களை முன்வைக்கின்றன. லேபிளிடல் மற்றும் நிலைத்தன்மை நிபந்தனைகளுடன் இணங்குவதற்கு தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முதலீடு தேவைப்படுகிறது. QR குறியீடுகள் மூலம் டிஜிட்டல் லேபிளிங் செய்வதற்கு கணினி புதுப்பிப்புகள் அவசியமாகும். மேலும், சிறிய உற்பத்தியாளர்களுக்கு சுற்றுச்சூழல் தரநிலைகளுக்கு ஏற்ப இணங்குவதை உறுதிப்படுத்த முழு விநியோகச் சங்கிலியையும் கண்காணிப்பது சிக்கலானதாக இருக்கும்.

சர்வதேச சந்தைப்படுத்தல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தரநிலைகளைப் பூர்த்தி செய்ய தயாரிப்புகளை மாற்றியமைப்பதற்கான செலவு, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு (SMEs) கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள உறுப்பு நாடுகள் மேலதிக நிபந்தனைகளை விதிப்பதால் ஒழுங்குமுறை வேறுபாடு, உடன்படுதல்களை பினபற்றுவதில் மேலும் சிக்கலை உருவாக்குகிறது.
இந்த சவால்கள் இருந்தபோதிலும், சில வாய்ப்புகளும் உள்ளன. புதிய விதிமுறைகளுக்கு இணங்குவதன் மூலம், நெறிமுறை மற்றும் நிலையான உற்பத்திக்கான இலங்கையின் நற்பெயரை மேம்படுத்த முடியும். இது நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் ஐரோப்பிய சில்லறை விற்பனையாளர்களுடன் புதிய கூட்டாண்மையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளைத் திறக்கும்.

டிஜிட்டல் தயாரிப்பு கடவுச்சீட்டு இலங்கை உற்பத்தியாளர்களுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பை வழங்குகிறது. QR குறியீடுகளை பயன்படுத்துவதன் மூலம், நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து நிலைத்தன்மையை மதிக்கும் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும். இந்த அளவிலான வெளிப்படைத்தன்மை, நெறிமுறை கருத்துக்கள் இலங்கையின் தயாரிப்புகளை சந்தையில் வேறுபடுத்திக் காட்ட முடியும்.
இலங்கையின் ஆடைத் தொழில்துறை இந்த விடயத்தில் முன்னோடியாக இருந்து, COP28 இல் காண்பிக்கப்பட்ட ADB-GS1 டிஜிட்டல் இணைப்பு தொழில்நுட்பத்துடன் ஒரு முன்னோடித் திட்டத்தை வெற்றிகரமாக நிரூபித்துள்ளது. அத்துடன், தயாரிப்பு தரவுகளின் தடையற்ற பரிமாற்றத்தை அனுமதிப்பதன் மூலம், சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் அதே வேளையில், இது ஆடை உற்பத்தியாளர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய நிலைத்தன்மை மற்றும் லேபிளிடல் நிபந்தனைகள் இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு சவால்களையும், வாய்ப்புகளையும் வழங்குகின்றன. இந்த விதிமுறைகளை கடைபிடிப்பது சவாலாக இருந்நதாலும், அது வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது. இந்தத் துறையில் ஏற்கனவே உள்ள சிறப்பான சாதனைகளை மேலும் கட்டியெழுப்புவதன் மூலம், சரியான உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலமும், புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதன் மூலமும், இலங்கை உற்பத்தியாளர்கள் ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் தமது இருப்பை உயர்த்தி மேலும் நிலையான எதிர்காலத்தில் நீண்டகால வெற்றியை உறுதி செய்ய முடியும். ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வாடிக்கைகயாளர்கள் அதிகளவில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக தரநிலைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட பொருட்களை நாடுவதால், இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படுவது இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், புதிய வணிக பங்குதாரர்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும். இது ஐரோப்பிய ஒன்றியம் போன்ற முக்கியமான சந்தைகளில் போட்டியில் முன்னணியில் இருக்க முடியும்.

Remote Ransomware on the Rise:...
කෘෂි යන්ත්‍රෝපකරණ සඳහා පහසු ලීසිං...
Sampath Bank Launches SL’s First...
அவசரகால மருத்துவமனை சிகிச்சை சேவைகளை மேலும்...
இலங்கைக்கு முதல் முறையாக, அதிவேக நெடுஞ்சாலைகளில்...
Healthguard expands footprint with new...
2025 Softlogic Life විකුණුම් සමුළුවේදී...
Samsung Sri Lanka Launches Exciting...
Healthguard expands footprint with new...
2025 Softlogic Life විකුණුම් සමුළුවේදී...
Samsung Sri Lanka Launches Exciting...
Chevron felicitates female-owned and operated...