இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஒரு சிறப்புமிக்க மைல்கல்லைப் பதிவுசெய்யும் வகையில், ‘Little Japan’ கலாச்சார பரிமாற்றத் திட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் ஒரு பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த Colombo International Airport Hotel நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்நாட்டின் வரலாற்றில் தனியார் துறையினரால் ஒழுங்கமைக்கப்படும் மிகப்பெரிய ஜப்பானிய சுற்றுலா பிரதிநிதிகள் குழுவை வரவேற்க அவர்கள் தயாராக உள்ளனர். அதில், ஆகஸ்ட் மாத இறுதியில் 250 க்கும் மேற்பட்ட ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று சில நாட்கள் சுற்றுலாவிற்காக இலங்கைக்கு வர திட்டமிட்டுள்ளது. இந்த சிறப்பு பிரதிநிதிகள் குழுவை இந்நாட்டிற்கு அழைத்து வர முன்னெடுத்து செயல்படுபவர் கலாநிதி ருவான் பெரேரா அவர்கள் ஆவார். Colombo International Airport Hotelஇன் தலைவராகப் பணியாற்றும் அவர், நீண்ட காலமாக ஜப்பான் – இலங்கை உறவுகளை முன்னேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார்.
தனது வாழ்க்கையில் பாதிக்கும் மேற்பட்ட காலத்தை ஜப்பானில் வாழ்ந்த கலாநிதி ருவான் பெரேரா அவர்கள், பல உலகளாவிய காப்புரிமைப் பட்டங்களுக்கு உரிமை கோரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு நிபுணர் ஆவார். அந்த காலப்பகுதியில் தான் பெற்ற அனுபவங்கள், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்தன. ஜப்பானுடனான அவரது தனிப்பட்ட உறவு, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இரு நாடுகளுக்கிடையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சிகளின் தொடராக உருவெடுத்தது. அதன்படி, ‘Little Japan’ என்பது ஒருமுறை மட்டுமே ஒழுங்கமைக்கப்படும் நிகழ்வு அல்ல, மாறாக சுற்றுலா, வணிகம் மற்றும் முதலீட்டிற்காக இரு நாடுகளையும் இணைக்கும் ஒரு உண்மையான பாலமாக மாறியுள்ளது.
தனது ‘Little Japan’ திட்டத்தின் கீழ் ஜப்பானையும் இலங்கையையும் ஒன்றிணைப்பதற்காக ஒரு சிறப்பான வரலாற்றை உருவாக்கியுள்ள கலாநிதி பெரேரா அவர்கள், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் Japan Expo கண்காட்சியையும், 2020 ஆம் ஆண்டில் Japan Festivalஐயும் ஒழுங்கமைப்பதற்கு முன்னெடுத்துச் செயல்பட்டார். அதனைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டில் 100 ஜப்பானிய தாய்மார்கள் கொண்ட குழுவை இலங்கை சுற்றுலாவிற்கு அழைத்து வரவும், 2025 ஆம் ஆண்டில் 45 பேர் கொண்ட ஜப்பானிய வணிக பிரதிநிதிகள் குழுவிற்கு விருந்தோம்பல் வழங்கவும் அவர் ஏற்பாடு செய்திருந்தார். இந்த ஆண்டு வருகை தரும் 250 க்கும் மேற்பட்ட ஜப்பானிய பிரதிநிதிகள் குழு, இதுவரை வருகை தந்த மிகப்பெரிய பிரதிநிதிகள் குழுவாக மாறவிருக்கிறது.
ஜப்பானுடனான இந்த உறவு சுற்றுலா மற்றும் வணிகத்திற்கு மட்டும் மட்டுப்படாமல், சமூக சேவை நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுவதற்கு கலாநிதி பெரேரா அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். அவர் இதுவரை இலங்கை முழுவதும் அமைந்துள்ள 50 க்கும் மேற்பட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். உலகளாவிய தொற்றுநோய்க் காலத்தின் போதும், மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட 40 பேர் கொண்ட ஜப்பானிய பிரதிநிதிகள் குழுவை இலங்கைக்கு அழைத்து வர அவர் முன்னெடுத்துச் செயல்பட்டார். அச்சமயத்தில், அந்த குழு 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி உதவியையும், 800 கிலோகிராம்களுக்கும் அதிகமான அத்தியாவசிய மருந்துப் பொருட்களையும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியது. கலாநிதி பெரேரா அவர்களின் கருத்தின்படி, ‘Little Japan’ வணிகத் திட்டத்தின் முக்கிய பலமானது இந்த தொடர்ச்சியான நீண்டகால அர்ப்பணிப்பு ஆகும். இதன் மூலம் கட்டியெழுப்பப்படும் பரஸ்பர நம்பிக்கையும் நட்புறவும், ஜப்பானிய முதலீட்டாளர்களும் வணிகங்களும் இலங்கையுடன் நம்பிக்கையுடன் செயற்பட தேவையான பின்னணியை உருவாக்கும்.
இந்த பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை தரும் போதும், மீண்டும் புறப்படும் போதும் கொழும்பு நகரத்தை மையமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பல சுற்றுலா இடங்களுக்கு பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. “Japan Returns to Sri Lanka” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த முழு நிகழ்ச்சியும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலாத்துறையிலும் வணிக உறவுகளிலும் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் என்பது உறுதியானது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ‘Little Japan’ நிறுவுனர் மற்றும் Colombo International Airport Hotelஇன் தலைவர் கலாநிதி ருவான் பெரேரா, “இந்த வருகை வெறுமனே ஒரு சுற்றுலா மட்டுமல்ல, ஜப்பானின் சுற்றுலா மற்றும் வணிக சமூகம் இலங்கை மீது கொண்டுள்ள நம்பிக்கையை உலகிற்கு உணர்த்தும் ஒரு வாய்ப்பாகும். ஒரு சுற்றுலாவிற்கும் அப்பாற்பட்டு, ஜப்பானின் சுற்றுலா மற்றும் வணிக சமூகத்தினர் இலங்கை மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கை குறித்த வலுவான செய்தியாகவும் இதை சுட்டிக்காட்டலாம். இவ்வாறு 250 க்கும் மேற்பட்ட விருந்தினர்களை ஒன்றாக இணைத்து இலங்கைக்கு அழைத்து வர முடிந்தது, இரு நாடுகளுக்கிடையேயான தனிப்பட்ட மற்றும் வணிக உறவுகளை மீண்டும் வலுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட மிக முக்கியமான நடவடிக்கையாகும். அதனை யதார்த்தமாக மாற்றிய முக்கிய திட்டமாக ‘Little Japan’ மாறியிருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என தெரிவித்தார்.
மேலும், இந்த பிரதிநிதிகள் குழுவின் வருகை Colombo International Airport Hotel மற்றும் ‘Little Japan’ திட்டத்திற்கு கிடைத்த ஒரு சிறப்புமிக்க வெற்றியாகும். ஜப்பானிய முதலீட்டாளர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை இலங்கையுடன் தொடர்ந்து இணைக்கும் கலாநிதி ருவான் பெரேரா அவர்களின் நீண்டகால தூரநோக்குப் பார்வை இதன் மூலம் நன்கு பிரதிபலிக்கின்றது. எதிர்வரும் ஆண்டுகளில் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள், முதலீட்டாளர்கள் மற்றும் அந்நாட்டின் முன்னணி நிறுவனங்களுடன் நெருக்கமாக செயற்பட்டு, இந்த வெற்றியை மேலும் உயர்த்துவதற்கு இந்த நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயல்படும்.
Colombo International Airport Hotel தொடர்பில்
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள, ஜப்பானின் முழு ஒத்துழைப்புடன் இயங்கும் ஆடம்பர விருந்தோம்பல் சுற்றுலா ஹோட்டல் வளாகமாக Colombo International Airport Hotelஐ குறிப்பிடலாம். இது இலங்கைக்கு வருகை தரும் சர்வதேச பிரதிநிதிகள் குழுக்கள், ஒரு விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்திற்கு மாறும் பயணிகள் மற்றும் வணிக விருந்தினர்களுக்கு முக்கிய நுழைவாயிலாகவும் சேவைகளை வழங்குகிறது.
Little Japan தொர்பில்
‘Little Japan’ என்பது ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள், வணிகங்கள் மற்றும் நிறுவனங்களை இலங்கையின் சுற்றுலா இடங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சமூகங்களுடன் இணைக்கும் ஒரு சிறப்புத் திட்டமாகும். இது இரு நாடுகளுக்கிடையிலான கலாச்சாரப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதோடு, இருதரப்பு வணிக உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் செய்கிறது. ‘Little Japan’ திட்டம் Colombo International Airport Hotelஇன் சிறப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.



