இலங்கையின் கிராமிய நுண்கடன் துறையின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களித்து வரும் இலங்கையின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான HNB, வருடாந்த HNB Gami Pubuduwa வருடாந்த கண்காட்சியை இந்த வருடம் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடத்தியது. Gami Pubuduwa வருட கண்காட்சியில் நாடளாவிய ரீதியில் 130 இற்கும் மேற்பட்ட நுண்தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை காட்சிப்படுத்தியதுடன், தமது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு மேலதிகமாக புதிய சந்தை வாய்ப்புகளையும் பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும்.
கொவிட்-19 தொற்று நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நுண்நிதி வாடிக்கையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் வங்கியினால் ஆரம்பிக்கப்பட்ட 20 மில்லியன் ரூபா நன்கொடையின் கீழ் பயனாளிகளும் தமது உற்பத்திகளை இந்த Gami Pubuduwa வருடக் கண்காட்சியில் இணைத்துள்ளமை மற்றுமொரு விசேட அம்சமாகும்.
பிரதம அதிதியாக HNBயின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ஜொனதன் அலஸ் மற்றும் CBSL பிராந்திய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் M.S.K. தர்மவர்தன, SMELOC, நிதியமைச்சின் திட்ட பணிப்பாளர் வசந்தி விஜேரத்ன மற்றும் HNB நிறைவேற்று பணிப்பாளர்/பிரதம செயற்பாட்டு அதிகாரி டில்ஷான் ரொட்ரிகோ ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இது தவிர, HNB பிரதிப் பொது முகாமையாளர் மொத்த வங்கியியல் தமித் பல்லேவத்த, HNB நுண் நிதிப் பிரிவின் தலைவர் வினோத் பெர்னாண்டோ உட்பட HNBயின் சிரேஷ்ட முகாமையாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த HNB முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ஜொனதன் அலஸ், “எமது நுண்கடன் வாடிக்கையாளர்களின் வெற்றியை வெளிப்படுத்தும் 2023 Gami Pubuduwa வருட கண்காட்சி இந்த வருடமும் வெற்றிகரமாக நடைபெற்றமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். 34 வருடங்களாக இயங்கிவரும் இந்த வேலைத்திட்டம் கடந்த இரண்டு வருடங்களில் நாம் எதிர்கொள்ள வேண்டிய கடினமான சவால்களுக்கு முகங்கொடுத்து அடிமட்ட வர்த்தகங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க எம்மால் உதவியுள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். இந்த திட்டம் அவர்களின் வணிகங்களின் வளர்ச்சிக்கான எங்கள் உறுதியான அர்ப்பணிப்புக்கு ஒரு சிறந்த சான்றாகும்.
இந்த நிகழ்ச்சித் திட்டம் எங்கள் நுண்கடன் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வெற்றியை வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்று நான் கூற விரும்புகிறேன். எங்களின் ஆதரவுடன் பல்வேறு தொழில்கள் செழித்திருப்பதைப் பார்ப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கும் நிலையான வளர்ச்சியை அடைவதற்கும் அடிமட்ட அளவில் சிறு வணிகங்களை ஆதரிப்பது மிகவும் முக்கியம் என்று நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவித்தார்.
ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய திகதிகளில் நடைபெற்ற இந்த ஆண்டு கண்காட்சிக்கு ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்தனர். காய்கறிகள், பழங்கள், ஆயுர்வேத பொருட்கள், பூக்கள், கைவினைப் பொருட்கள், மின்னணு உபகரணங்கள், பாரம்பரிய இனிப்புகள் மற்றும் பித்தளைப் பொருட்கள் போன்ற பல்வேறு பொருட்கள் தொழில்முனைவோரால் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டன. கிராமப்புற தொழில்கள் மற்றும் குறுந்தொழில் முனைவோருக்கு, இது உண்மையிலேயே புதிய அனுபவங்களையும் புதிய வணிக வாய்ப்புகளையும் கொண்டு வரும் ஒரு வர்த்தக கண்காட்சியாகும்.
இலங்கையின் தொழில்முயற்சியாளர்களின் வளர்ச்சிக்காக நெருக்கமாகச் செயற்படும் HNB, இலங்கையின் கிராமிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் செழிப்பை மேம்படுத்தும் குறிப்பிட்ட நோக்கத்துடன் நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவன (MSME) துறையில் பிரவேசித்த தனியார் துறையின் முதலாவது வர்த்தக வங்கியாக மாறியது. இந்தத் துறையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான சேவை அனுபவத்துடன், தொழில் முனைவோர் வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் சிறு வணிக வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதிலும் HNB பெருமை கொள்கிறது.