முதல் 9 மாதங்களில் வலுவான நிதிச் செயல்பாட்டைப் பதிவு செய்துள்ள HNB

Share

Share

Share

Share

மாறிவரும் பொருளாதாரச் சூழலுக்கு மத்தியிலும், 2026 செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் HNB PLC வலுவான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது. இக்காலப்பகுதியில் குழுமத்தின் வரிக்குப் பிந்திய இலாபம் (PAT) 33.6 பில்லியன் ரூபாவாகவும், வங்கியின் வரிக்குப் பிந்திய இலாபம் 33.0 பில்லியன் ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

2026 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் நிதி அறிக்கையின் விரிவாக்கம் வங்கியின் செயற்பாட்டிற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், மொத்தக் கடன்கள் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து இதுவரை 313.5 பில்லியன் ரூபாவால் அதிகரித்து 20.7% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதற்கு வலுச்சேர்க்கும் வகையில், வைப்புக்களும் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து இதுவரை 251.7 பில்லியன் ரூபாவால் அதிகரித்து 12.8% வளர்ச்சியை எட்டியுள்ளன. உயர் வட்டி வீதச் சூழலுக்கு மத்தியிலும், வங்கி 32.0% என்ற ஆரோக்கியமான CASA விகிதத்தைப் பேணி, சமநிலையான நிதி மூலதனக் கலவையை உறுதிப்படுத்தியுள்ளது.

வங்கியின் தேறிய வட்டி வருமானம் (NII) வருடாந்த அடிப்படையில் (YoY) 23.6% அதிகரித்து 85.5 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதுடன், தேறிய வட்டி விளிம்பு (NIM) 4.50% ஆகக் காணப்பட்டது. வலுவான கடன் வழங்கல் வேகமானது வட்டி வருமானத்தில் 19.7% அதிகரிப்பை ஏற்படுத்தியது; கொள்கை ரீதியான வட்டி வீத அழுத்தங்களுக்கு மத்தியிலும், வட்டிச் செலவுகள் ஒப்பீட்டளவில் குறைவான வேகத்தில் அதாவது 16.6% மாத்திரமே அதிகரித்தமையால், இது வலுவான தேறிய வட்டி வருமான வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

கட்டணம் சார்ந்த வருமானத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வங்கியின் வருமானக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம் வருடாந்த அடிப்படையில் (YoY) 25.4% அதிகரித்து 20.6 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது. அட்டை மற்றும் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களின் அதிகரிப்பு, உயர்ந்த வர்த்தக நிதிச் செயற்பாடுகள் மற்றும் குத்தகை உள்ளிட்ட ஏனைய சேவைகளின் வளர்ச்சி ஆகியன இம்மேம்பட்ட செயற்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்துள்ளன. வெளிநாட்டு நாணய இருப்பு மற்றும் மீள்மதிப்பீட்டு நகர்வுகளிலிருந்து கிடைத்த இலாபங்களைப் பிரதிபலிக்கும் வகையில், நாணய மாற்றுத் தொடர்பான வருமானமும் இக்காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.

வங்கியின் அனைத்து வருமானப் பிரிவுகளிலும் ஏற்பட்ட வலுவான வளர்ச்சியின் காரணமாக, மொத்த செயற்பாட்டு வருமானம் வருடாந்த அடிப்படையில் (YoY) 22.9% அதிகரித்து 112.7 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது. மூலோபாய மாற்றத் திட்டங்களுக்கான முதலீடுகளின் பகுதியளவான தாக்கம் மற்றும் ஏனைய செயற்பாட்டுச் செலவுகளின் அதிகரிப்பு ஆகியவற்றால், மொத்த செயற்பாட்டுச் செலவுகள் 13.6% ஆல் அதிகரித்துள்ளன. செலவு-வருமான விகிதம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு 36.1% ஆகக் காணப்பட்டது.

வலுவான வருமான வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான செலவுக் கட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாக, வலுவிழப்புக்கு முன்னரான செயற்பாட்டு இலாபம் வருடாந்த அடிப்படையில் (YoY) 28.8% அதிகரித்து 71.9 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதுடன், இது வங்கியின் வருமானச் செயற்பாட்டின் தரத்தை எடுத்துக்காட்டுகின்றது.

கடன் வழங்கல் தொகுதியின் வளர்ச்சியுடன் இணைந்ததாக, இக்காலப்பகுதியில் 5.3 பில்லியன் ரூபா வலுவிழப்பு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது; இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 7.5 பில்லியன் ரூபா வலுவிழப்பு மீளப்பெறலுடன் ஒப்பிடத்தக்கது. கடன் இடரை நிர்வகித்தல் மற்றும் கடன் தொகுதியின் தரத்தைப் பேணுதல் ஆகியவற்றில் வங்கி தொடர்ச்சியாகக் கவனம் செலுத்துவதை எடுத்துக்காட்டும் வகையில், வங்கி 1.09% என்ற தேறிய நிலை 3 விகிதத்தையும் 73.46% என்ற நிலை 3 காப்பீட்டு விகிதத்தையும் பேணியுள்ளது.

இச்செயற்பாடு குறித்து கருத்துத் தெரிவித்த HNB PLCஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. தமித் பல்லேவத்த அவர்கள், “மாறிவரும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப உள்நாட்டுப் பொருளாதாரம் தொடர்ந்தும் தன்னை இசைவாக்கிக் கொண்டு வருகின்ற சூழலில், 2026 செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் HNB வலுவான நிதிப் பெறுபேறுகளை ஈட்டியுள்ளது. சமநிலையான நிதி மூலதனக் கலவையையும் வலுவான CASA நிலையையும் பேணியவாறு, கடன் வழங்கல் மற்றும் வைப்புக்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் நாம் தொடர்ந்தும் ஆரோக்கியமான வளர்ச்சியைக் கண்டுள்ளோம். எமது வியாபாரத்தை விரிவுபடுத்திய போதிலும், வலுவான மூலதன மற்றும் திரவத்தன்மை நிலைகளைப் பேணிக்கொண்டு, வலுவிழப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதில் அளவானதும் நிதானமானதுமான அணுகுமுறையை நாம் கடைப்பிடித்தோம். பொறுப்புடன் வளர்ச்சியடைதல், இடர்களைத் திறம்பட நிர்வகித்தல் மற்றும் எமது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கு வங்கி எப்போதும் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றிலேயே எமது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.” என தொிவித்தார்.

HNB පළමු මාස 9 තුළ...
අවදානම් කළමනාකරණය සහ අභියෝගවලට ඔරොත්තු...
First Capital Holdings, சவாலான சந்தைச்...
රසවත් කැරමල් පුඩිං නිෂ්පාදනයක්, සාර්ථක...
முதல் 9 மாதங்களில் வலுவான நிதிச்...
Adfactors PR Lanka’s Young Zeals...
China Unicom and Huawei Build...
Softlogic Life puts Sri Lanka...
Adfactors PR Lanka’s Young Zeals...
China Unicom and Huawei Build...
Softlogic Life puts Sri Lanka...
Sampath Bank Delivers 15% Growth...