லங்கா பிறீமியர் லீக் 2026: Gallant Sports and Media நிறுவனத்தின் புதிய உரிமையின் கீழ் களமிறங்கும் காலி அணி

Share

Share

Share

Share

எதிர்வரும் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 6ஆவது லங்கா பிறீமியர் லீக் தொடரில் களமிறங்கும் காலி அணியின் புதிய பெயர், அதன் உரிமையாளர் மற்றும் பயிற்சியாளர் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை IPG நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு எல்பிஎல் தொடரில் ‘கேலண்ட் ஸ்போர்ட்ஸ் அண்ட் மீடியா எல்எல்சி’ (Gallant Sports and Media LLC) நிறுவனத்தின் முழுமையான உரிமையின் கீழ் ‘கோல் கெலண்ட்ஸ்’ (Galle Gallents) என்ற பெயருடன் காலி அணி களமிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரண் மந்திரிபிரகடா (Kiran Mantripragada) மற்றும் உதய் கிரண் நம்பல்லா (Uday Kiran Namballa) ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இயங்கும் இந்த நிறுவனம், இலங்கையின் முதன்மை கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான லங்கா பிறீமியர் லீக் தொடரில் களமிறங்கும் காலி அணியின் கிரிக்கெட், வணிகம் மற்றும் ஊடக மூலோபாயங்களை முழுமையாக வழிநடத்தவுள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டு எல்பிஎல் தொடரில் களமிறங்கும் கோல் கெலண்ட்ஸ் அணியின் பலத்தை அதிகரிக்கும் நோக்கில், இலங்கையின் அணியின் முன்னாள் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரும், நேபாளம், கனடா ஆகிய நாடுகளின் முன்னாள் பயிற்சியாளரும், அமெரிக்க அணியின் தற்போதைய பயிற்சியாளருமான புபுது தசநாயக்க அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

லங்கா பிறீமியர் லீக் தொடரானது தனது போட்டித்தன்மை, நேரடி ஒளிபரப்பு மற்றும் வணிக ரீதியான சந்தை மதிப்பை உலகளவில் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் வேளையில், இப்புதிய நிர்வாக மாற்றம் கோல் கெலண்ட்ஸ் அணியின் வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. அதேபோல, எல்பிஎல் தொடரின் 6ஆவது அத்தியாயம் முன்னணி உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்களின் வலுவான கூட்டணியை ஒன்றிணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இத்தொடரானது கிரிக்கெட்டையும் தாண்டி, நாட்டின் சுற்றுலாத்துறை, ஊடகம், விளம்பர அனுசரணை, விருந்தோம்பல் மற்றும் ரசிகர்களின் பங்களிப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் பரந்த அளவிலான புதிய வாய்ப்புகளையும், வணிக ரீதியான வளர்ச்சியையும் உருவாக்கும் என நம்பப்படுகிறது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த லங்கா பிறீமியர் லீக்கின் பணிப்பாளர் சமந்த தொடங்வெல, “லங்கா பிறீமியர் லீக் 6ஆவது அத்தியாயத்தின் ஒரு அங்கமாக ‘கோல் கெலண்ட்ஸ்’ அணியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. விளையாட்டுத் துறையில் இத்தகைய அர்ப்பணிப்புள்ள உரிமையாளர்களின் தொடர்ச்சியான வருகையானது, இந்த லீக் தொடரின் நீண்டகால தொலைநோக்கு பார்வையை மேலும் வலுப்படுத்துகிறது. அத்துடன், இலங்கையில் அதிக போட்டித்தன்மை வாய்ந்த, வணிக ரீதியாக நிலையான ஒரு சிறந்த டி20 லீக் தொடரை நடத்த இது எங்களுக்கு பெரிதும் உதவும். இத்தொடரின் தரம், உலகளாவிய பிரபலம் மற்றும் விறுவிறுப்பு ஆகியவற்றை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் கோல் கெலண்ட்ஸ் அணி தனது சிறந்த பங்களிப்பை வழங்கும் என நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.” என்று குறிப்பிட்டார்.

இன்னோவேட்டிவ் புரொடக்ஷன் குரூப் (Innovative Production Group FZ, LLC) தளத்தின் கீழ், அர்பன்-க்ரோ ((urban-gro, Inc.) மற்றும் ஃபிளாஷ் ஸ்போர்ட்ஸ் & மீடியா (Flash Sports & Media, Inc.) நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் உத்தியோகபூர்வ லீக் கட்டமைப்பிற்குள் இணைந்து கோல் கெலண்ட்ஸ் அணி இந்த ஆண்டு லங்கா பிறீமியர் லீக் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த அணியானது கெலண்ட் ஸ்போர்ட்ஸ் அண்ட் மீடியா எல்எல்சி நிறுவனத்தின் கீழ் முற்றிலும் சுதந்திரமான ஒரு தனித்துவமான பிராஞ்சைஸாக இயங்கும் அதேவேளையில், 2026 ஆம் ஆண்டுக்கான அத்தியாயத்தின் மூலம் உருவாக்கப்படும் பரந்த லீக் கட்டமைப்பு மற்றும் வணிக ரீதியான வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இணைந்து செயல்படும்.

இந்த புதிய மாற்றம் குறித்து ஐபிஜி குளோபல் நிறுவனத்தின் நிறுவனரும், தலைவருமான அனில் மோகன் கூறுகையில், “சர்வதேச அளவில் வளர்ந்து வரும், அனைவரது கவனத்தை ஈர்த்து வரும் லங்கா பிறீமியர் லீக், கிரிக்கெட் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் தொடர்ந்து ஒரு மதிப்புமிக்க தொடராக பரிணமித்து வருகிறது. இப்புதிய நிர்வாகத்தின் கீழ் ‘கோல் கெலண்ட்ஸ்’ அணியின் வருகையானது, இந்த லீக் தொடரின் எதிர்காலத்தின் மீது முதலீட்டாளர்களும் விளையாட்டுத் துறை சார்ந்த தொழில்முனைவோரும் கொண்டுள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. பலமான அணிகளின் பங்கேற்பு, உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இலங்கைக்குப் பயனளிக்கும் அர்த்தமுள்ள வணிக வாய்ப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இப்புதிய பருவகாலத்தை ஆதரிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.” என்று தெரிவித்தார்.

லங்கா பிறீமியர் லீக் 6ஆவது அத்தியாயத்திற்கான வீரர்கள் வரைபிற்கு முன்னதாக, ஒரு பலமான அணியைக் கட்டமைக்கும் உத்தியின் ஒரு பகுதியாக, முன்னணி இலங்கை வீரர்கள் மற்றும் சர்வதேச நட்சத்திர வீரர்களை Marquee players என்ற பிரிவின் கீழ் தங்கள் அணியில் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை கோல் கெலண்ட்ஸ் நிர்வாகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. அதன்படி, சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்களான டேவிட் வோர்னர், கேன் வில்லியம்சன், சகிப் அல் ஹசன், சாஹிப்சாதா ஃபர்ஹான், சுனில் நரைன் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் போன்ற முன்னணி வீரர்களின் பெயர்கள் தற்போது பரிசீலனையில் உள்ளன. எனினும், இறுதி வீரர்கள் தேர்வு என்பது வீரர்கள் வரைபு முடிவுகள், வீரர்களின் பதிவு, ஒப்பந்த நடைமுறைகள், அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் சபைகளின் ஒப்புதல்கள் மற்றும் தேவையான தடையில்லாச் சான்றிதழ்கள் (NOC) ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.

இதனிடையே, கோல் கெலண்ட்ஸ் அணியின் உரிமையாளர் குழுவின் பிராந்திய பங்களிப்பு, செயல்பாட்டுத் திட்டமிடல் மற்றும் நீண்டகால பிராஞ்சைஸ் வளர்ச்சி ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கில், இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க கிரிக்கெட் வீரரான ரோய் சில்வா, கோல் கெலண்ட்ஸ் அணியின் மூலோபாய பங்காளர் மற்றும் பிரதம செயல்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், கிரிக்கெட், ஊடகம், விளம்பர அனுசரணை மற்றும் ரசிகர்களுடனான தொடர்பு ஆகியவற்றில் கோல் கெலண்ட்ஸ் என்ற வர்த்தகநாமத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சரத் ஸ்ரீராமோஜு தலைமை மூலோபாய அதிகாரியாக சந்தைப்படுத்தல் மற்றும் மூலோபாய முயற்சிகளை முன்னின்று வழிநடத்தவுள்ளார்.

இது தொடர்பில் கெலன்ட் ஸ்போர்ட்ஸ் மற்றும் மீடியா எல்எல்சி நிறுவனத்தின் உரிமையாளரும், பிரதானியுமான கிரண் மந்திரிப்ரகடா கருத்து தெரிவிக்கையில், “கோல் கெலண்ட்ஸ் அணியின் உரிமையைப் பெற்றிருப்பது என்பது, இலங்கை வீரர்களின் திறமைகளை மையமாகக் கொண்டு, சர்வதேச அனுபவங்களின் துணையோடும், பலமான கிரிக்கெட் வழிகாட்டுதலோடும் ஒரு ஒழுக்கமான, போட்டித்தன்மை வாய்ந்த அணியைக் கட்டமைப்பதற்கான எங்களது நீண்டகால அர்ப்பணிப்பாகும். லங்கா பிறீமியர் லீக் தொடரானது கிரிக்கெட் விளையாட்டை வளர்ப்பதற்கும், வணிக மதிப்பை மேம்படுத்துவதற்கும், இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை ஒன்றிணைப்பதற்கும் ஒரு சக்திவாய்ந்த தளமாக விளங்குகிறது. ஒரு தெளிவான நோக்கத்தோடு விளையாடி, காலியின் பெருமையை பிரதிபலிப்பதுடன், இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு சாதகமான பங்களிப்பை வழங்கும் ஒரு சிறந்த அணியாக கோல் கெலண்ட்ஸை உருவாக்குவதே எங்களது முக்கிய நோக்கமாகும்.” என்று குறிப்பிட்டார்.

காலி கெலண்ட்ஸ் அணியின் திறமையான விளையாட்டுத் திறன், சமூகத்துடனான நெருங்கிய தொடர்பு மற்றும் வணிக ரீதியிலான கூட்டாண்மைகள் ஆகியவற்றின் துணையோடு, விளையாட்டு மற்றும் விளையாட்டு ஊடகத் துறையில் ஒரு நிலையான, மதிப்புமிக்க சொத்தாக இந்த பிராஞ்சைஸை உருவாக்குவதில் தங்களது நிர்வாகம் கவனம் செலுத்தும் என அதன் உரிமையாளர் குழு தெரிவித்துள்ளது. மேலும், வரவிருக்கும் லங்கா பிறீமியர் லீக் தொடருக்கு முன்னதாக அணியின் வீரர்கள் தேர்வு, உறுதிப்படுத்தப்பட்ட வீரர்கள், புதிய கூட்டாண்மைகள் மற்றும் ரசிகர்களைக் கவரும் வகையிலான பல்வேறு சுவாரஸ்யமான முயற்சிகள் குறித்த அடுத்தடுத்த உத்தியோகபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

ශ්‍රී ලංකාවේ ඖෂධ නිෂ්පාදනය ඉහළ...
இலங்கையில் மருந்து உற்பத்தியை வலுப்படுத்துவதற்கு கைகோர்க்கும்...
கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் புதிய...
உணவு மேசையில் குடும்பங்களை ஒன்றிணைக்கும்‘TikTok அப்பா’
Mahindra Ideal Finance කොළඹ ප්‍රධාන...
Xiaomi 17T அறிமுகத்துடன், Xiaomi இன்...
காலி நகரின் பிரம்மாண்டமான கொண்டாட்டங்களுக்கான புதிய...
அகமதாபாத் – கொழும்பு இடையே நேரடி...
Xiaomi 17T அறிமுகத்துடன், Xiaomi இன்...
காலி நகரின் பிரம்மாண்டமான கொண்டாட்டங்களுக்கான புதிய...
அகமதாபாத் – கொழும்பு இடையே நேரடி...
Perituza engages Sri Lanka’s agency...