இலங்கையின் மிகப்பெரிய ஆடை ஏற்றுமதியாளரும், தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப உற்பத்தி நிறுவனமுமான MAS Holdings, 2024 பாரிஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றும் இலங்கை பரா அணியின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக இணைந்து கொண்டுள்ளது.
இதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பும், ஆடை அறிமுக நிகழ்வும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி கொழும்பில் மிக விமர்சையாக இடம்பெற்றது.
இதன்படி, இம்முறை பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து இலங்கை பாரா வீர வீராங்கனைகளுக்கும் மரியாதை அணி வகுப்புக்கான ஆடையுடன், தடகளம், நீச்சல் மற்றும் சக்கர நாற்காலி டென்னிஸ் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளுக்கான விளையாட்டு ஆடைகளை MAS Holdings வழங்கவுள்ளது.
இந்த ஆடைகள் வசதியான மற்றும் சிறந்த செயல்திறனை உறுதி செய்யும் சிறப்பு செயல்பாட்டு அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக, மரியாதை அணி வகுப்புக்காக வடிவமைக்கப்பட்ட ஆடையில் காற்றோட்டம் மற்றும் சுவாசிக்கும் தன்மையை வழங்கும் தொப்பியுடனான ஜாக்கெட் உள்ளது. இதில் சரி செய்யக்கூடிய கயிறு மற்றும் காந்த ஜிப்பரும் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பல்வகை பயன்பாட்டிற்கேற்ற முறையில் Track bottoms ஐ shorts ஆக மாற்றிக் கொள்ள முடியும். மேலும் வீரர்களின் வசதிக்காக Polo சட்டையில் நீளமாக விரிவாக்கக்கூடிய இழுப்பான் வளையத்துடன் கூடிய ஜிப்பர் (Zipper) உள்ளது.
இதனிடையே, தனித்துவமான வீரர்களின் உடல் அமைப்புக்கு ஏற்றவாறு தனிப்பயனாக்கப்பட்ட நீச்சல் ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதுமாத்திரமின்றி, சக்கர நாற்காலி டென்னிஸ் வீரர்களுக்கான குட்டை கால்சட்டைகள் (shorts) அதிக நெகிழ்வுத்தன்மை கொண்ட துணியால் தயாரிக்கப்பட்டு, தூண்டலிற்கு துலங்கல் அளிக்கக்கூடிய இடுப்புப்பட்டிகள் மற்றும் எளிதில் பயன்படுத்தக்கூடிய பொத்தான்கள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இது தவிர, 2024 பாரிஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காக தடகள வீரர்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ள ஆடைகள், இலங்கையில் காணப்படும் அதிகளவான வனவிலங்குகளின் வடிவங்களால் ஈர்க்கப்பட்டுள்ளது. அதன் அச்சு வடிவமைப்புகள் இலங்கையின் அடையாளமான சிங்கத்துடன், சிறுத்தை, காட்டுக்கோழி மற்றும் சிங்க மீன் போன்ற இலங்கைக்கு உரித்தான விலங்குகளிலிருந்து எடுக்கப்பட்ட வடிவங்களின் கலவையை பிரதிபலிக்கின்றன. அத்துடன், பாராலிம்பிக் வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள T-Shirts இல் வீரமான சிங்கத்தின் அச்சு மற்றும் இலங்கையின் தேசியக் கொடி ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களைக் கண்டறிந்த MAS நிறுவனம், 2019 ஆம் ஆண்டில் முதன்முறையாக தனித்துவமான ஆடை வடிவமைப்பு துறைக்குள் நுழைந்தது. இதன் மூலம் சுய உதவியின்றி ஆடை அணிய முடிவதற்கான வசதிகளைக் கொண்ட புத்தாக்கமான ஆடை தயாரிப்புகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டது. அந்தவகையில், MAS நிறுவனம் 2021 ஆம் ஆண்டு முதன்முறையாக தேசிய பாராலிம்பிக் சங்கத்துடன் இணைந்து உள்நாட்டிலும், உலகளாவிய ரீதியிலும் நடைபெறுகின்ற பயிற்சிகள், தெரிவுப் போட்டிகள் உள்ளிட்ட அனைத்துவிதமான போட்டிகளிலும் பங்குபற்றுகின்ற பரா வீர வீராங்கனைகளுக்கு, வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறான ஆடைகளையும், செயல்திறனான ஆடைகளையும் வழங்கியது.
இந்த நிலையில், 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் பங்குபற்றும் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளராக இணைந்து கொண்டமை தொடர்பில் MAS Holdings நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் பல வருடங்களாக செய்து வருவதைப் போன்று, உலக அரங்கில் இலங்கையின் பரா விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களின் செயல்பாடுகள் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளது, மேலும் இந்த தொடர்ச்சியான அர்ப்பணிப்புடன், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள போட்டிகளில் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நாங்கள் நம்புவதுடன் அவர்கள் மீது நாங்கள் பெரும் எதிர்பார்ப்பையும் கொண்டுள்ளோம்.” என தெரிவித்தார்.
இதேவேளை, தேசிய பாராலிம்பிக் சங்கத்தின் தலைவரும், 2024 பாரிஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான இலங்கைக் குழுவின் தலைவருமான லெப்டினன்ட் கேர்னல் தீபால் ஹேரத் கருத்து தெரிவிக்கையில், MAS உடனான இந்த ஒத்துழைப்பு எங்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் இது எமது வீர வீராங்கனைகளுக்கு உலகளாவிய போட்டியாளர்களுக்கு இணையான, மிக உயர்ந்த தரமான ஆடைகளை அவர்களின் போட்டிகளுக்காக வழங்குவதை உறுதி செய்கிறது. இந்த கூட்டாண்மை எமது வீரர்களை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது என கூறினார்.
MAS Holdings நிறுவனம், 450க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது, இது பணியிடத்தில் உள்ளீர்த்தல் மற்றும் சம வாய்ப்புகளை வளர்ப்பதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. அத்துடன், MAS நிறுவனம் மற்றும் இலங்கை தேசிய பாராலிம்பிக் சங்கம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டாண்மை, MAS இன் அர்ப்பணிப்புள்ள அணுகக்கூடிய ஆடை உற்பத்தி நாமத்தின் Lable மூலம், பரந்த சமூகத்திற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.