2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் 20% இலாப வளர்ச்சியைப் பதிவு செய்தது CIC Holdings: குழுமத்தின் மொத்த சொத்துக்கள் ரூ. 100 பில்லியனைக் கடந்து சாதனை!

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி வணிகக் குழுமமான CIC ஹோல்டிங்ஸ் பிஎல்சி (CSE: CIC) நிறுவனம், 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் 20% வலுவான இலாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், குழுமத்தின் மொத்த சொத்துக்கள் ரூ. 100 பில்லியனைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ள CIC ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனம், சவால்கள் நிறைந்த வர்த்தகச் சூழலுக்கு மத்தியிலும் 2026 ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் (1QFY27) தனது பன்முகப்படுத்தப்பட்ட வணிகங்களின் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக தொடர்ச்சியான வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்து இலாபத்தை அதிகரித்துள்ளது. இதன்படி. குழுமம் ரூ. 22.03 பில்லியன் ஒருங்கிணைக்கப்பட்ட வருவாயைப் பதிவு செய்துள்ளதுடன், இது ஆண்டிற்கு ஆண்டு 2.74% வளர்ச்சியாகும்.

குழுமத்தின் மொத்த இலாபம் 10.26%அதிகரித்து ரூ. 6.01 பில்லியனாக உயர்ந்துள்ளதுடன், மொத்த இலாப வரம்பு சுமார் 27.3% ஆக மேம்பட்டுள்ளது. கட்டுக்கோப்பான வணிகச் செயல்பாடு, மேம்படுத்தப்பட்ட செயல்பாட்டுத் திறன் மற்றும் முக்கிய வணிகத் துறைகளின் வலுவான பங்களிப்பு ஆகியவற்றின் காரணமாக குழுமத்தின் செயல்பாட்டு இலாபம் 12.70% அதிகரித்து ரூ. 3.20 பில்லியனாக உயர்ந்துள்ளது. வரிக்குப் பிந்தைய இலாபம் 19.69% அதிகரித்து ரூ. 1.81 பில்லியனாகவும், நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு உரித்தான இலாபம் 23.24% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் ரூ. 1.51 பில்லியனாகவும் உயர்ந்துள்ளது.

CIC இன் விவசாயத் தீர்வுகள் துறை, மொத்த துறைசார் வருவாயில் சுமார் 45% பங்களிப்பை வழங்கி குழுமத்தின் மிகப்பெரிய பங்களிப்பாளராகத் திகழ்கிறது. கால்நடைத் தீர்வுகள் மற்றும் சுகாதார மற்றும் தனிநபர் பராமரிப்பு ஆகிய துறைகள் தலா 22% பங்களிப்பையும், தொழில்துறைத் தீர்வுகள் மொத்த வருவாயில் சுமார் 12% பங்களிப்பையும் வழங்கியுள்ளன.

இக்காலப்பகுதியில் கால்நடைத் தீர்வுகள் மற்றும் தொழிற்துறைத் தீர்வுகள் ஆகிய இரு துறைகளும் வருவாய் மற்றும் இலாபத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்து வலுவான மீட்சியைக் காட்டியுள்ளன. விலங்கு உணவுகளின் அதிக விற்பனை, கோழி இறைச்சிக்கான தேவை மற்றும் கால்நடை மருத்துவப் பராமரிப்புத் துறையின் வளர்ச்சி ஆகியவற்றால் கால்நடைத் தீர்வுகள் துறை தொடர்ந்து பயன்பெற்றுள்ளது.அதேவேளை சந்தை தேவை அதிகரிப்பு மற்றும் திறம்படச் செயல்படுதல் ஆகியவற்றின் ஆதரவுடன் தொழில்துறை தீர்வுகள் துறை வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. விவசாயத் தீர்வுகள் துறை, பருவக்கால காரணிகளால் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சரிவைக் கண்டபோதிலும், அது குழுமத்தின் மிகப்பெரிய வணிகத் துறையாக நீடிப்பதுடன் ஒட்டுமொத்த செயல்திறனுக்கும் தொடர்ந்து வலுசேர்த்துள்ளது. சுகாதார மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறை, மருந்துகள் மற்றும் நுகர்வோர் சுகாதாரப் பொருட்களின் தொடர்ச்சியான விற்பனை மூலம் நிலையான வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

குழுமத்தின் வட்டி மற்றும் வரிக்கு முந்தைய இலாபம், முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ. 2.84 பில்லியனாக இருந்த நிலையில் இம்முறை ரூ. 3.20 பில்லியனாக நிறைவடைந்துள்ளது. வரிக்கு முந்தைய இலாபம் 17.52% அதிகரித்து ரூ. 2.76 பில்லியனாக உயர்ந்துள்ளது. அதேவேளை, இக்காலப்பகுதியில் அதிக நடைமுறை மூலதனத் தேவைகள் காரணமாக நிகர நிதிச் செலவுகள் 16.38% அதிகரித்து ரூ. 676.67 மில்லியனாக உயர்ந்துள்ளது.

ஆய்வுக்குட்பட்ட இக்காலகட்டத்தில், விவசாயத் தீர்வுகள், கால்நடைத் தீர்வுகள், தொழில்துறை தீர்வுகள் மற்றும் சுகாதார மற்றும் தனிநபர் பராமரிப்பு ஆகிய நான்கு செயல்பாட்டுத் துறைகளின் கீழ் உள்ள முக்கிய குழும வணிகங்கள் தங்களின் நிலையான ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளன. கால்நடைத் தீர்வுகள் துறையின் வருவாய் ரூ. 4.45 பில்லியனிலிருந்து ரூ. 4.90 பில்லியனாக அதிகரித்துள்ளது.

தொழில்துறை தீர்வுகள் துறை மிக வலுவான வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ. 1.87 பில்லியனிலிருந்து ரூ. 2.63 பில்லியனாக உயர்ந்துள்ளது. சுகாதார மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையின் வருவாய் ரூ. 4.73 பில்லியனிலிருந்து ரூ. 4.80 பில்லியனாக அதிகரித்துள்ளதுடன், விவசாயத் தீர்வுகள் துறை ரூ. 9.97 பில்லியன் வருவாயைப் பதிவு செய்துள்ளது.

இலாபத்தைப் பொறுத்தவரை, கால்நடைத் தீர்வுகள் துறை 111.37% அதிகரித்து ரூ. 660.25 மில்லியனை எட்டி மிக வலுவான இலாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தொழில்துறை தீர்வுகள் துறை 62.22% வளர்ச்சியடைந்து ரூ. 533.90 மில்லியனாக உயர்ந்துள்ளது. விவசாயத் தீர்வுகள் துறை ரூ. 1.08 பில்லியனுடன் மிகப்பெரிய இலாபப் பங்களிப்பாளராகத் திகழ்கிறது, அதேவேளை, சுகாதார மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறை ரூ. 662.51 மில்லியனைப் பங்களித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, நிகர துறைசார் முடிவுகள் 11.84% அதிகரித்து ரூ. 2.94 பில்லியனாக உயர்ந்துள்ளது, இது குழுமம் முழுவதும் பரவலான செயல்பாட்டு மீள்தன்மையைப் பிரதிபலிக்கிறது.

குழுமத்தின் ஒரு பங்கிற்கான வருவாய் ரூ. 0.65 இலிருந்து ரூ. 0.80 ஆக உயர்ந்து, ஆண்டிற்கு ஆண்டு 23.08% மேம்பாட்டைக் காட்டுகிறது. மொத்த சொத்துக்கள் ரூ. 100 பில்லியன் மைல்கல்லைக் கடந்து ரூ. 100.14 பில்லியனை எட்டியுள்ளதுடன், மொத்த பங்கு மூலதனம் ரூ. 55.69 பில்லியனாக அதிகரித்து, குழுமத்தின் நிதி நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இந்த நிதிப் பேறுகள் குறித்து கருத்து தெரிவித்த CIC ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அரோஷன் சேரசிங்க, “குழுமம் 2027 நிதியாண்டை நேர்மறையான தொடக்கத்துடன் ஆரம்பித்துள்ளதுடன், கட்டுப்பாடான வணிகச் செயல்பாடு மற்றும் எங்களது பன்முகப்படுத்தப்பட்ட வணிகங்களின் வலிமை மூலம் மேம்பட்ட இலாபத்தை ஈட்டியுள்ளது. இக்காலாண்டில் குறிப்பாக கால்நடைத் தீர்வுகள் மற்றும் தொழில்துறை தீர்வுகள் மிகச் சிறந்த செயல்திறனைப் பதிவு செய்துள்ளன, அதேநேரத்தில் சுகாதார மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறை தொடர்ந்து நிலையான வளர்ச்சியை வழங்கியுள்ளது. பருவகால காரணிகளால் விவசாயத் தீர்வுகள் துறை பாதிக்கப்பட்டபோதிலும், இலங்கையின் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கான எங்களது நீண்டகால அர்ப்பணிப்பில் மாற்றமில்லை. சேயல்பாட்டு சிறப்பு, புத்தாக்கம் மற்றும் எமது வாடிக்கையாளர்கள், விவசாய சமூகங்கள், பங்குதாரர்கள் மற்றும் பிற அனைத்துப் பங்காளிகளுக்கும் நிலையான மதிப்பை உருவாக்குவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.” எனக் குறிப்பிட்டார்.

BYD මඩකලපුවේ නව ප්‍රදර්ශනාගාරයක් විවෘත...
A Milestone Driven by Customer...
Samsung Sri Lanka Celebrates Retail...
Hyundai වාහන සඳහා සුවිශේෂී ලීසිං...
SHRM strengthens Sri Lanka presence,...
Momentro Expands AI-Led Impact Across...
Advantis අනුග්‍රහයෙන් මොරටුව විශ්වවිද්‍යාලයේ Falcon...
වේගවත් වර්ධනයක්, විශ්වාසවන්ත සේවාවක්: JKCG...
Momentro Expands AI-Led Impact Across...
Advantis අනුග්‍රහයෙන් මොරටුව විශ්වවිද්‍යාලයේ Falcon...
වේගවත් වර්ධනයක්, විශ්වාසවන්ත සේවාවක්: JKCG...
Kandy Myst by Cinnamon Presents...