Mahindra Ideal Finance PLC ஸ்ரீலங்காவில் Toyota மற்றும் HINO வாகனங்களுக்கான ஒரே பிரதிநிதியும் விநியோகஸ்தருமான டொயோட்டா லங்கா தனியார் நிறுவனத்துடன் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள டொயோட்டா லங்கா வாடிக்கையாளர்களுக்காக சிறப்பான வாகன நிதி வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த கூட்டாண்மையின் கீழ், டொயோட்டா லங்கா நிறுவனத்திடமிருந்து வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், MIFL இன் “Leasing Ideal Draft” மற்றும் “Vehicle Loan Scheme” ஆகிய முக்கிய நிதிச் சேவைகள் மூலம் மிகவும் சாதகமான வட்டி விகிதங்களிலும், குறைந்தபட்ச சேவைக் கட்டணங்களிலும் நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கை முழுவதும் 38 கிளைகளைக் கொண்ட வலையமைப்பை உடைய MIFL, வாகன மற்றும் சொத்து நிதியளிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த கூட்டாண்மை மூலம், அந்த சேவைகள் டொயோட்டா லங்காவின் விநியோக வலையமைப்பிற்கும் மேலும் விரிவுபடுத்தப்படுகின்றன. இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் தாங்கள் வாகனத்தை வாங்க முடிவு செய்யும் இடத்திலேயே ஒழுங்கான நிதி வசதிகளை நேரடியாகப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.
வத்தளையில் அமைந்துள்ள டொயோட்டா லங்காவின் பிரதான அலுவலகத்தில், Mahindra Ideal Finance நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான முஃபாதல் சூனியா, பிரதான செயல்பாட்டு அதிகாரி ரோஹித்த பந்துசேன மற்றும் டொயோட்டா லங்காவின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மனோஹர அத்துகோரல ஆகியோரால் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உத்தியோகப்பூர்வமாக கையெழுத்திடப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த, MIFL இன் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான முஃபாதல் சூனியா அவர்கள்: “டொயோட்டா லங்காவுடன் ஏற்படுத்திக்கொண்ட இந்த கூட்டாண்மை, எங்கள் வணிகப் பயணத்தில் முக்கியமான ஒரு படிக்கல் ஆகும். இதன் மூலம் வாகன நிதியளிப்பு துறையில் எங்கள் இருப்பு மேலும் வலுப்பெறும் அதேவேளை, வாடிக்கையாளர்கள் தங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான கொள்முதல்களை மேற்கொள்ளும் தருணத்தில் அவர்களுக்கு அருகில் நிலைத்திருக்க இது எங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. சேவைகளை எளிதில் பெற்றுக் கொள்ளக்கூடிய தன்மையும், நம்பகத்தன்மையும் எங்கள் வணிகத்தின் அடிப்படை அஸ்திவாரமாகும். இந்த ஒத்துழைப்பின் மூலம், அந்த நம்பகமான அர்ப்பணிப்பை டொயோட்டா லங்கா வாடிக்கையாளர் வலையமைப்பிற்கும் விரிவுபடுத்துவதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என தெரிவித்தார்.
“அனைவருக்கும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தல் (Mobility for All) எனும் டொயோட்டா லங்கா நிறுவனத்தின் தூரநோக்குப் பார்வையின் முக்கிய நோக்கம், இலங்கை முழுவதும் உள்ள மக்களுக்கு வாகன உரிமையையும் போக்குவரத்துத் தேவைகளையும் மேலும் எளிதாக நிறைவு செய்வதற்கு வழிவகுப்பதாகும். MIFL உடன் ஏற்படுத்திக்கொண்ட இந்த கூட்டாண்மை, அந்த நோக்கத்தை அடையும் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படியாகும். இதன் மூலம் அதிகமான வாடிக்கையாளர்களை சென்றடைந்து, அவர்களுக்கு நம்பகமான மற்றும் வசதியான நிதி தீர்வுகளை வழங்குவதற்கு எங்களுக்கு சாத்தியம் கிடைக்கிறது,” என டொயோட்டா லங்காவின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மனோஹர அதுகோரல அவர்கள் தெரிவித்தார்.
இந்த கூட்டாண்மையின் மூலம், இலங்கையின் வாகன நிதியளிப்பு துறையில் தனது வணிக நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும், வாடிக்கையாளர்களிடையே மேலும் நெருங்கிச் செல்வதற்கும் MIFL நடவடிக்கை எடுத்து வருகிறது. Fitch Ratings நிறுவனத்திடமிருந்து நிலையான AA-(lka) தரவரிசையைப் பெற்றுள்ள MIFL, கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட கடன் பத்திரங்களைக் கொண்ட நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.




