சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்க கொள்கை ரீதியான சீர்திருத்தங்கள் அவசியம்
கொழும்பு: இலங்கையின் சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் உலகளாவிய சந்தைகளை அணுகுவதற்கும் E commerce துறை முக்கிய வாய்ப்புகளை வழங்குவதாக ODI Global மற்றும் SLASSCOM இணைந்து வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
“E commerce and International Trade in Sri Lanka: Findings from a Survey of 953 Exporters and Importers” என்ற தலைப்பிலான இந்த ஆய்வறிக்கை, இலங்கையில் டிஜிட்டல் வர்த்தகம் ஏற்படுத்திவரும் மாற்றங்கள், ஏற்றுமதித் துறைக்கான புதிய வாய்ப்புகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்துவதற்குத் தேவையான கொள்கை ரீதியான சீர்திருத்தங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளது.
ODI Global மற்றும் SLASSCOM இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்வு, ஒக்டோபர் 8ஆம் திகதி கொழும்பு 03இல் அமைந்துள்ள ICTA கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பிரதம ஆலோசகரும் GOV Tech Sri Lanka நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, ODI Global நிறுவனத்தின் சர்வதேச பொருளாதார அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் டிர்க் வில்லெம் டெ வெல்டே உள்ளிட்ட அரச மற்றும் தனியார் துறைப் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். கலாநிதி கணேசன் விக்னராஜா மற்றும் அனிஷ்கா டி சில்வா ஆகியோர் ஆய்வின் முக்கிய கண்டறிதல்களை முன்வைத்தனர்.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன,
“இலங்கையின் வர்த்தக நிறுவனங்கள், குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் சர்வதேச சந்தைகளை அணுகுவதற்கு E commerce குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்குகின்றது. வர்த்தக நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து விநியோகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், சர்வதேச சந்தைகளில் போட்டியிடுவதற்குத் தேவையான திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும். இலங்கையின் டிஜிட்டல் வர்த்தகத்தை முன்னேற்றுவதற்குத் தேவையான கொள்கைச் சீர்திருத்தங்களைத் தீர்மானிப்பதற்கு இந்த ஆய்வறிக்கை முக்கிய ஆதாரங்களை வழங்குகின்றது” எனத் தெரிவித்தார்.
ஆய்வின் முடிவுகளின்படி, இலங்கையில் ஏற்றுமதியில் ஈடுபடும் பத்து நிறுவனங்களில் ஏழு நிறுவனங்கள் ஏற்கனவே E commerce வர்த்தக முறைகளைப் பயன்படுத்துகின்றன. ஆய்வில் பங்கேற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்களில் 72 வீதமானவை E commerce தளங்களைப் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாரம்பரிய ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் வழமையான வர்த்தக முறைகளுக்கு அப்பால், இலங்கையின் ஏற்றுமதித் தளத்தை விரிவுபடுத்துவதற்கு E commerce உதவக்கூடும் என ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
குறிப்பாக SME business நிறுவனங்கள் குறைந்த செலவில் புதிய சந்தைகளைப் பரிசோதிக்கவும், வெளிநாட்டு நுகர்வோருடன் நேரடியாக வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும், சர்வதேச வாடிக்கையாளர் வலையமைப்பை விரிவுபடுத்திக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
E commerce முறைகளைப் பயன்படுத்தும் இலங்கை ஏற்றுமதி நிறுவனங்கள் மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் ஆசிய சந்தைகளில் அதிகளவிலான வர்த்தக வாய்ப்புகளைப் பெற்றுவருகின்றன. மளிகைப் பொருட்கள், பொதியிடப்பட்ட உணவுப் பொருட்கள், சுகாதார மற்றும் அழகுசாதனப் பொருட்கள், இலத்திரனியல் உபகரணங்கள் போன்ற துறைகளில் நுகர்வோருக்கு நேரடியாகப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக முறையும் வளர்ச்சியடைந்து வருகின்றது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய,
“சர்வதேச ரீதியில் போட்டியிடக்கூடிய டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு, நாம் தற்போது எந்த நிலையில் இருக்கின்றோம் என்பதையும், எதிர்காலத்தில் எந்த நிலையை அடைய வேண்டும் என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியமாகும். நிறுவன மட்டத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகைய விரிவான ஆய்வுகள், எமது முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், வர்த்தக நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்களை அறிந்துகொள்வதற்கும், இலங்கையின் டிஜிட்டல் வர்த்தகப் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கான கொள்கைகளையும் செயற்றிட்டங்களையும் வகுப்பதற்கும் முக்கியமான ஆதாரங்களை வழங்குகின்றன” எனக் குறிப்பிட்டார்.
சுங்க நடைமுறைகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் முக்கிய சவால்கள்
இலங்கை நிறுவனங்கள் E commerce வர்த்தகத்தில் இணைந்துகொள்வது மாத்திரம் போதுமானதல்ல என ஆய்வறிக்கை வலியுறுத்துகின்றது.
சுங்க அனுமதி நடைமுறைகள், ஏற்றுமதி ஆவணங்களைத் தயாரித்தல், போக்குவரத்து மற்றும் விநியோகச் செலவுகள், பணப்பரிமாற்ற நடைமுறைகள் ஆகியவற்றில் நிலவும் சிக்கல்கள் டிஜிட்டல் வர்த்தகத்தின் வளர்ச்சிக்குத் தடையாக அமைந்துள்ளன.
அத்துடன் இணையவழிப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத் திறன்களில் காணப்படும் குறைபாடுகளும் நிறுவனங்களின் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளைப் பாதிக்கின்றன.
ஆய்வில் பங்கேற்ற E commerce ஏற்றுமதி நிறுவனங்களில் சுமார் 80 வீதமானவை சிக்கலான ஆவண நடைமுறைகளால் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளன.
மேலும், நிறுவனங்களிலிருந்து நுகர்வோருக்கும், நிறுவனங்களுக்கிடையிலுமான பெரும்பாலான ஏற்றுமதிப் பொருள் விநியோகங்கள் வெளிநாட்டு வாடிக்கையாளர்களைச் சென்றடைவதற்கு இரண்டு வாரங்களுக்கும் அதிகமான காலம் எடுப்பதாக ஆய்வு கண்டறிந்துள்ளது.
இத்தகைய தாமதங்களும் அதிகரித்த வர்த்தகச் செலவுகளும் சர்வதேச சந்தைகளில் இலங்கை நிறுவனங்களின் போட்டித்தன்மையைக் குறைக்கும் காரணிகளாக அமைந்துள்ளன.
டிஜிட்டல் வர்த்தக வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த கொள்கைச் சீர்திருத்தங்கள் அவசியம்
E commerce பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன் மாத்திரம் நின்றுவிடாமல், டிஜிட்டல் வர்த்தகத்திற்குத் தேவையான முழுமையான கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என ஆய்வறிக்கை பரிந்துரைக்கின்றது.
வர்த்தக உட்கட்டமைப்பை நவீனமயப்படுத்துதல், சுங்க மற்றும் ஆவண நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், பொருட்களின் போக்குவரத்து மற்றும் விநியோகக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பாதுகாப்பான பணப்பரிமாற்ற முறைகளை வலுப்படுத்துதல், இணையவழிப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் நடைமுறைசார் டிஜிட்டல் திறன்களை விரிவுபடுத்துதல் என்பன முக்கிய பரிந்துரைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சீர்திருத்தங்கள் சர்வதேச வர்த்தகப் பரிமாற்றங்களை விரைவானதாகவும், எளிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுவதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ODI Global நிறுவனத்தின் வருகைதரு சிரேஷ்ட ஆய்வாளரும் ஆய்வறிக்கையின் இணை ஆசிரியருமான கலாநிதி கணேசன் விக்னராஜா,
“ஏறத்தாழ 1,000 வர்த்தக நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த ஆய்வு, இலங்கையின் சர்வதேச வர்த்தகத்தில் E commerce மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே முக்கிய பங்காற்றுகின்றன என்பதை வெளிப்படுத்துகின்றது. டிஜிட்டல் பொருளாதாரத்தில் சிறு வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொதுக் கொள்கைகளும், அவை எதிர்கொள்ளும் அடிப்படை வர்த்தகச் செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளும் சர்வதேச போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கு மிகவும் அவசியமானவையாகும்” எனத் தெரிவித்தார்.
953 வர்த்தக நிறுவனங்களை உள்ளடக்கிய நாடளாவிய ஆய்வு
இந்த ஆய்வு 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் 2026ஆம் ஆண்டு பெப்ரவரி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 953 வர்த்தக நிறுவனங்கள் ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், இது இலங்கையின் மொத்த சர்வதேச வர்த்தக நிறுவனங்களில் சுமார் 9 வீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
இலங்கையில் E commerce மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கு இடையிலான தொடர்புகளை நிறுவன மட்டத்தில் ஆராய்ந்த முதலாவது ஆய்வாக இது அமைந்துள்ளதுடன், உள்நாட்டு E commerce பயன்பாடு தொடர்பில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இலங்கை E commerce வர்த்தகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ற விவாதத்திலிருந்து, சர்வதேச சந்தைகளில் வெற்றிகரமாகப் போட்டியிடுவதற்கு எத்தகைய கட்டமைப்புகள், திறன்கள் மற்றும் கூட்டாண்மைகள் தேவைப்படுகின்றன என்ற கொள்கைசார் அணுகுமுறைக்கு இந்த ஆய்வறிக்கை முக்கியத்துவம் வழங்கியுள்ளது.
பொருத்தமான கொள்கைச் சூழல் உருவாக்கப்படும் பட்சத்தில், டிஜிட்டல் வர்த்தகத்தின் ஊடாக இலங்கையின் SME business நிறுவனங்களுக்கு புதிய ஏற்றுமதிச் சந்தைகளைத் திறந்துவிடுவதுடன், புத்தாக்க முயற்சிகளை ஊக்குவித்து, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை மேலும் பல்வகைப்படுத்தவும், பொருளாதார மீள்திறனை வலுப்படுத்தவும் முடியும் என அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.



