வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் அனுசரணையின் கீழ் இலங்கை அங்கீகார சபை (SLAB), 15 இணக்க மதிப்பீட்டு அமைப்புகளுக்கு (CABs) அங்கீகாரம் அளிப்பதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இது இலங்கையின் தரமான உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு சர்வதேச வர்த்தகத்திற்கான புதிய வழிகளைத் திறக்கிறது.
உலக அங்கீகார தினம் 2025 உடன் இணைந்து நடைபெற்ற SLAB இன் 20வது ஆண்டு நிறைவு விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தச் சாதனை உலகளாவிய தர நிர்ணயங்களுடன் இணங்குவதற்கும், ஏற்றுமதி போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் இலங்கையின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
“இந்த மைல்கல், எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் கடினமான சர்வதேச தரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்வதன் மூலம் உலகளாவிய சந்தைகளில் இலங்கையின் நிலையை பலப்படுத்துகிறது” என SLAB இன் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி சந்தித எதிரிவீர தெரிவித்தார். “ஐரோப்பிய ஒன்றியத்தின் BESPA-FOOD திட்டத்தால் நடத்தப்பட்ட அங்கீகாரத் தயார்நிலை நிகழ்ச்சித்திட்டம் (ARP), இந்த வெற்றியின் கருவியாக இருந்துள்ளது. இலங்கையின் தேசிய தரமான உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவை வழங்கிய எங்கள் பங்காளர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என தெரிவித்தார்.
அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் Microchem Laboratories (Pvt) Ltd, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை அனுராதபுரம், SLSI Chemical Laboratory, மாகாண உணவு ஆய்வகம், S.A. Silva and Sons (Pvt) Ltd (Silvermill), National Cinnamon Research and Training Center, NARA Microbiology Laboratory, SLINTEC, National Institute of Health Sciences மற்றும் Coconut Development Authority ஆகிய சோதனை ஆய்வகங்கள் அடங்கும். சான்றிதழ் அளிக்கும் நிறுவனமான National Cleaner Production Centerஉம் சுற்றுச்சூழல் லேபளிங்கை சான்றிதழ் அளிப்பதற்கான அங்கீகாரம் பெற்றது. MUSSD ஆய்வகங்களான Dimension Laboratory, Proficiency Testing Unit Chemical Metrology Division மற்றும் Mass Laboratory ஆகியவையும் இதில் அடங்கும்.
இந்த அங்கீகாரங்கள், நிறுவனங்களுக்கு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தடங்காணக்கூடிய சோதனை, அளவீட்டு மற்றும் சான்றிதழ் சேவைகளை வழங்கும் திறனை அளிக்கின்றன. இதன் மூலம், தொழில்துறைகள் ஏற்றுமதி சந்தைகளுக்கான சர்வதேச தரம் மற்றும் ஒழுங்குமுறை தரநிலைகளுடன் இணங்குவதை நிரூபிக்க முடியும்.
“அங்கீகாரம் என்பது நம்பிக்கை மற்றும் போட்டித்தன்மையின் ஒரு மூலக்கல்லாகும்,” என்று ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பின் (UNIDO) தேசிய தர நிபுணர் திருமதி சுமதி ராஜசிங்கம் தெரிவித்தார். “இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம், இலங்கை குறைந்த நடுத்தர வருவாய் நாடுகள் வரிசையில் QI4SD குறியீட்டில் 7வது இடத்திலிருந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது எமது தேசிய தரமான உட்கட்டமைப்பில் ஏற்பட்ட கணிசமான முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது.”
2025 ஆம் ஆண்டு உலக அங்கீகார தினத்தின் கருப்பொருளான “அங்கீகாரம்: சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிகாரமளித்தல்” என்பதற்கு இணங்க, SLAB தனது டிஜிட்டல் அங்கீகார செயல்முறை பணிப்பாய்வு முகாமைத்துவ அமைப்பையும் அறிமுகப்படுத்தியது. இந்தத் தளமானது அங்கீகார சேவைகளை நெறிப்படுத்துகிறது, ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் உலகளாவிய சந்தைத் தேவைகளை எதிர்கொள்ளும் SMEக்களுக்கான செயல்திறன் மற்றும் அணுகலை மேம்படுத்துகிறது.
சர்வதேச வர்த்தகத்தில் இலங்கையை நம்பகமான பங்காளியாக நிலைநிறுத்தி, வலுவான தரமான உட்கட்டமைப்பை வளர்ப்பதற்கும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் SLAB உறுதிபூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.