Softlogic Life நிறுவனத்தின் புதிய வளர்ச்சிப் பாதைக்கு Norfund மற்றும் OP Finnfund Global Impact Fund I ஆகிய சர்வதேச நிறுவனங்கள் நிதியுதவி

Share

Share

Share

Share

கொழும்பு, ஜனவரி 20, 2026: இலங்கையின் முன்னனி காப்புறுதி நிறுவனமான சாஃப்ட்லாஜிக் லைஃப் இன்சூரன்ஸ் (Softlogic Life Insurance PLC), நோர்ஃபண்ட் (Norfund) மற்றும் ஓபி ஃபின்ஃபண்ட் (OP Finnfund Global Impact Fund I) ஆகிய சர்வதேச நிறுவனங்களிடமிருந்து 15 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஐந்தாண்டு கால Tier 2 கடன் உதவியைப் பெற்றுள்ளது.

தொழிற்துறையில் ஒரு முன்மாதிரி நிறுவனமாகத் திகழும் Softlogic Life, இந்த மூலதனத்தின் மூலம் தனது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கவுள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதன் மூலம் பங்குதாரர்களுக்கு அதிக நன்மைகளை வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சவால்களுக்கு மத்தியிலும் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்து வரும் Softlogic Life நிறுவனத்தின் மீதும், இலங்கையின் காப்புறுதித் துறையின் மீதும் சர்வதேச முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இந்த முதலீடு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த முதலீடானது Softlogic Life நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையை வலுப்படுத்துவதுடன், நாடு தழுவிய ரீதியில் அதன் சேவைகளை விரிவுபடுத்தவும், டிஜிட்டல் மற்றும் வாடிக்கையாளர் சேவைத் தளங்களை நவீனப்படுத்தவும் உதவும். சவாலான பொருளாதாரச் சூழலிலும் நிறுவனத்தின் ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்தும் இந்த நடவடிக்கை, அனைத்துத் தரப்பு இலங்கை மக்களுக்கும் சிறந்த காப்புறுதி பாதுகாப்பை வழங்குவதில் இந்நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம் தனது செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தி, காப்புறுதித் துறையில் ஒரு முன்னோடி நிறுவனமாகத் தொடர்ந்து பயணிக்க Softlogic Life திட்டமிட்டுள்ளது.

2025 செப்டெம்பர் 30 ஆம் திகதி நிறைவடைந்த ஒன்பது மாத காலத்தில், Softlogic Life நிறுவனம் குறிப்பிடத்தக்க நிதி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. தேறிய கட்டுப்பணம் ரூ. 28.2 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 29% அதிகரிப்பாகும். ரூ. 6.28 பில்லியன் என்ற இந்த வளர்ச்சி, துறையிலேயே மிக உயர்ந்த மொத்த எழுதப்பட்ட கட்டுப்பண வளர்ச்சியாகும். வரிக்கு முந்தைய இலாபம் ரூ. 3.3 பில்லியனாகவும், மொத்த சொத்துக்கள் ரூ. 59 பில்லியனாகவும், பங்குதாரர் மூலதனம் ரூ. 11.6 பில்லியனாகவும் பதிவாகியுள்ளது. மூலதன உறுதித்தன்மையில் சந்தையை வழிநடத்தும் நிறுவனம், 24% மூலதன வருவாய் விகிதத்தையும், ஒழுங்குமுறை குறைந்தபட்சமான 120% ஐ விட இரு மடங்குக்கும் அதிகமான 298% மூலதன போதுமான விகிதத்தையும் பராமரிக்கிறது.

இக்காலப்பகுதியில் நிறுவனம் ரூ. 13.5 பில்லியன் உரிமை கோரிக்கைகளை வழங்கியுள்ளது. இதில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் திட்டங்களுக்கான ரூ. 9.5 பில்லியன் அடங்கும். இது கடந்த ஆண்டின் ரூ. 8 பில்லியனை விட கணிசமான அதிகரிப்பாகும். வாடிக்கையாளர் நம்பிக்கையை முன்னிறுத்தும் நிறுவனம், 98% க்கும் அதிகமான உரிமை கோரிக்கைகளை ஒரே நாளில் தீர்வு செய்கிறது. விரைவான மற்றும் நியாயமான சேவையின் மூலம் 13 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்களுக்கு Softlogic Life பாதுகாப்பு வழங்கி வருகிறது.

பிராந்தியத்திலேயே தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்ட மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட ஒரு காப்புறுதி நிறுவனமாக உருவாகுவதே Softlogic Life நிறுவனத்தின் எதிர்கால இலக்காகும். காப்புறுதி சேவைகளை எளிதாக்குதல், சேவைத் தரத்தை உயர்த்துதல் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் விரிவான காப்புறுதிப் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டம் (Roadmap) வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக, AI மூலம் காப்புறுதி மதிப்பீடுகளைச் செய்தல், முன்கூட்டியே தரவுகளைக் கணிக்கும் பகுப்பாய்வு, தானியங்கி உரிமை கோரிக்கை மற்றும் டிஜிட்டல் சுகாதாரத் தீர்வுகளைப் பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிவிரைவான மற்றும் அளவிடக்கூடிய சிறந்த சேவைகளை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த முதலீடு தொடர்பில் Norfund நிறுவனத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் Fay Chetnakarnkul கருத்துத் தெரிவிக்கையில், “Softlogic Life நிறுவனம் நிலையான வளர்ச்சி, திட்டமிட்ட மூலதன முகாமைத்துவம் மற்றும் நுண்காப்புறுதி (Microinsurance) உள்ளிட்ட காப்புறுதி சேவைகளை விரிவுபடுத்துவதில் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள குடும்பங்களின் நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் ஒரு நிறுவனத்திற்கு எமது முதலீடு பக்கபலமாக அமைகிறது. Softlogic Life நிறுவனத்தின் நீண்டகால வியூகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி வாய்ப்புகளைக் காண்கிறோம். அவர்களின் அடுத்த கட்ட விரிவாக்கத்தில் பங்காளியாக இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

இந்த நிலையில், Finnfund நிறுவனத்தின் சிரேஷ்ட முதலீட்டு முகாமையாளர் Ulla-Maija Rantapuska கருத்துத் தெரிவிக்கையில், “நிதி ரீதியான முன்னேற்றத்திற்கு அப்பால், சமூகத்தில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துவதையே ‘OP Finnfund Global Impact Fund I’ நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த சமநிலைக்கு Softlogic Life நிறுவனம் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. டிஜிட்டல் புத்தாக்கங்கள், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் விரைவான உரிமை கோரிக்கை தீர்வு ஆகியவற்றில் அவர்களின் தலைமைத்துவம், இலங்கையின் காப்புறுதித் துறைக்கு இன்றியமையாத பங்களிப்பாக அமைகிறது. நாடு தழுவிய ரீதியில் உயர்தரக் காப்புறுதித் தீர்வுகளைக் கொண்டு சேர்ப்பதற்கான அவர்களின் முயற்சிக்கும், தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் எமது ஆதரவை வழங்குவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

இதனிடையே, OP Pohjola Asset Management நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Tuomas Virtala கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையிலும், காலப்போக்கில் இப்பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளிலும் டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிக்கவும், காப்புறுதிச் சேவைகளின் நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்தவுமே ‘OP Finnfund Global Impact Fund I’, Softlogic Life நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துவது எமது முதலீட்டு மூலோபாயத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். அந்த வகையில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் மக்களுக்கும் காப்புறுதித் திட்டங்கள் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்ய Softlogic Life நிறுவனத்துடன் இணைந்து செயற்படுவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

Softlogic Life நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் இஃப்திகார் அஹமட் கருத்து தெரிவிக்கையில், “எமது வளர்ச்சிப் பயணத்தின் ஒரு முக்கிய காலகட்டத்தில் கிடைத்துள்ள இந்த நிதியுதவி, எமது ‘Tier 2’ மூலதனக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துகிறது. சவால்கள் நிறைந்த உலகளாவிய பொருளாதாரச் சூழலிலும், எமது நிலையான நிதிச் செயல்பாடு மற்றும் சீரான நிதிக் கொள்கை காரணமாக சர்வதேச நீண்டகால மூலதனத்தை ஈர்க்க முடிந்துள்ளது. Norfund மற்றும் OP Finnfund Global Impact Fund I உடனான இந்த கூட்டாண்மை, எமது நிறுவனத்தின் அடிப்படை வலிமை மற்றும் பொறுப்பான வளர்ச்சியை எட்டும் திறன் மீதான ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இது எமது விரிவாக்கத் திட்டங்களை வலுசேர்ப்பதுடன், இலங்கைக் குடும்பங்களுக்கு நீண்டகால பயன்களை வழங்கும் காப்புறுதித் தீர்வுகளைக் கொண்டு செல்வதற்கான எமது திறனையும் மேம்படுத்துகிறது.” என்றார்.

சர்வதேச அரங்கில் Softlogic Life நிறுவனம் தொடர்ச்சியாகப் புதிய மைல்கற்களை எட்டி வருகின்றது. 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற 29ஆவது ஆசியக் காப்புறுதித் துறை விருதுகளில் (AIIA), ‘ஆண்டின் சிறந்த செயற்கை நுண்ணறிவு முயற்சி’ (AI Initiative of the Year) விருதை வென்றுள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டு இத்தகைய கௌரவத்தைப் பெற்ற ஒரே இலங்கைக் காப்புறுதி நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. Asia Insurance Review அமைப்பினால் நடத்தப்படும் இவ்விருது விழா, ஆசியப் பிராந்தியத்தில் காப்புறுதித் துறையினருக்கு வழங்கப்படும் மிகவும் மதிப்பிற்குரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. ஆசியாவின் முன்னணி காப்புறுதி நிறுவனங்களான AIA Group, Prudential Vietnam, Allianz Malaysia, Nan Shan Life Taiwan, New China Life Insurance போன்ற முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிட்டு, சர்வதேச நிபுணர் குழுவின் கடுமையான மதிப்பீடுகளுக்கு மத்தியிலேயே Softlogic Life இந்த விருதை வென்றுள்ளது. இது காப்புறுதித் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்நிறுவனம் கொண்டுள்ள புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவத்தை மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.

இந்த விருது Softlogic Life நிறுவனம் தனது செயல்பாடுகள் அனைத்திலும் AI முன்னோடியாகப் பயன்படுத்துவதற்குக் கிடைத்துள்ள கௌரவமாகும். குறிப்பாக, அறிவுசார் காப்புறுதி மதிப்பீடுகள், இடர் மேலாண்மை மாதிரிகள், தானியங்கி முறையில் உரிமை கோரிக்கைகளை நிறைவேற்றுதல் மற்றும் வாடிக்கையாளர்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை வழங்குதல் போன்றவற்றில் AI தொழில்நுட்பத்தை இந்நிறுவனம் சிறப்பாகக் கையாண்டுள்ளது. இத்தகைய நவீன கண்டுபிடிப்புகள் காப்புறுதித் துறையில் புதிய தர அடையாளங்களை உருவாக்கியுள்ளதுடன், இலங்கையில் ஆயுள் காப்புறுதி எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது, வழங்கப்படுகிறது மற்றும் அனுபவிக்கப்படுகிறது என்பதை இலங்கையில் மறுவரையறை செய்வதே Softlogic Life நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வை என்பதை இச்சாதனை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

Norfund மற்றும் OP Finnfund Global Impact Fund I ஆகிய நிறுவனங்களிடமிருந்து கிடைத்துள்ள இந்த நிதியுதவியானது, Softlogic Life நிறுவனத்தின் மூலதன நிலையை மேலும் பலப்படுத்துவதுடன், நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பட்ட சேவை வழங்கல் போன்ற நீண்டகால மூலோபாயத் திட்டங்களுக்குப் பக்கபலமாக அமையும். இலங்கையின் அதிவேகமாக வளர்ந்து வரும் காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றான Softlogic Life, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியங்களில் உள்ள மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு வலுவான காப்புறுதிக் கட்டமைப்பை உருவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது.

ஊடகத் தொடர்புகளுக்கு: யசித் அமரசிங்க – [email protected]

பரீட்சை தயாரிப்பு முதல் தொழில் தேர்வு...
Sri Lanka’s apparel exports grow...
TikTok 2025 තෙවන කාර්තුවේ ප්‍රජා...
Softlogic Life நிறுவனத்தின் புதிய வளர்ச்சிப்...
අටාලේ ශ්‍රී ලංකාවේ විශාලතම රබර්...
2025 மூன்றாம் காலாண்டில் 20 கோடிக்கும்...
கொழும்பில் நடைபெற்ற விசேட மாநாட்டில், தனது...
CINEC Celebrates 1,800 Graduates and...
2025 மூன்றாம் காலாண்டில் 20 கோடிக்கும்...
கொழும்பில் நடைபெற்ற விசேட மாநாட்டில், தனது...
CINEC Celebrates 1,800 Graduates and...
Sunshine Holdings to Acquire 75%...