காப்புறுதித் துறையில் முன்னணி நாமமும் JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தக நாமமுமான ஜனசக்தி லைஃப், டிசம்பர் 2025இல் முடிவடைந்த ஆண்டில் வலுவான நிதிப் பெறுபேறுகளை அறிவித்துள்ளது. இதன் போது புதிய வணிகம் 67% வளர்ச்சியையும் மொத்த எழுதப்பட்ட பிரீமியங்கள் 31% வளர்ச்சியுடன் ரூ.8.65 பில்லியனையும் பதிவு செய்துள்ளன. இப் பெறுபேறுகள், உள்ளூர் காப்புறுதித் துறையில் நிறுவனம் வேகமாக வளர்ந்து வருவதை தெளிவாகக் காட்டுகிறது.
மேலும் நிறுவனம், வரிக்கு முன்னரான இலாபமாக ரூ.3.95 பில்லியனையும் வரிக்குப் பின்னரான நிகர இலாபமாக ரூ.3.42 பில்லியனையும் பதிவு செய்து வலுவான மொத்த இலாப செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இது உறுதியான காப்பீட்டு செயல்முறைகள், விவேகமான நிர்வாகம் மற்றும் தொழிற்பாட்டு செயல்முறைகளின் திறமையான மறுசீரமைப்பு ஆகியவற்றின் பலனை பிரதிபலிக்கின்றன. 2025ஆம் ஆண்டில் நிறுவனம், அதன் சேவை வழிகளை விரிவுபடுத்தியதுடன் டிஜிட்டல் மயமாக்கலிலும் கவனம் செலுத்தியது.
நிறுவனத்தின் மொத்த சொத்துக்கள் 6% ஆல் அதிகரித்து ரூ.40.3 பில்லியனாக உயர்ந்தது. இது நிறுவனத்தின் நிதியறிக்கைகளை வலுப்படுத்தி எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான நிதித் தளத்தை உருவாக்கியுள்ளது. 2025ஆம் ஆண்டில், உரிமைகோரல்கள் மற்றும் பிரதிபலன்கள் ரூ.3.6 பில்லியனாக உயர்ந்தமை காப்புறுதிதாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் ஜனசக்தி லைஃப்பின் உறுதியான பொறுப்புணர்வை பிரதிபலிக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் தலைவர் அன்னிகா சேனாநாயக்க, “2025இன் நிதி செயல்திறன் ஜனசக்தி லைஃப்பின் வலுவான மூலோபாய நிலைப்படுத்தலையும் நெறிமுறையான நிதி முகாமைத்துவத்தையும் பிரதிபலிக்கிறது. நிலையான பிரீமியம் வளர்ச்சி, வலுவான இலாபம் மற்றும் சொத்து விரிவாக்கம் ஆகியவை நன்கு மூலதனமாக்கப்பட்ட வணிகத்தை பராமரிக்கும் அதே வேளை நீண்டகால மதிப்பை உருவாக்கும் திறனை வெளிப்படுத்துகின்றன.” என்றார்.
செயல்பாட்டு திறன் குறித்து கருத்து தெரிவித்த ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே, “2025 ஆம் ஆண்டின் வளர்ச்சி, சேவை வழிமுறைகளில் செயலாக்கம், சேவைப் புத்தாக்கம் மற்றும் சேவைத் தொகுப்பு முகாமைத்துவத்தில் செலுத்தப்பட்ட கவனத்தின் விளைவாக ஏற்பட்டதாகும். புதிய வணிகங்களில் காணப்படும் வலுவான வளர்ச்சியும், தொடர்ந்து நிலைத்த இலாபத்தன்மையும், பொறுப்புடன் திட்டமிட்டு செயல்படும் எங்கள் செயல்முறை வலிமையை வெளிப்படுத்துவதுடன், வாடிக்கையாளர்களுக்கு மேலும் உயர்ந்த மதிப்பை வழங்கும் எங்கள் திறனையும் காட்டுகின்றன.” என்றார்.
ஜனசக்தி லைஃப் முன்னோக்கி நகரும் வேளையில், நிறுவனம் சந்தை பரப்பை விரிவுபடுத்துவதிலும், மூலதன செயல்திறனை மேலும் வலுப்படுத்துவதிலும், வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான காப்புறுதி தீர்வுகளை வழங்குவதிலும் கவனம் செலுத்துகிறது. JXG (ஜனசக்தி குழுமம்) வழங்கும் வலுவான ஆதரவும், தெளிவான வளர்ச்சி திட்டமும் ஜனசக்தி லைஃப் இன் தற்போதைய முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தி எதிர்வரும் காலங்களில் நிலையான செயல்திறனை முன்னெடுக்க தயாராக உள்ளது.” என ரவி லியனகே மேலும் தெரிவித்தார்.
ஜனசக்தி லைஃப் பற்றி
1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃப்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவர் மத்தியில் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் உரிமம் பெற்றுள்ளது. இது நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.





