Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின் முதல் படியாக கொழும்பில் தடம் பதிக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற “Charcoal” உணவகம்

Share

Share

Share

Share

பெங்கொக்கை தளமாகக் கொண்ட சர்வதேச விருந்தோம்பல் குழுமம், தனது புரட்சிகரமான Charcoal Tandoor Fire Grill உணவகத்தை அறிமுகப்படுத்த இலங்கையைத் தேர்ந்தெடுத்துள்ளது.

கொழும்பு, 2026 பெப்ரவரி 06: தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி ஒருங்கிணைந்த விருந்தோம்பல் மற்றும் வடிவமைப்பு குழுமமான சோஹோ ஹாஸ்பிடாலிட்டி (Soho Hospitality), சர்வதேச அளவில் புகழ்பெற்ற தனது ‘சார்க்கோல் தண்டூர் ஃபயர் கிரில்’ (Charcoal Tandoor Fire Grill) உணவகத்தை இந்த ஆண்டின் இறுதியில் கொழும்பில் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் பிராந்திய விஸ்தரிப்புத் திட்டத்தில் இந்த புதிய உணவகத்தின் அங்குரார்ப்பணம் ஒரு முக்கிய மூலோபாய மைல்கல்லாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

2014 ஆம் ஆண்டு பெங்கொக்கில் ஆரம்பிக்கப்பட்ட Charcoal உணவகம், அந்த நகரின் மிகவும் தனித்துவமான இந்திய உணவுத் தலங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இது அதன் சுவையான உணவுகளுக்கு மாத்திரமன்றி, பாரம்பரிய சமையல் கலையை நவீன மற்றும் கலைநயம் மிக்க அனுபவமாக மாற்றும் தனித்துவமான திறனுக்காகவும் சர்வதேச ரீதியில் பெயர்பெற்றது. கடந்த ஒரு தசாப்த காலமாக, உள்நாட்டு மற்றும் சர்வதேச உணவுப் பிரியர்களிடையே ஒரு விசுவாசமான வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்கியுள்ள இவ்வுணவகம், பெங்கொக்கின் போட்டித்தன்மை மிக்க உயர்தர உணவகத் துறையில் ஒரு முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வாசனைப்பாதை’ (Spice Route) வர்த்தக வரலாற்றையே Charcoal உணவகம் தனது அடிப்படைத் தத்துவமாகக் கொண்டுள்ளது. அக்காலத்தில் இந்தியாவுக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பரிமாற்றங்கள் இப்பிராந்தியத்தின் சுவைகள், கலாசாரம் மற்றும் வணிகத்தில் ஏற்படுத்திய ஆழமான தாக்கங்களை இது பிரதிபலிக்கிறது. வட இந்திய தண்டூர் சமையல் முறையின் விறுவிறுப்பையும், மொகாலாய உணவு வகைகளின் செழுமையையும் நேர்த்தியையும் ஒருங்கே கொண்டதாக இதன் உணவுப் பட்டியல் அமைகிறது. நேரடித் தீ (Live fire), மெதுவான சமையல் நுட்பங்கள் (Slow cooking) மற்றும் பக்குவமாகச் சேர்க்கப்படும் வாசனைத் திரவியக் கலவைகள் ஆகியன இவ்வர்த்தக நாமத்தின் தனித்துவமான சமையல் அடையாளத்தை (Culinary identity) வரையறுக்கின்றன. இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நேர்த்தியான மற்றும் மறக்க முடியாத சுவை அனுபவத்தை வழங்குகின்றது.

கொழும்பு, யூனியன் பிளேஸில் அமைந்துள்ள புகழ்பெற்ற கேபிடல் ட்வின் பீக்ஸ் (Capitol Twin Peaks) கட்டிடத்தின் 50 ஆவது மாடியில் ‘சார்க்கோல் தண்டூர் ஃபயர் கிரில்’ (Charcoal Tandoor Fire Grill) உணவகம் அமையவுள்ளது. சுமார் 600 அடி உயரத்தில் அமைந்துள்ள இலங்கையின் மிக உயரமான ‘ஸ்கை பிரிட்ஜ்’ (Sky bridge) பகுதியில் இருந்து கொழும்பு நகரின் எழில்மிகு காட்சிகளை ஒருங்கே ரசித்தபடி, வாடிக்கையாளர்கள் இங்கு ஒரு உயர்தர உணவு அனுபவத்தைப் பெற முடியும். நெருப்பு, சுவை மற்றும் ரம்மியமான சூழல் ஆகியவற்றின் அபூர்வ சங்கமமாகத் திகழும் இவ்வுணவகம், தலைநகரின் பிரமிக்கத்தக்க பின்னணியில் ஒரு உன்னதமான கிரில் உணவுப் பயணத்தை (Elevated grill experience) வழங்குகின்றது. உணவுப் பிரியர்களுக்கு மட்டுமன்றி, புதிய அனுபவங்களைத் தேடிச் செல்பவர்களுக்கும் இது ஒரு சிறந்த இடமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

தெற்காசியாவில் தனது முதலாவது கிளையை ஆரம்பிப்பதற்கு இலங்கையைத் தேர்ந்தெடுத்தமையானது, Charcoal நிறுவனத்தின் முறையான மற்றும் தரவு அடிப்படையிலான ஒரு மூலோபாயத் திட்டமிடலாகும். கொழும்பு நுகர்வோரின் வளர்ந்து வரும் ரசனை மற்றும் தேர்ச்சி, முதலீட்டாளர்களின் மீள் நம்பிக்கை மற்றும் பிராந்திய சுற்றுலா மற்றும் நவீன வாழ்க்கை முறைகளுக்கான ஒரு முக்கிய மையமாக கொழும்பு உருவெடுத்து வருகின்றமை ஆகியன இந்த விரிவாக்கத் தீர்மானத்தின் முக்கிய காரணிகளாகும். தெற்காசியா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய பிராந்தியங்களை இணைக்கும் ஒரு முக்கிய சந்திப்பு மையமாக கொழும்பு திகழ்வதால், Charcoal உணவகத்தின் ‘வாசனைப்பாதை’ (Spice Route) வரலாற்றுப் பின்னணிக்கு இது கலாசார மற்றும் வணிக ரீதியாக ஒரு இயல்பான விரிவாக்கமாக அமைகின்றது.

இந்த விரிவாக்கம் குறித்து Soho Hospitality நிறுவனத்தின் ஸ்தாபகரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரோஹித் சச்தேவ் கருத்துத் தெரிவிக்கையில், “Charcoal வர்த்தக நாமம் என்பது எப்போதும் பாரம்பரியம், சுவைகள், கருத்துக்கள் மற்றும் அனுபவங்களின் பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வர்த்தக நாமம் ஆகும். தாய்லாந்திற்கு வெளியே எமது அடுத்தகட்ட விரிவாக்கத்திற்கு இலங்கை ஒரு இயல்பான தெரிவாக அமைந்தது. கொழும்பு நகரின் சுற்றுலாத்துறை வளர்ச்சி மற்றும் அங்குள்ள வாடிக்கையாளரின் உயரிய ரசனை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, நீண்டகால நோக்கில் கொழும்பு ஒரு வலுவான சந்தையாகத் திகழ்வதை நாம் காண்கிறோம். எமது இந்த விரிவாக்கமானது வெறும் வேகமான வளர்ச்சியை மாத்திரம் நோக்கமாகக் கொண்டது அல்ல. மாறாக, சரியான நேரத்தில், சரியான சந்தையில், எமது தனித்துவமான எண்ணக்கருவை அறிமுகப்படுத்துவதே எமது முக்கிய நோக்கமாகும்.” எனத் தெரிவித்தார்.

Charcoal உணவகத்தின் நற்பெயரானது சர்வதேச அளவிலான அங்கீகாரங்கள் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற ‘Wallpaper’* மற்றும் ‘The Boston Globe’ போன்ற இதழ்களில் இவ்வுணவகம் பற்றிய சிறப்புக் குறிப்புகள் வெளியாகியுள்ளன. அத்துடன், தாய்லாந்தில் பொழுதுபோக்கு உட்புற வடிவமைப்பிற்கான (Leisure interiors) ஆசிய பசிபிக் சொத்து விருதினையும் (Asia Pacific Property Award) இது சுவீகரித்துள்ளது. இந்த விருதுகளும் பாராட்டுகளும், உணவின் அசல் சுவை மற்றும் நுணுக்கமான வடிவமைப்பு ஆகியவற்றை ஒருங்கே வழங்குவதில் இவ்வர்த்தக நாமம் கொண்டுள்ள திறமையை பறைசாற்றுகின்றன. இத்தகைய ஆழமான அனுபவம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பே Soho Hospitality நிறுவனத்தின் அனைத்துத் திட்டங்களினதும் அடையாளச் சின்னங்களாகத் திகழ்கின்றன.

கொழும்பில் அமையவுள்ள Charcoal உணவகமானது, பெங்கொக்கில் உள்ள அதன் பிரதான கிளையைப் போலவே வடிவமைப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் (Design-first sensibility) நுட்பமான கலைநயத்துடன் உருவாக்கப்படவுள்ளது. வரவிருக்கும் இந்த உணவகம், பாரம்பரிய இந்திய கட்டிடக்கலை அம்சங்களையும், நவீன இடவமைப்பு வடிவமைப்பையும் மிக நேர்த்தியாக ஒன்றிணைக்கவுள்ளது.

இதன் மூலம், ஒரு சாதாரண உணவகம் என்பதற்கு அப்பால், வாடிக்கையாளர்களுக்கு ஒரு உயர்தர அனுபவத்தை வழங்கும் தனித்துவமான தளமாக இது தன்னை அடையாளப்படுத்தும். உணவகம் திறக்கப்படும் திகதி மற்றும் அது தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்த ஆரம்பகட்ட அறிவிப்பின் ஊடாக, Soho Hospitality நிறுவனம் தாய்லாந்துக்கு வெளியே சர்வதேச அளவில் தனது கால்தடத்தைப் பதிப்பதற்கான ஒரு தெளிவான சமிக்ஞையை வழங்கியுள்ளது. தனது உலகளாவிய வளர்ச்சியில் மிகவும் நுணுக்கமாகவும், மூலோபாய ரீதியாகவும் செயல்படுவதில் நிறுவனம் அதிக அக்கறை காட்டுகின்றது. இலங்கையில் Charcoal உணவகத்தின் வருகையானது, இந்த சர்வதேசப் பயணத்தின் முதலாவது அத்தியாயமாக அமைகிறது. ஏற்கனவே வெற்றிபெற்ற ஒரு வர்த்தக நாமம், தெளிவான நோக்கு மற்றும் தரம், கலைநயம் மற்றும் நீண்டகால தொலைநோக்குப் பார்வை கொண்ட சந்தைகள் மீது நிறுவனம் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை இந்த விரிவாக்கம் பிரதிபலிக்கிறது.

AHRP’s Elevate U continues to...
#BleedGood හරහා ඔසප් දරිද්‍රතාවයට එරෙහිව...
Cyril Rodrigo’s by Green Cabin...
HNB Finance PLC crosses Rs....
Soho Hospitality இன் தெற்காசிய விரிவாக்கத்தின்...
Cinnamon Life at City of...
MAS Foundation for Change පිරිසිදු...
අභිමානවත් ශ්‍රී ලාංකේය අනන්‍යතාව සමඟින්...
Cinnamon Life at City of...
MAS Foundation for Change පිරිසිදු...
අභිමානවත් ශ්‍රී ලාංකේය අනන්‍යතාව සමඟින්...
Galaxy Unpacked 2026: The Next...